Wednesday, May 31, 2017

வாடகைக்கு விட்ட அப்பா... இழுத்து மூடிய மகன்..! அரியலூரில் டாஸ்மாக் 

புரட்சி



வீட்டின் உரிமையாளரே டாஸ்மாக் கடைக்குப் பூட்டு போட்ட சம்பவம், அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞனுக்குப் பாராட்டுகளும் ஆதரவுகளும் குவிந்த வண்ணமுள்ளன. இது குறித்து டாஸ்மாக் அதிகாரியின்மீது புகார் கொடுத்துப் பேசினோம்.

"பெண்கள் போராட்டத்திற்கு, பிறகு தமிழ்நாட்டிலேயே டாஸ்மாக் இல்லா தாலுக்காவாக மாறிருக்கிறது செந்துறை. ஆனால், கேவலம் பணத்தாசையால் டாஸ்மாக் கடையைத் திறக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள நெய்வனம் பகுதியில் எங்கள் வீடு உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்க அப்பா அந்த வீட்டில் டாஸ்மாக் கடை வைத்துக்கொள்ள அனுமதியளித்தார். அந்த இடத்தில் இன்று வரையிலும் டாஸ்மாக் கடை செயல்பட்டுகொண்டிருக்கிறது.

சாராயத்தால் இளையோர் சமுதாயம் குடிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கிறது என்று தமிழகம் முழுவதும் மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். அந்த வகையில் செந்துறையிலுள்ள எட்டு டாஸ்மாக் கடையும் மூடினார்கள். அப்போது இந்தக் கடையையும் சேர்த்து மூடினார்கள்.



கிராம மக்கள் என்னிடம் வந்து, 'தம்பி இந்த டாஸ்மாக் கடையை எடுக்கச் சொல்லக் கூடாதப்பா? இரவு, பகலாக டாஸ்மாக் கடை எதிர்த்து போராட்டம் நடத்துவது எங்களுக்கு மட்டும் இல்லப்பா. உங்களுக்கும் சேர்த்துதான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்' என்றனர்.
உடனே என் தம்பி கோபி, டாஸ்மாக் சூப்பர்வைசர் செல்வராஜ் சாரிடம், 'பெண்களின் தாலி அறுக்கும் இந்தக் கடையின் வருமானம் எங்களுக்குத் தேவையில்லை. இடத்தை உடனே காலிப் பண்ணுங்க' என்று சொல்லியுள்ளார். அதற்கு அவர், 'அதெல்லாம் முடியாது இன்னும் ஒப்பந்தம் முடியவில்லை' என்று சொல்ல, 'நாங்கதான் ஒப்பந்தம் போடவில்லையே நீங்க மாத்தி, மாத்தி பேசுனா உங்கள்மீது வழக்கு போட்டு விடுவோம்' என்று கூறினோம்.

இதற்கு அவர், ஜுன் 1 தேதிகுள் கடையைக் காலிசெய்து சுத்தம் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் 29ம் தேதி நானும், என் தம்பி கோபியும் வெளியூர் சென்றிருந்தபோது திடீரென போலீஸ் பாதுகாப்புடன் கடையைத் திறந்து மதுவிற்கத் தொடங்கினார்கள். இதையடுத்து, கடையின் முன் மக்கள் திரண்டதும் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்கள்.

பின் கிராம மக்களும், என் தம்பியும் சேர்ந்து டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போட்டனர். மக்கள் இருந்ததால், டாஸ்மாக் ஊழியர்களும், பாதுகாப்புக்கு வந்த செந்துறை போலீஸார்களும் கடையைத் திறக்கமுடியாமல் திரும்பிச் சென்றனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுடன் சேர்ந்து கடையைக் காலி செய்யக் கோரியும், டாஸ்மாக் அதிகாரியின்மீது செந்துறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் கோபி" என்று கூறினார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024