நகைகள் உருகின.. துணிகள் எரிந்தன!' - சென்னை சில்க்ஸ் தீயணைப்பு முயற்சி
சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடையில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நகைகள் உருகின, துணிகள் எரிந்தன. எட்டு மணி நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல், தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள குமரன் நகைக்கடை, சென்னை சில்க்ஸ் ஆகியவற்றில்... இன்று அதிகாலை 4 மணியளவில் தீ பிடித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அப்போதுதான், கடைக்குள் ஊழியர்கள் தங்கியிருக்கும் தகவல் தீயணைப்பு வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் ஊழியர்களை முதலில் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து தீயணைக்கும் பணி 8 மணி நேரமாக நடந்துவருவதாக, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை தி.நகரில் உள்ள நகை மற்றும் துணிக்கடையில் தீப்பிடித்த தகவல் எங்களுக்கு அதிகாலையில் கிடைத்ததும், உடனடியாக அங்கு சென்றோம். அப்போது, ஏழு மாடிக் கட்டடம் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. கடைக்குள் சில ஊழியர்கள் இருப்பதாகச் சொன்னதும் அவர்களை கிரேன் மூலம் பத்திரமாக மீட்டோம். துரிதமாகச் செயல்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது
கட்டடத்தில் எந்தப் பகுதியில் தீ பிடித்தது என்று தெரியவில்லை. மேல் பகுதி முழுவதும் புகை மூட்டம் அதிகமாக இருந்தது. தீ மள, மளவென ஒவ்வொரு தளமாகப் பரவியது. இதனால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்தோம். கிரேன், அருகில் உள்ள மேம்பாலம் மூலமாகவும் கட்டடத்துக்குள் தண்ணீர் அடிக்கப்பட்டது. இந்த நேரத்தில், தரைத் தளத்திலிருந்த நகைக்கடையில் இருந்த நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கின. இதனால், தீயை அணைப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. அதற்குள் துணிக்கடையிலும் குடோனிலும் தீ பரவியது.
தண்ணீர்மூலம் தீயை அணைப்பதைவிட, ரசாயனப் பவுடர்மூலம் தீயை அணைக்க முயற்சித்தோம். அதனால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை. புகை மூட்டதால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கியது. இதனால், முன்னெச்சரிக்கையாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து (மதியம் ஒரு மணி நிலவரப்படி) 8 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது. தீயை அணைப்பதற்காக கடையின் சுவரை இடித்துள்ளோம் அதன் வழியாக தீயை அணைப்போம். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்கான ஏற்பாடும் செய்துள்ளோம். இதுவரை 50 லாரி தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் தீயை அணைத்துவிடுவோம்" என்றார் நம்பிக்கையுடன்.
தீ விபத்து நடந்த இடத்துக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் வந்தனர். தீயணைப்புப் பணிகளைப் பார்வையிட்ட அவர்கள், பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டனர். மேலும், அந்தப் பகுதி அபாயகரமானது என்ற அறிவிப்பை வெளியிட்ட போலீஸார், அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. நகைகள் உருகியதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தீ தொடர்ந்து எரிவதால், கட்டடத்தின் உறுதித்தன்மையிலும் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏழு மாடி கட்டடத்தில், சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. தீ விபத்துச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் இன்று திறக்கப்படவில்லை.
Dailyhunt
No comments:
Post a Comment