மொழி கடந்த ரசனை 33: நிலவின் கிரணங்களால் ஆன ஊஞ்சல்
இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களின் எண்ணிக்கை இந்தியாவின் மற்ற எல்லா மொழிப் பாடகர்களின் கூட்டுத்தொகையைவிட அதிகம். பரப்பிலும் அளவிலும் பாடல்கள் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நூற்றுக்கணக்கானவர்களில், முகமது ரஃபி, முகேஷ், கிஷோர்குமார் ஆகியோர் ‘மும்மூர்த்திகள்’ எனக் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஒன்றுடன் ஒன்று வேறுபட்ட, ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட முடியாத, ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய தனிச் சிறப்பான குரல் வளத்தைக் கொண்டிருந்த அந்த மூவரும் தாம் வாழ்ந்த காலத்தின் சில சிறந்த பாடலாசிரியர்களின் பொருள் மிக்க மன உணர்வுகளை என்றென்றும் அழியாத இசை ஓவியமாகத் தங்கள் குரல்களின் வழியே படைத்தனர்.
முகேஷ் என்ற ஒற்றைச் சொல்லில் முழு இந்தியாவும் அறிந்த முகேஷ் சந்த் மாத்தூர் என்ற மென்மையான குரல் வளம் கொண்ட பாடகர், மகிழ்ச்சி மிக்க கொண்டாட்ட உணர்வை விட, மனத்தை வருடும் சோகம் மற்றும் ஆறுதல் தரும் தாப உணர்வை வெளிப்படுத்துவதில் தனக்கு நிகர் இல்லாதவர். கே.எல். சைகல் பாணியில் தொடக்கத்தில் பாடிப் பிரபலம் அடைந்தவர் முகேஷ். ‘தில் ஜல்த்தா ஹை தோ ஜல்னே தே’ என்ற பாடலை இவர் சைகலின் குரலில் பாடினார். இந்தப் பாட்டைக் கேட்ட சைகல், “நான் இந்தப் பாட்டை எப்பொழுது பாடினேன் என்று தெரியவில்லையே” என்று உடன் இருந்த உதவியாளரிடம் கேட்டாராம்.
அப்படித் திரையுலகில் நுழைந்த முகேஷ் அதன் பின்னர் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட சிறப்பு அடையாளம் ராஜ்கபூரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தன் 53-வது வயதில் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின்போது முகேஷ் மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட ராஜ்கபூர், “நான் என் குரலை இழந்துவிட்டேன்” என்று கூறினாராம். ‘மிலன்’ படத்தின் நான்கு பாடல்களைப் பாடிய முகேஷுக்கு மட்டுமின்றி அதன் இசை அமைப்பாளரான லக்ஷ்மி காந்த் - பியாரிலால் ஜோடிக்கும் காலத்தால் அழியாத அமரத்துவம் தந்த இப்படத்தின் மேலும் மூன்று பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.
‘ராம் கரே ஐஸ்ஸே ஹோ ஜாயே, மேரி நிந்தியா தோஹே லக் ஜாயே’ என்று தொடங்கும் ‘லோரி’ என்ற தாலாட்டு வகைப் பாடல் கங்கை நதிப் படகோட்டிகளின் வட்டார வழக்குச் சொற்களுடன் கூடிய, எளிய மக்களின் ஆற்றாமை உணர்வை எடுத்துக்காட்டும் இனிமையான பாடல்.
பொருள்:
ராமனின் அருளில் இப்படி நடக்கட்டும்.
எனக்கு வரும் தூக்கம் உனக்குக் கிட்டட்டும்
நான் விழித்திருக்கிறேன் நீ தூங்கு நிம்மதியாக
சுகமாக மாறட்டும் துயர் நிறைந்த உன் சோகங்கள்
இறைவனிடம் என்னால் வேண்டிட இயன்றால்
அழகாக ஆக்குவேன் உன் சோர்ந்த விழிகளை
தரட்டும் உனக்குத் தூக்கம் என இறைஞ்சுவேன்.
நீ மட்டும் இல்லை, நான் மட்டும் இல்லை,
இந்த நீள் உலகமே துயரமான ஒரு கவிதையே
தன் நிலை மறந்த தனியனே ஆயினும்
என்றும் தனது வீட்டை மறப்பதில்லை எவனும்
கனவுகள் வரட்டும் உனக்குக் கள்ளத்தனமாய்
இனிய தாலாட்டு ஒன்றை உறக்கத்தில் தரட்டும்
நிலவின் கிரணங்கள் கயிறாய் அமைந்து
உனது மனது அதில் ஊஞ்சலாய் ஆடட்டும்
ராமனின் அருளில் இப்படி நடக்கட்டும்.
எனக்கு வரும் தூக்கம் உனக்குக் கிட்டட்டும்
நான் விழித்திருக்கிறேன் நீ தூங்கு நிம்மதியாக.
படகோட்டியின் உடல் மொழிக்கேற்ற சில சொற்கள் இப்பாடலில் அமைந்திருப்பது இப்பாடலை மற்ற தாலாட்டு வகைப் பாடல்களிலிருந்து வேறுபடுத்துகிறது. ‘தோஹே’ என்ற பிஹாரி வட்டாரச் சொல், ‘உன்னுடைய’, ‘உங்களுடைய’ என்று இரு பொருள் தரும் விதம் நாட்டுப்புறப் பாடல்களில் அமைந்திருக்கும்.
காதலன், காதலி ஆகிய இருவருக்கும் பொதுவான இச்சொல் ‘வாரீகளா’என்பது போன்றது. ‘முத்துக் குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா?’ என்ற தமிழ்ப் பாடல் இங்கு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.
No comments:
Post a Comment