Saturday, May 27, 2017

கர்ப்பிணிகளை 'கைலாசம்' அனுப்பும் மருத்துவமனை : சுகாதார மந்திரி சொந்த மாவட்டத்தில் அவலம்
பதிவு செய்த நாள்26மே2017 23:46

புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சரின், புதுக்கோட்டை மாவட்ட அரசு மகப்பேறு மருத்துவமனையில், கர்ப்பிணிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

புதுக்கோட்டை, ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், அனைத்து வசதிகளும் உள்ளன. புதுக்கோட்டை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்ட மக்களும், பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்படுவர். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால், பாதுகாப்பாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பையும், உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசு மருத்துவமனையாக இருந்தது. ஒரு மாதத்தில், 300 முதல், 500 குழந்தைகள் வரை பிறந்தன. ஆனால், இந்த மருத்துவமனையில், சில மாதங்களாக, கர்ப்பிணிகள் உயிரிழப்பு சர்வ சாதாரணமாகிவிட்டது. இம்மாத துவக்கத்தில், மழராயன்பட்டியைச் சேர்ந்த போதும்பொண்ணு, 27, பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டு இறந்தார். அடுத்த சில நாட்களில், மூன்று பெண்கள், பிரசவத்தின் போது இறந்தனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை மற்றும் சிகிச்சையில் அலட்சியம் காரணமாகவே, கர்ப்பிணிகள் உயிரிழப்பதாக, இறந்த பெண்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையின் நிலைமை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 'தொடரும் கர்ப்பிணிகள் மரணங்களை தடுக்கும் வகையில், அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்' என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024