மூப்படைந்து கொண்டிருக்கும் மக்கள்தொகை
நமது நாடு உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதும், நமது மக்கள்தொகையில் பாதி பேர் இருபத்தைந்து வயதைக்கூட எட்டாத இளம் பருவத்தினர் என்பதும் அனைவரும் அறிந்த விவரங்கள்.
ஆனால், இப்படி இளமையான மக்கள் தொகையைக் கொண்ட நமது நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதும், உலகிலுள்ள பத்து முதியோர்களில் ஒருவர் நமது நாட்டில் உள்ளனர் என்பதும் பலருக்குத் தெரியாத விவரங்கள்.
1991-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின் பொழுது மொத்த மக்கள்தொகையில் 6.8 விழுக்காடாக இருந்த அறுபது வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 2001-ஆம் ஆண்டு 7.4 விழுக்காடாக அதிகரித்து, 2011-ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடு என்ற இலக்கை எட்டியுள்ளது.
முதியோர்களின் நலனுக்காகப் பாடுபடும் ஹெல்ப்பேஜ் இந்தியா (ஏங்ப்ல்ஹஞ்ங் ஐய்க்ண்ஹ) எனும் தொண்டு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2050-ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டு மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு, 20 விழுக்காடாக ஆகிவிடும் என்றும், தற்பொழுது 10 கோடியாக இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்து 32.4 கோடியாக ஆகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் நமது மக்கள் தொகை மூப்படைந்த மக்கள்தொகை (ஹஞ்ண்ய்ஞ் ல்ர்ல்ன்ப்ஹற்ண்ர்ய்) என்று கருதப்படும் நிலையை அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கெனவே அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்து விட்டன.
நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருவதும், மருத்துவத் துறையின் முன்னேற்றத்தின் காரணமாக மக்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக் கொண்டு வருவதுமே வயதானவர்களின் எண்ணிக்கை விழுக்காடு கூடிக்கொண்டு போவதற்கான காரணங்கள். கடந்த பத்தாண்டுகளில், 62 ஆண்டுகளாகயிருந்த ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 67-ஆகவும், 64-ஆக இருந்த பெண்களின் ஆயுள்காலம் கிட்டத்தட்ட 70 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஆண்களைவிடப் பெண்களே அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் என்பதனால், முதியோர்களில், பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அதனால், முதியோர்களின் பிரச்னை மகளிர் சம்பந்தப்பட்டப் பிரச்னை என்ற கோணத்திலும் அணுகப்படுகிறது. பெரும்பாலும் பிறரைச் சார்ந்தே வாழும் மகளிர் ஒரு விதவையாக, வயதான காலத்தில் எப்படிப்பட்ட கஷ்டங்களைச் சந்திப்பார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இப்படி அதிகரித்துக்கொண்டு போகும் முதியோர்களின் எண்ணிக்கையின் காரணமாக நமது நாடும், நமது குடும்பங்களும் பல சமூக மற்றும் பொருளாதார சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 15-லிருந்து 59 வயது வரையில் உள்ளவர்கள் உழைக்கும் மக்கள் என்றும், 0-14 வயது வரையில் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியோர்களும் உழைக்கும் மக்களைச் சார்ந்து, அதாவது அவர்கள் ஈட்டும் வருவாயைச் சார்ந்து வாழும் மக்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.
தற்பொழுது நமது நாட்டில் அறுபது வயதிற்கு மேலுள்ளவர்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டு போகிறது என்பதனால் பொருளாதார ரீதியாக நாட்டின் உழைக்கும் சமுதாயத்தின் மேலுள்ள சுமை கூடிக்கொண்டு போகிறது. உடல்நல பாதிப்பு, பணத் தட்டுப்பாடு மற்றும் இவற்றின் காரணமாக ஏற்படும் பாதுகாப்பின்மை ஆகியன வயது காலத்தில் முதியோர்கள் சந்திக்கும் தலையாயப் பிரச்னைகள்.
அல்சீமர் எனப்படும் மறதி நோய், பார்கின்சன், பார்வை கோளாறு, மூட்டுவலி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, புற்று நோய் போன்ற நோய்களின் பாதிப்புகளுக்கு முதியோர்கள் ஆளாகிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்துள்ள மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையிலிருந்து, நமது நாட்டு முதியோர்களில் பலர் தீராத வியாதியினால் அவதிப்படுகிறார்கள் என்றும், அறுபது வயதைத் தாண்டியவர்களில் எட்டு விழுக்காடு பேர்களும், எண்பது வயதைத் தாண்டியவர்களில் முப்பது விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்ளும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் அல்லது படுத்த படுக்கையாக உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.
முதியோர்களின் உடல்நலனைக் கவனிப்பதற்காக நமது அரசு ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் எங்ழ்ண்ஹற்ழ்ண்ஸ்ரீள் எனப்படும் முதியோர் மருத்துவப் பிரிவு ஒன்று இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், எல்லா அரசு மருத்துவமனைகளிலும் முதியோர் மருத்துவப் பிரிவுகள் உள்ளனவா, அவை சரியானபடி இயங்குகின்றனவா, எந்த அளவிற்கு அவை முதியோர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று தெரியவில்லை.
