Wednesday, May 31, 2017

தீயில் எரியும் சென்னை சில்க்ஸ்.. கொளுத்தும் வெயில்... கரண்ட் இல்லாமல் தவிக்கும் தி.நகர் மக்கள்!

சென்னை: தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புழுங்கும் அனலில் ஃபேன் கூட போட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸின் குமரன் தங்க மாளிகைக் கடையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தீப்பற்றியது. 7 அடுக்குகளை கொண்ட அந்த மாடியில் தரைத்தளத்தில் பற்றிய தீ மெல்ல மெல்ல மேல் தளங்களுக்கும் பற்றியது.

10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டிடம் அபாயகரத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. நவீன கருவிகள் மூலம் புகை வெளியே கொண்டுவரப்பட்டு வருகிறது.

தீ கட்டுப்படுத்த முடியாத அளவில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. கட்டட பகுதியில் உள்ள மக்கள் 100 மீட்டருக்கு அப்பால் வெளியேற்றப்படுகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீ எரிந்து வரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் சுவரை இடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கட்டடம் உள்ள பகுதியில் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்காரணமாக காலை முதலே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் ஏசி, ஃபேன் இல்லாமல் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

அருகில் உள்ள மற்ற வணிக நிறுவனங்களும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை வைத்து ஓட்டி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி நடைபாதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024