சென்னை : லேட்டஸ்ட் சினிமா பிரபலங்களை வைத்து லட்சக்கணக்கில் விளம்பரத்திற்காக செலவு செய்யும் தி சென்னை சில்க்ஸ் தீ விபத்து தடுக்கும் பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விட்டதே விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
மனசுக்கு புடிச்ச ஷாப்பிங்னா அது சென்னை சில்க்ஸ் தான் என்று லேட்டஸ்ட் சினிமா நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து லட்சக்கணக்கில் விளம்பரம் செய்திருந்தது. கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல ஸ்ரீவித்யா, காஜல் அகர்வால் என்று பணத்தை கொட்டிக் கொடுத்து விளம்பரம் செய்வதை மற்ற ஜவுளிக்கடைகளுக்கு போட்டியாக தி சென்னை சில்க்ஸ்ம் போட்டி போட்டு செய்யும்.
ஆனால் வாடிக்கையாளர்களை ஈர்க்க இத்தனை பணச்செலவில் விளம்பரம் செய்த நிறுவனம், தனது கட்டிடத்திற்கான அடிப்படை பாதுகாப்பு அம்சங்களில் கோட்டை விட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மின்கசிவு காரணமாக காலை 4.30 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ஒரு தளத்திற்குள் இன்னொரு தளம் லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகள் கொண்ட தி சென்னை சில்க்ஸ் கட்டிடம் கனம் குறைவான அதாவது ஹாலோ பிரிக்ஸ் என்று சொல்லப்படும் கற்களைவிட வெயிட் குறைவான மெலிதான கல்லில் கட்டப்பட்டுள்ளதாம். மேலும் ஒவ்வொரு தளத்திலும் செய்யப்பட்டுள்ள ஃபால்ஸ் சீலிங்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்டுள்ளதால் தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிகிறதாம்.
தி.நகரில் உள்ள கடைகளின் விதிமீறல்கள் ஒவ்வொரு தீ விபத்தின் போது ஓங்கி ஒலிப்பது ஒன்றும் புதிதல்ல. அதே போன்று இந்த சென்னை சில்க்ஸ் கட்டிடமும் இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் விடப்படும் இடைவெளி குறித்த விதிகளை பின்பற்றவேயில்லையாம். மேலும் விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் சென்று வர முன், பின்புற வாசல்களில் செய்யும் வசதிகளும் இல்லாததோடு விதிமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் வகையில் அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாம்.
இதெல்லாம் கூட பரவாயில்லங்க, ஆனால் ஒரு கட்டிடம் தீ பிடிச்சா உடனே அணைந்து போகிற மாதிரி தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் சிறு சிறு பைப்புகள் ஒவ்வொரு தளத்திலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பொருத்தப்பட்டிருக்கும். அதெல்லாம் கடையில் உள்ளதாம் ஆனால் அந்த பைப்புல தண்ணி தான் இல்லையாம், இதுவும் தீ விபத்து மேலும் உக்கிரமடையக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்தக் கடைக்காரங்க செஞ்சதை பார்த்தா தில் படத்துல விவேக் சொன்ன காமெடி தான் நினைவுக்கு வருது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை ஜாலி ஷாப்பிங்னு சொல்றதால தான உங்க கடைக்கு வர்றோம். ஆனா நீங்களே இப்படி சொதப்பினா எப்படிங்க. தீ விபத்து அதிகாலையில நடந்ததால வாடிக்கையாளர்கள் தப்பிச்சாங்க, இல்லாட்டி எத்தனை உயிர் பலிபோயிருக்குமோ. இனிமேலாவது வணிக நிறுவனங்கள் தீ தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அலட்சியம் இல்லாமல் இருக்குமா என்று தான் தெரியவில்லை.