பொருளாதார ரீதியாகப் பிறரைச் சார்ந்து வாழும் முதியோர்களில் எத்தனை பேர் தனியார் மருத்துவ வசதிகளை நாட முடியும்? தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, பெரும்பாலான முதியோர் பொருளாதார ரீதியாக முழுமையாக அல்லது பெருமளவிற்குப் பிறரைச் சார்ந்தே, குறிப்பாக தங்களது பிள்ளைகளைச் சார்ந்தே வாழவேண்டிய நிலைமையில் உள்ளார்கள்.
அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு சிலர் மட்டுமே ஓய்வூதியம், வைப்பு நிதி போன்ற பயன்களைப் பெறுகிறார்கள்.
அமைப்புச் சாராப் பணிகளில் வேலை செய்து ஒருவிதமான ஓய்வுப் பயன்களையும் பெறாத முதியோர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதே. ஒரு காலத்தில் பெற்றோர்களைப் பிள்ளைகள் குடும்பத் தலைவர்களாகப் பாவித்து அவர்களுக்கு உரிய மரியாதையையும் அந்தஸ்தையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுப் பெரியவர்களைக் கலந்தாலோசித்து குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆனால், கூட்டுக் குடும்பங்கள் குலைந்து போன பிறகு, பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோர்களை பாரமாகத்தான் நினைக்கிறார்கள். அதுவும் குறைந்த வருமானம் உள்ள பிள்ளைகள் தங்கள் குடும்பச் செலவைச் சமாளிப்பதற்கே திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பெற்றோர்களுக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டு கவனித்துக் கொண்டாலே அதிகம்.
வயதான காலத்தில் பொருளாதார ரீதியாகப் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் பெற்றோருக்கு, பெரும்பாலும் சரியான உணவு, மருத்துவ உதவி போன்றவை கிடைப்பதில்லை.
பணம், காசு இல்லாத முதியோர்களின் நிலைமை இப்படி என்றால், ஓரளவு சொத்து உள்ள முதியோர்களை, அவர்களின் பிள்ளைகள் தங்களுக்குச் சொத்தை எழுதிக் கொடுக்குமாறு துன்புறுத்திக் கொண்டிருப்பது சகஜம்.
ஒன்றிற்கு அதிகமானப் பிள்ளைகள் இருந்தால் அதில் யார் பெற்றோர்களை கவனித்துக் கொள்வது என்பதில் சண்டை சச்சரவிற்கும் குறைவில்லை. ஹெல்ப்பேஜ் இந்தியா நடத்திய முதியோர்களின் நிலைமை பற்றிய ஆய்வின்படி, எண்பது வயதைத் தாண்டிய முதியோர்களில் பலரும் மகன்-மருமகள்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும், ஏன் அடிக்குக் கூட ஆளாகிறார்கள் என்று தெரிய வருகிறது.
ஓரளவு வசதியுள்ள குடும்பங்களில் கூட முதியோர்கள் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உள ரீதியானப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். முதியோர்களை மதித்து அவர்களிடம் பேசுவதற்கோ அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கோ யாருக்கும் நேரமில்லை. வீட்டிற்குள்ளேயே அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.
வெளிநாட்டில் குடியேறிவிட்ட பிள்ளைகளின் பெற்றோர்களின் பாடு அதை விடக் கொடுமையானது. ஒரு காலத்தில் தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள் என்று பெருமிதம் கொண்ட பெற்றோர்கள், வயது ஆக ஆக, தாங்களும் வெளிநாட்டில் குடியேற முடியாத நிலையில், பிள்ளைகள் அருகில் இல்லாத கஷ்டத்தை உணர்கிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்கள் ஒரு நல்ல வணிகமாகத் தழைத்தோங்குகிறது என்றால், அதற்கு உறுதுணையாக இருப்பது வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர்கள் தான்.
வேண்டாத தனது தாயையோ தந்தையையோ பிள்ளைகள் வேண்டுமென்றே கும்ப மேளாக்களில் தொலைத்து விட்டு வருவதைக் கேள்வியுறும் பொழுதும், பூரி ஜெகன்நாத் போன்ற கோவில்களில், கிடைக்கும் பிரசாதத்தை மதிய உணவாக உட்கொண்டு நாதியற்றுக் கிடக்கும் தள்ளாத வயதினரைக் காணும் பொழுதும், நம் நெஞ்சம் துடிக்கிறது.
முதியோர்கள் தங்கள் கடைசி காலத்தில் மதிப்புடனும், தன்மானத்துடனும், ஓரளவு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. என்னதான் முதியோர் இல்லங்கள் தோன்றினாலும், முதியோர்களுக்கு தங்கள் கடைசி நாள்களை தங்கள் குடும்பத்துடன் கழிப்பதில் உள்ள நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது.
நமது நாட்டில் தொன்று தொட்டு குடும்பம் என்ற அமைப்பே முதியோர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கப்படும் குறைபாடுகள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆதரவளித்து அவர்களை அரவணைத்துச் சென்று கரையேற்றிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட குடும்பம் என்ற அமைப்பை எப்பாடுபட்டாவது வலுப்படுத்த நமது சமூகமும், அரசும் ஆவன செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.