Friday, May 26, 2017

நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!” - பகுதி 4


76. டி.எம்.எஸ். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். அவரோடு ஒருமுறை யாராவது பேசினால், உடனே அவரைப் போலவே குரலை மாற்றி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுவதில் வல்லவர்.

77. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் விரும்பி அழைத்தும், அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குச் செல்லாமல் தவிர்த்த சம்பவங்கள் உண்டு; ஆனால், ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாரேனும் வந்து அழைப்பு வைத்தால், அவரது இல்லத் திருமணத்துக்குச் சென்று அவசியம் கலந்துகொள்வார் டி.எம்.எஸ்.

78. இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், டி.எம்.எஸ்ஸைப் பலமுறை இந்திப் படங்களில் பாடுவதற்கு அழைத்திருக்கிறார். “வேண்டாம். எனக்குத் தமிழ் மட்டுமே போதும்” என்று தீர்மானமாக மறுத்துவிடுவார் டி.எம்.எஸ். ஒருமுறை, சென்னையில் பிரபல பாடகர்கள் பலரும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘நான் ஆணையிட்டால்...’, ‘ஆடு பார்க்கலாம் ஆடு...’ ஆகிய டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு அசந்துபோன நௌஷாத், டி.எம்.எஸ்ஸிடம், “எத்தனை முறை உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! வரவேயில்லையே நீங்க! இந்தி சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்!” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

79. 'நவராத்திரி' படத்தில் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். அதற்கேற்ப குடிகாரன், விவசாயி, கூத்துக்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்பவும் தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே போல், 'கௌரவம்' படத்தில் அப்பா சிவாஜிக்கு கம்பீரமான குரலிலும் (கண்ணா... நீயும் நானுமா), மகன் சிவாஜிக்கு மென்மையான குரலிலும் (மெழுகுவத்தி எரிகின்றது) பாடியிருப்பார். 'பாமா விஜயம்' படத்தில், 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலில் பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் என நால்வருக்கும் இவரே குரலை வித்தியாசப்படுத்திப் பாடியுள்ளார்.

80. பாடல் பதிவாகி, பின்பு அதற்கேற்ப நடிகர் வாயசைத்துப் பாடுவதுதான் வழக்கம். ஆனால், 'கௌரவம்' படத்தில் ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ்வ நாதனே பாடிப் பதிவு செய்திருந்த ஒரு பாட்டுக்கு சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்துப் படமாக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.வி-க்கு அதில் திருப்தி இல்லை. எனவே, வெளிநாடு சென்றிருந்த டி.எம்.எஸ். வந்த பின்பு, சிவாஜி நடித்த அந்தப் படக் காட்சியை அவருக்குப் போட்டுக் காண்பித்தார். அதைத் திரையில் பார்த்தபடியே டி.எம்.எஸ். உணர்ச்சிகரமாகப் பாடிப் பதிவானதுதான்... 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல்.

81. பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘அகத்தியர்’ உள்ளிட்ட பல படங்களில் பாடகராகவே தோன்றியுள்ளார். பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து இவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படத்தில் இவரும் ராகவனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

82. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'டாக்டர்' என்கிற சிங்களப் படத்தில், சிங்கள மொழியிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

83. 'நள தமயந்தி' என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். 1992-ல், மணிகண்டன் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் 'ராஜகுரு' வேடம் ஏற்றிருந்தார் டி.எம்.எஸ்.

84. மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். 2007-ல் டி.எம்.எஸ்ஸுக்காக இவர் எடுத்த பிரமாண்ட விழா மதுரை நகரையே ஒரு கலக்குக் கலக்கியது. “எந்தத் தமுக்கம் மைதானத்தில் முதன்முதலாக நான் எம்.கே.டி. பாகவதரைப் பார்த்து வியந்தேனோ... எனக்கும் ஒருநாள் இவ்வளவு பெரிய கூட்டம் கூடவேண்டும் என்று கனவு கண்டேனோ... அதே மைதானத்தில் எனக்குப் பெரிய விழா எடுத்து என் கனவை நனவாக்கிவிட்டார் அழகிரி” என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.

85. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், “நான் பாடல் எழுதுகிறேன். ஆனால், என்னுடைய வரிகளுக்கு உயிர் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்தவர் டி.எம்.எஸ்-தான்!” என்று மனமுவந்து பாராட்டியுள்ளார் கவியரசு கண்ணதாசன்.

86. இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு 'இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான விஜயராஜ்.

87. ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடிப்பார் என்று யூகித்து, அதற்கேற்பப் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ். 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.

88. இத்தனை வயதிலும் பாடல் பதிவென்றால், உற்சாகமாகத் தயாராகிவிடுவார் டி.எம்.எஸ். ஆரம்ப நாளில் கடைப்பிடித்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு, பாடல் வரிகளைத் தினம் தினம் வெவ்வேறு விதமாகப் பாடிப் பாடிப் பழகிக் கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன், 'வாலிபன் சுற்றும் உலகம்' என்னும் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பி.சுசீலாவோடு இணைந்து டி.எம்.எஸ். ஒரு பாடல் பாடினார்.

89. டி.எம்.எஸ்ஸின் 88-வது பிறந்த நாளை மலேசிய ரசிகர்கள் பிரமாண்டமாகக் கொண்டாட விரும்பியதால், அதில் கலந்துகொள்ள மலேசியா சென்றார் டி.எம்.எஸ். அங்கேயே தயாராகிக்கொண்டு இருந்த ஒரு தமிழ்ப்படத்தில், இவரைப் பாட வைக்க விரும்பினார் மலேசிய இசையமைப்பாளர் லாரன்ஸ். உடனே ஒப்புக்கொண்டு, கதாநாயகனின் அப்பாவுக்காகப் பின்னணி பாடிவிட்டு வந்தார் டி.எம்.எஸ்.

90. டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர்டூப்பர் ஹிட்! 1952-ம் ஆண்டு, ஏவி.எம்-மின் ‘செல்லப்பிள்ளை’ படத்தில், சுதர்சனம் இசையில்தான் இவர்கள் இருவரும் முதன்முதலாக இணைந்து பாடினர்.

91. 'எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்குப் பாடிய டி.எம்.எஸ் தனக்குப் பாட மாட்டாரா' என்று ஏங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' படத்தில் 'நண்டூருது, நரியூருது' பாடலைத் தனக்காகத்தான் பாடுகிறார் என்று அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்து அந்தப் பாடல் பதிவு முழுக்க அங்கேயே இருந்து ரசித்திருக்கிறார்.

92. கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் வெளியிடுவதற்காக, கலைஞர் எழுதிய ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்னும் பாடலின் ஆரம்ப வரிகளை டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

93. முன்பெல்லாம் சஃபாரி சூட் அணிவதில் விருப்பம் உள்ளவராக இருந்தார் டி.எம்.எஸ். இப்போது சந்தன நிற பைஜாமா, ஜிப்பாதான்! ஒருமுறை எம்.ஜி.ஆர். இவருக்கு அளித்த தங்கச் சங்கிலியை பல வருடங்கள் ஆசையோடு அணிந்திருந்தார். இப்போது இல்லை.

94. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கெல்லாம் பலமுறை சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.

95. மந்தைவெளி வீட்டின் வாசலில் ஒரு பள்ளிச் சிறுவன் தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை அழைத்து விசாரித்தார் டி.எம்.எஸ். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. “ஐயா! நான் உங்கள் ரசிகன். உங்களின் இந்தப் பாடல்களை எனக்கு கேஸட்டில் பதிந்து தர முடியுமா?” என்று கேட்டான் அவன். மாடியில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் கேட்ட பாடல்களைப் பதிந்து தந்தார் டி.எம்.எஸ். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மு.க.அழகிரி.

96. டி.எம்.எஸ்ஸின் குரு - காரைக்குடி ராஜாமணி ஐயங்கார். டி.எம்.எஸ்ஸின் அபிமான பாடகர்கள் - மதுரை மணி ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம்.

97. இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், டி.எம்.எஸ்ஸை அழைத்துச் சென்று எம்.கே.தியாகராஜ பாகவதரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பாகவதர், “நான் சிறையில் இருந்த இரண்டரை வருஷ காலமும் சினிமா சங்கீதத்தின் மவுசு குறையாமல் இருந்ததற்கு இந்தத் தம்பிதான் காரணம் என்று அறிந்தேன். இந்தத் தம்பியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று உளப்பூர்வமாகப் பாராட்டினார்.

98. சென்னை- திருவள்ளூரில் ஒரு கச்சேரி. தனக்கு கீ-போர்ட் வாசிக்க வந்திருந்த ஒரு குட்டிப் பையனைப் பார்த்ததும், “என்ன இது, பச்சைக் குழந்தையைப் போய்க் கூட்டிட்டு வந்திருக்கீங்க..? இவன் சரியா வாசிப்பானா?” என்று கேட்டார் டி.எம்.எஸ். “அருமையா வாசிப்பான் சார்! நம்ம சேகருடைய பையன்தான் இவன்!” என்று அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என டி.எம்.எஸ். பாட, அந்தப் பையன் கீ-போர்டு வாசிக்க, அதில் அசந்துபோன டி.எம்.எஸ். அந்தச் சிறுவனை அருகே அழைத்து, அவன் தலையில் செல்லமாகக் குட்டி, “மோதிரக் கையால் குட்டியிருக்கேன். நீ பெரிய ஆளா வரப்போறே பாரு!” என்று அன்போடு வாழ்த்தினார். அந்தப் பையன்... ஏ.ஆர்.ரஹ்மான்.

99. இந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதியன்று (24.3.2013) டி.எம்.எஸ்ஸுக்கு 90 வயது பூர்த்தியாகி, 91-வயது தொடங்கியது. இதை கேரளாவில் பெரிய விழாவாக எடுத்து டி.எம்.எஸ்ஸுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அளித்துக் கௌரவித்தார் பாடகர் கே.ஜே.யேசுதாஸ்.

100. “எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர்னு எல்லாருக்கும் அவங்கவங்க குரல்ல பின்னணி பாடறீங்களே… எனக்குன்னும் தனியா ஒரு குரல் வெச்சிருக்க மாட்டீங்களா என்ன? எனக்குப் பின்னணி பாடுங்களேன்!” என்று ஆசையோடு கேட்டு, டி.எம்.எஸ்ஸின் பின்னணிக் குரலுக்கு வாயசைத்துப் பாடுவதற்காகவே ’ரத்தத்திலகம்’ படத்தில் கல்லூரி புரொபசராக தோன்றிப் பாடி நடித்தார் கவியரசு கண்ணதாசன். அந்தப் பாடல்… ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!’ அந்தப் பாடலில் இடம்பெறும் ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை… எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்கிற கடைசி வரிகள் அந்தக் கவியரசருக்கு மட்டுமல்ல; இந்தப் பாட்டரசருக்கும் கச்சிதமாகப் பொருந்தும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024