விறு விறு...!
25 ஆண்டுக்கு பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை...
அத்வானி மீது குற்றச்சாட்டு பதிவு; ஜாமினில் விடுவிப்பு
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை, மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது. சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட, ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், அனைவருக்கும் ஜாமின் அளித்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த, பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. மசூதியை இடித்ததாக, முகம் தெரியாத கரசேவகர்கள் மீதான வழக்கு, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி கோர்ட்டில் தனியாக வழக்கு நடந்தது. இந்த வழக்கில் இருந்து, அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
சதி திட்டம்
இதை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், 'இந்த வழக்கில், அத்வானி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும்' என, இந்த ஆண்டு ஏப்., 19ல் தீர்ப்பு அளித்தது.
மேலும், 'ரேபரேலியில் நடக்கும் வழக்கையும், லக்னோவுக்கு மாற்ற வேண்டும்;
இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வேண்டும்' என்றும், சுப்ரீம் கோர்ட், தன் தீர்ப்பில் கூறியிருந்தது. மசூதி இடிக்கப்பட்டபோது, உ.பி., முதல்வராக இருந்த, பா.ஜ., மூத்த தலைவர் கல்யாண் சிங், தற்போது ராஜஸ்தான் கவர்னராக உள்ளதால், அப்பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட பின், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், கோர்ட் கூறியுள்ளது. அதன்படி, லக்னோ கோர்ட்டில், இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.
சதித்திட்டம் தீட்டியது, மத ரீதியில் மோதலை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ஹிந்துத்துவா தலைவர்களான ராம்விலாஸ் வேதாந்தி, பைகுந்த் லால் சர்மா, சம்பட் ராய் பன்சால், மகந்த் நிருத்ய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஷ் பிரதான் ஆகியோர் மீது, சமீபத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இவர்கள் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், 'சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்' என, அத்வானி உள்ளிட்டோருக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இம்மாதம், 25, 26ம் தேதிகளில் ஆஜராகாததால், அவர்களுக்கு கோர்ட், கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
குற்றச்சாட்டுகள் பதிவு
அதைத் தொடர்ந்து, அத்வானி உள்ளிட்டோர், லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.தங்கள் மீதான வழக்கை கைவிட வேண்டுமென, அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி, எஸ்.கே.யாதவ் தள்ளுபடி செய்தார்.
சதித் திட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, 89; முரளி மனோகர் ஜோஷி, 83; மத்திய அமைச்சர் உமா பாரதி, 58; வினய் கட்டியார், 62; விஸ்வ ஹிந்து பரிஷத்தின் விஷ்ணு ஹரிடால்மியா, 88; சாத்வி ரிதாம்பரா, 53, ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை ஏற்ற நீதிபதி, தலா, 50 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமினில் அனைவரையும் விடுவித்தார். அத்வானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை, இனி விறுவிறுப்பாக நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அயோத்தி செல்கிறார் யோகி
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மீண்டும் பரபரப்பு காட்சிகள் துவங்கியுள்ள நிலையில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று, அயோத்திக்கு செல்கிறார். அங்கு தற்காலிக இடத்தில் அமைந்துள்ள ராமர் கோவிலில் வழிபட உள்ளார். ராமஜென்ம பூமி இயக்கத் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாசின் பிறந்த நாளையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
மீண்டு வருவர்
அத்வானி உள்ளிட்டோர் நிரபராதிகள்; அவர்கள், இந்த வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் என, விடுதலை ஆவர் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. பிரச்னை கோர்ட்டில் உள்ளதால், இதற்கு மேல் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
-வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர், பா.ஜ.,
உ.பி., முதல்வர் சந்திப்பு
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் நேற்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்தனர். அவர்களை, பா.ஜ., மூத்த நிர்வாகிகள், லக்னோ விமான நிலையத்தில் வரவேற்றனர். பா.ஜ., ஆளும் உ.பி., முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத், வி.ஐ.பி., விருந்தினர் மாளிகையில், அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment