Saturday, May 27, 2017

நிபுணத்துவ மருத்துவ படிப்புகள் அதிகரிப்பு!

பதிவு செய்த நாள்27மே2017 00:35

கோவை;இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அறிவிப்பை அடுத்து, சிறப்பு நிபுணத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க, கோவை அரசு மருத்துவ கல்லுாரி தகவல்களை அளித்துள்ளது.மருத்துவ படிப்புகளில் இருதயம், ரத்தம், மருந்து, புற்றுநோய் ஆகிய துறைகள் சிறப்பு நிபுணத்துவ படிப்புகளாக கருதப்படுகின்றன. இத்துறைகளில், முதுகலை படிப்புகள் படித்தவர்களுக்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இப்படிப்புகளுக்கான இடங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்து வருகின்றன.

இதைக்கருத்தில் கொண்டு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள சிறப்பு நிபுணத்துவ துறை முதுகலை படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கும் இடங்களை அதிகரிக்க தேவையான தகவல்களை வழங்க சுற்றறிக்கையை அனுப்பியது.இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், குழந்தைகள் நலம், நரம்பியல் துறையில் தலா இரண்டு இடங்கள் உயர்த்த அனுமதி கோரி தகவல்களை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், ''மத்திய அரசின் அறிவிப்பால் மருத்துவக் கல்லுாரிகள் பயனடைந்துள்ளன. இதன் மூலம் மருத்துவக் கல்லுாரிகளின் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, நோயாளிகளும் பயனடைவர். சிறப்பு நிபுணத்துவ படிப்புகளில் முதுகலை இடங்களை அதிகரிப்பதன் மூலம், அதிகளவு நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் கிடைப்பர்.

''தற்போது பணியில் உள்ள பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், துறையில் உள்ள நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை, நவீன கருவிகள் குறித்த தகவல்களை அனுப்பியுள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024