எய்ம்ஸ் செவிலியர்கள் 2000 பேர் ஒரே நாளில் விடுப்பு: அவசர சிகிச்சை பிரிவு முடங்கியது; நோயாளிகள் அவதி
நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் செவிலியர்கள் 2000 பேர் இன்று ஒரே நாளில் விடுப்பு எடுத்தனர்.
7-வது ஊதியக் குழு பரிந்துரை பாரபட்சமாக இருப்பதாகக் கூறி தங்களுக்கு சம்பள உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவசர சிகிச்சைப் பிரிவு சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் விடுப்புப் போராட்டம் குறித்து எந்த முன்னறிவிப்பும் இல்லாததால் சிகிச்சைக்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த புறநோயாளிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
"ஏற்கெனவே மருத்துவமனையின் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு முடிந்த அளவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பணிகளில் சுணக்கம் இருக்கிறது" என மருத்துவமனை நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் செவிலியர் கூட்டமைப்பின் தலைவர் ஹரிஷ் குமார் காஜ்லா கூறும்போது, "எங்கள் கோரிக்கைகள் ஒன்றும் புதிதானவை அல்ல. எங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக்கோரி பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்திவிட்டோம். அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக ஒவ்வொருமுறையும் வாக்குறுதி அளிக்கிறார்களே தவிர செயல்பாடு எதுவும் இல்லை. இன்றைய விடுப்புப் போராட்டத்துக்கு எய்ம்ஸ் நிர்வாகம்தான் காரணம். இன்னமும், எங்கள் கோரிக்கைக்கு நிர்வாகம் செவி சாய்க்காவிட்டால் மார்ச் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
அவர் மேலும் கூறும்போது, "7-வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சீர் செய்யப்பட வேண்டும். செவிலியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.4,600-ல் இருந்து ரூ.5,400-ஆக உயர்த்தப்பட வேண்டும். அதேபோல், செவிலியர்களுக்கான படிக்காசு ரூ.7,800-ஆக உயர்த்தப்பட வேண்டும். இரவு நேரம் பணி புரிவதற்காக மற்ற அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதுபோல் எங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்" இவையே எங்கள் முக்கிய கோரிக்கைகள் என்றார்.
விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் ஒருவர் கூறும்போது, "மருத்துவர்களைப் போல் நாங்களும் (நோய்த் தொற்று ஏற்படும்) ஆபத்தான சூழலில் தொடர்ச்சியாக பலமணி நேரம் வேலை பார்க்கிறோம். ஆனால், எங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. இரண்டாம் நிலையில்தான் நாங்கள் நிறுத்தப்படுகிறோம். இது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது" என்றார்.