Wednesday, May 31, 2017

மாநில செய்திகள்
தென்மேற்கு பருவ மழை 3 நாட்களில் தொடங்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்




பருவ மழை 3 நாட்களில் தொடங்க இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

மே 31, 2017, 05:30 AM
சென்னை,

தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பத்தின் அளவு படிப்படியாக குறையும் என்றும், தென்மேற்கு பருவ மழை 3 நாட்களில் தொடங்க இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

கோடைமழை

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நிறைவடைந்த உடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வினோதமான காலநிலை நிலவி வருகிறது. குறிப்பாக பகல் பொழுதில் அளவுக்கு அதிகமான வெப்பமும், மாலை வேளைகளில் திடீரென்று லேசான மழையும் பெய்து வருகிறது. இது தமிழகத்தின் உள்மாவட்டத்தில் மட்டும் இருந்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை சென்னையிலும் லேசான மழை பெய்து பூமியை குளிர்வித்தது.

தொடர்ந்து இதேபோன்று கோடைமழை பெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பினாலும், நேற்று பகல் பொழுதிலும் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

இந்த வெப்பத்தின் அளவு எப்போது குறையும்? கோடைமழை எப்போது பெய்யும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழை

கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக அனேக இடங்களில் மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்தது. இதன் மூலம் அங்கு தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது.

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளிலும் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனால் கன்னியாகுமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி உள்ளிட்ட ஆணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவ்வாறு பெய்வதால் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிவகங்கை, குளச்சல், குளித்துறை ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்தது. மயிலாடி, இரணியல், தக்கலையில் 5, திருவாடானை, நாகர்கோவிலில் 4, காரைக்குடி, பேச்சிப்பாறையில் 3 சென்டி மீட்டர் மழை பெய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் 32 சதவீதம் மழை


தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் நடத்திய ஆய்வுப்படி நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை 96 சதவீதம் பெய்யும் என்று தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 6 சதவீதமும், ஜூலை 7 சதவீதம், ஆகஸ்டு 8 சதவீதம், செப்டம்பர் 11 சதவீதம் ஆக மொத்தம் 32 சதவீதம் மழை பெய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக மாதம் 5 சதவீதம் பெய்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் 24 சதவீதம் மழை பெய்தது.

சென்னையில் திடீர் மழைக்கு காரணம்

கடல் காற்றின் அளவை பொறுத்து தான் வெப்பத்தின் தன்மை இருக்கும். பொதுவாக தரைக்காற்று வீசுவது குறைந்த உடன் கடல் காற்று படிப்படியாக வீசத்தொடங்கும். ஒவ்வொரு மாதமும் இதில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். மே மாதம் இறுதியிலும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பகல் 2.30 மணிக்கு பிறகு தான் கடல் காற்று வீசத்தொடங்குவது வழக்கம்.

ஆனால் நேற்று முன்தினம் தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடல் காற்று மாலை 4 மணிக்கு தான் வீசத்தொடங்கியது. இதனால தான் நேற்று (நேற்று முன்தினம்) திடீரென்று மழை பெய்தது. சென்னையில் 2.9 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்தது.

வெப்பம் குறையாதது ஏன்?

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் காலம் முடிந்தாலும் படிப்படியாகத்தான் வெப்பத்தின் அளவு குறையும்.

தற்போது தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கியிருப்பதால், ஈரக்காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் மோதுவதால் கேரள மாநிலத்தில் மழையை பெய்ய வைக்கிறது.

பின்னர் அதே காற்று மலைக்கு மேலே சென்று மீண்டும் தமிழகத்தில் வீசும் போது ஈரப்பதத்தை இழந்து வெறும் காற்று வீசுவதால் வெப்பம் அதிகரிப்பது என்பது இயற்கை தான். இதுபடிப்படியாக குறையும்.

மோரா புயல் கரையை கடந்தது

மே மாதம் உருவாகும் புயல் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்வது தான் இயற்கை. அந்தவகையில் இந்த மாதம் வங்க கடலில் உருவான மோரா புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் அருகில் நேற்று காலை 6.30 மணி அளவில் கரையை கடந்தது. இதனால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

வரும் நாட்களில் சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் மற்றும் குறைந்த பட்சம் வெப்பத்தின அளவு 41 மற்றும் 31 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...