Wednesday, May 31, 2017

மாநில செய்திகள்
இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது மத்திய அரசின் உத்தரவுக்கு தடை 4 வாரத்தில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு




இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது மத்திய அரசின் உத்தரவுக்கு தடை 4 வாரத்தில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மே 31, 2017, 05:45 AM
மதுரை,

கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிக்கையில், இளம் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரக் கூடாது. கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்த பிறகே அந்த கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கட்டுப்பாடுகள்

மேலும் கால்நடைகளை விற்பனை செய்கிறபோது, தன்னை விவசாயி என்று நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கால்நடைகளை விற்க முடியும். காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் ஆகியவை இந்த தடையில் வருகிறது. அனைத்து கால்நடை சந்தைகளும் 3 மாதங்களுக்குள் மாவட்ட கால்நடை மேற்பார்வை குழுவிடம் விண்ணப்பித்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளை விலைக்கு வாங்கியவர்கள் அவற்றை இறைச்சிக்காக வெட்டவும் கூடாது. இறைச்சிக்காக விற்பனை செய்யவும் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு விதித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூகசேவகி செல்வகோமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு 1960-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிராணிகள் வதைத்தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. மத வழிபாட்டிற்கு பிராணிகளை கொல்ல அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவு 28-க்கு எதிரானது. மேலும், அரசியலமைப்பின் 25-வது பிரிவு வழங்கி உள்ள மத சுதந்திரத்திற்கும் எதிரானது. இந்தியாவில் பெரும்பாலான சமூகங்கள் உணவுக்காக பிராணிகளை வதை செய்து, சுத்தம் செய்து உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அரசியல் அமைப்புக்கு எதிரானது

இந்தநிலையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள இந்த உரிமையை பிற சட்டங்களால் தடுக்க இயலாது. மேலும், மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும் மற்றும் விற்கும் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இந்த தடையால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள். உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை ஆகும்.

மக்களின் உணவுப்பழக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தடை அமைந்துள்ளது. எனவே இந்த தடையை சட்ட விரோதமானது என்றும், அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் அறிவித்து உத்தரவிட வேண்டும். அதுவரை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை அமல் படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மாநில அரசின் அதிகாரம்

இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை களிமங்கலத்தை சேர்ந்த ஆசிக் இலாகி பாவா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இவற்றை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, “உணவு என்பது கலாசாரங்களின் அடையாளம். ஒருவர் இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்திய குடி மகன்களின் அடிப்படை உரிமைகளில் அரசு தலையிட முடியாது. ஒரு சட்டத்தில் திருத்தம் செய்வதானால் ஏற்கனவே உள்ள பிரதான சட்டத்துக்கு உட்பட்டதாக தான் திருத்தம் இருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்திருத்தம் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. சந்தைகளை ஒழுங்கு படுத்துவது உள்ளாட்சி மற்றும் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.

அவகாசம் தேவை

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு வக்கீல் ஜி.ஆர். சுவாமிநாதன், “இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக பதில் அளிக்க 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது” என்று வாதாடினார்.

மேலும் “கால்நடைகளை வதை செய்ய தடை விதிக்கப்படவில்லை. கால்நடைகளை விற்பனை செய்வதை முறைப்படுத்துவதற்காகத் தான் இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இடைக்கால தடை

இருதரப்பு விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை விதித்தது தொடர்பாக மாநில அரசை கலந்தாலோசிக்காமல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிர்வாக நடைமுறை என்பது மாநில அரசுகளின் அதிகாரத்திலேயே உள்ளது. உணவு சம்பந்தமான விஷயங்கள் மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகளில் முகாந்திரம் உள்ளதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை. எனவே இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகள் விற்க விதிக்கப்பட்டுள்ள தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கு குறித்து மத்திய உள்துறை செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர், மாநில உள்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...