Wednesday, May 31, 2017


பரிசு வாங்க படும் பாடு

By வாதூலன்  |   Published on : 30th May 2017 02:50 AM 
இனி, வருகிற ஆடி மாதம் வரை திருமண சீஸன்தான். திருமணம், புதுமனை புகுவிழா, பிற விசேடங்கள் என்று ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டேயிருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் நினைவுப் பரிசாக ஏதாவது அளிப்பது ஒரு மரபாகிவிட்டது. சிலரிடம் வெகு உரிமையாக "என்ன வேணும்?' என்று கேட்டு, அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வாங்குபவர்களும் உண்டு.
என் பெண் தன் வீட்டு விசேடத்துக்கு, நெருங்கிய தோழிக்கு (கல்லூரி நாளிலிருந்து 20 வருட சினேகம்) ஒரு புடவை வாங்கித் தந்தாள். சினேகிதி, "எதற்கு இத்தனை சிரமம்?' என்று ஒப்புக்குக் கேட்டிருக்காலம். அல்லது, நன்றி தெரிவித்து விட்டு அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவள், "என்னிடம் இந்த ஊதா நிறம் நிறைய இருக்கிறது' என்று அலுத்துக் கொள்கிறாற்போல் சொல்லியிருக்கிறார்.
பெண்ணுக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. புடவைக் கடையோ வெகு தொலைவு. சென்னையில் தங்கியிருப்பதோ சொற்ப நாட்களே. என் மனைவியிடம் சொல்லித் தன் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட இதே மாதிரி அனுபவம் எங்களுக்கும் நேர்ந்தது. சுப நிகழ்வு ஒன்றின்போது, நெருங்கிய உறவினரைப் பார்த்து ஆசியைப் பெற்றுக் கொண்டு வேட்டியைக் கொடுத்தோம்.
"இந்த மாதிரி வேஷ்டிகளை உடுத்திக் கொள்வதே இல்லை நான்' என்று உடனே, திருப்பித் தந்தார். நல்ல காலம், வேட்டி வாங்கிய ரசீது கைவசம் இருந்தது. மறுபடியும் கடைக்கு சென்று வேறு வேட்டி வாங்கித் தந்த பின்தான் மனத்துக்குச் சமாதானமாயிற்று.
மேல் சொன்ன சம்பவங்களையாவது, "சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று எண்ணி ஒதுக்கிவிடலாம். ஆனால் நம்மை ஏமாற்றுகிறார் போல் நடக்கிற செயல்கள் மிகவும் உறுத்துகின்றன. போனவாரம், ஒரு சிறிய கடையில் 60 ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கினேன்.
ஒன்றைப் பிரித்துப்போட்டு விட்டேன். மற்றொன்றை சில நாள் கழித்துப் பிரிக்கும்போது மனைவி கவனித்தார், "ஒரு கிண்ணம் இலவசம்' என்று வாசகம் இருந்தது. "விட்டு விடலாம், இதற்குப் போய் மறுபடியும் அலைவானேன்' என்று எனக்குத் தோன்றியது.
"சிறியதோ, பெரியதோ இவ்வளவு பிரபல கம்பெனி நம்மைப் போன்ற நுகர்வோர்களை மதித்து இலவசமாக பொருள் தருகிறார்கள். அதை எப்படி தராமல் இருக்கலாம்' என்பது மனைவியின் வாதம்.
கடையில் போய் விசாரித்தால், கேள்விக் கணைகள் என்னைக் குடைந்தன. "எப்போது வாங்கினீர்கள்?' "ஏன் முதலிலேயே கவனிக்கவில்லை?' "இன்னொரு உறை எங்கே?' நான் மெளனமாக நின்றேன். பிறகு கடைக்காரர் வேண்டா வெறுப்பாக இரண்டு கண்ணாடிக் கிண்ணங்களை எடுத்துத் தந்தார்.
பெரிய கடைகளில் மொத்தமாக மளிகைப் பொருட்களை வாங்குகையில் இதுபோன்ற பிரச்னை நிகழ்வதில்லை. அனுபவப்பட்ட கடை முதலாளியே சாமான்களைப் போடும்போது "பரிசு'களையும் தந்து விடுவார். சில தருணங்களில் இல்லத்தில் பொருட்களைப் பிரிக்கும் போதுதான் அவை தெரியவரும்.
ஆனாலும், இப்போதெல்லாம் இந்த இலவசங்களுக்கு ஒரு வரைமுறையே
இல்லாமல் போய்விட்டதென்று தோன்றுகிறது.
போன மாதம் செல்லிடப்பேசி மாத பில்லுக்கான கெடு தேதி 27. இருபது தேதிக்குள் செலுத்தினால் ஒரு குறிப்பிட்ட படத்துக்கு இரண்டு டிக்கெட் இலவசம் என்ற குறுஞ்செய்தி வந்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இதுபோன்ற இலவசங்களைப் பெறுவது எளிதான காரியமல்ல.
சென்ற தீபாவளியின்போது சென்னையின் மையமான ஓர் இடத்தில் பிரபல துணிக் கடையில் இரண்டு சட்டை வாங்கினேன். பரிசாக இன்னொன்று கிடைக்கும். உங்களுக்கு மெúஸஜ் வரும் என்று கடைக்காரர் தெரிவித்தார்.
ரொம்ப நாள் கழித்து செல்லிடப்பேசியில் செய்தி வந்தது. பிறகு ஓர் எண்ணை கண்டுபிடித்து கணினியில் உறுதிப்படுத்தி, தில்லி முகவரியைப் பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
எப்படியோ, அங்கிருந்து, காய் நறுக்கும் கருவி கிட்டியதென்று வைத்துக் கொள்ளுங்கள்.
தனியார் நிறுவனங்கள் சிறிய பரிசுக்காக நுகர்வோரை அல்லலுக்கு உள்ளாக்குவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அரசு வங்கிகளே இது மாதிரி நடந்து கொண்டால்? அனைத்து வங்கிகளும் வழங்குகிற கடன் அட்டையைத்தான் குறிப்பிடுகிறேன்.
அட்டை மூலம் பரிவர்த்தனை செய்தால், வாடிக்கையாளர்களுக்கு "பாயிண்ட்ஸ்' சேரும். முன்பெல்லாம் மார்ச் மாதம் பற்றுக் கணக்கில் இத்தகைய எண்ணிக்கைக்கு ஏதோ ஒரு சதவீதத்தில் கணக்கிட்டு வரவு வைப்பார்கள். இப்போது அதற்கும் பரிசு.
பரிசுப் பொருளைப் பெறுவதிலுள்ள நடைமுறையில், சிக்கல் வாய்ந்தவை. கணினியில் அட்டை எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறந்த தேதியை உறுதி
செய்தாக வேண்டும். தொடர்ந்து கணினி கேட்கிற வினாக்களுக்கெல்லாம் பதில் எழுதின பின்னர், பரிசு கிடைக்கிற இடம் தெரிகிறது.
தொகைக்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் எடுக்க இயலாது. அதற்கு நாலைந்து விருப்ப வகைகள் தான் (ர்ல்ற்ண்ர்ய்ள்). இடமும் தொலைவு, இருந்தாலும் ஒரு சனிக்கிழமை அங்கு சென்று பரிசுப் பொருளை ஆராய்ந்தோம். மனத்துக்குப் பிடித்ததாக ஏதும் அமையவில்லை. கூடுதலாக ரூ.500 போட்டு தேவையான சமையலறை கருவியை வாங்கினோம்.
இதுபோன்ற சடங்குகளை கண்டு வெறுத்துப்போய், பல வாடிக்கையாளர்கள் பரிசே வாங்குவது கிடையாது.
சீஸனுக்கு ஏற்றாற்போல் தனியார் நிறுவனங்கள் பரிசுகளை வழங்குவது சரிதான். ஆனால் நமக்கு உரிமையான பரிசுப் பொருளைப் பெறுவதில்கூட நடைமுறை சிக்கல்கள் நிறைய இருப்பது சரியில்லை. அரசு வங்கிகளாவது இந்த முறையை எளிமைப்படுத்தினால் நல்லது.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 22.04.2024