ரமலான் மாதச் சிறப்புக் கட்டுரை: இறைவனின் மேன்மையை நினைப்போம்
மனிதனைப் பிடித்தாட்டும் தீய பழக்கவழக்கங்களை விரட்டியடிக்கப் பயிற்சி பட்டறையாக வரும் மாதமாகையால் ரமலான் மாதம் சிறப்புமிக்கது. அது ஒழுக்கத்தையும், சுயகட்டுப்பாட்டையும் மேம்படுத்தி மனிதனுக்கு அவனது படைப்பியல் இலக்கை உணர்த்தி முன் நகர்த்தும் மாதம்.
இறையடியார்கள், இறைவனின் கட்டளைக்கு அஞ்சி இந்தக் கட்டுப்பாட்டைத் தனக்குத் தானே விதித்துக்கொண்டு அதை சிரத்தையுடன் கடைப்பிடிக்கும் மாதமாகும். பசித்திருந்தும், விழித்திருந்தும், இறைவனைத் துதித்திருந்துமாய் இறையருளைப் பெறுவதற்கான மாதமாகும்.
அதனால்தான், நபிகளார் ரமலானின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஅபான் மாதத்தின் இறுதியில் இப்படி உரையாற்றி உற்சாகமூட்டுகிறார்:
“மக்களே! மகத்துவமும், அருள்வளமும் மிக்க மாதம் ஒன்று நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு, ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். இறைவன் இந்த மாதத்தில் நோன்பைக் கடமையாக்கியுள்ளான். இந்த மாதத்தின் இரவுகளில் பிரத்யேக இறை வணக்கமான தராவீஹ் தொழுவதை உபரி வணக்கமாக்கியுள்ளான்.
யார் இந்த மாதத்தில் தானாக முன்வந்து ஒரு நற்செயலைச் செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத பிற மாதங்களில் ஒரு கடமையை நிறைவேற்றியவர் போன்றவராவார். இந்த மாதத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுபவர் ரமலானல்லாத பிற மாதங்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி நற்சுவனமாகும். மேலும், இந்த மாதம் சமுதாயத்திலுள்ள ஏழை, எளியோர் மீது அனுதாபமும், பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்.”
ஒரு மனிதன் இறைவனின் கட்டளைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட நேரத்திலிருந்து, குறிப்பிட்ட நேரம் வரை உண்ணுவதில்லை. பருகுவதுமில்லை. திருமணமானோர் இல்லற இன்பங்களைத் துய்ப்பதுமில்லை. இதன் விளைவு இறைவனுக்கு அடிபணிய வேண்டும் என்ற உணர்வு அவனுள் புத்துணர்வு பெறுகிறது. இதன் மூலமாக நேரம் வரும்போது, இறைவனின் கட்டளைகளுக்கொப்ப தனது இச்சைகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பயிற்சி மாதம் முழுக்கக் கிடைக்கிறது. எக்காரணம் கொண்டும் பின்வாங்காத பொறுமையோடு, நிலைகுலையாமல் சமூகத் தீமைகளை எதிர்த்துப் போரிடும் மனவலிமை அதிகரிக்கிறது.
பிறரையும் நேசிக்கும் மனம்
அதேபோல, சமூகத்தின் நலிந்த பிரிவினரைத் தன்னைப் போலவே கருதி, தனக்கு இறைவன் தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கை வசதிகளை அவர்களுக்கும் வழங்கி அவர்களும் இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி நோன்பு நோற்கவும், நோன்பு துறக்கவுமான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.
திருமணம் போன்ற சுபநாட்களுக்குச் செல்ல அணியும் உடையிலிருந்து, தர நினைக்கும் பரிசுகள் வரை முன்னரே அழகான முறையில் திட்டமிடுவதைப் போலவே நெருங்கிவிட்ட ரமலானின் அத்தனை நன்மைகளையும் பெறுவதற்குத் திட்டமிடுதல் அவசியம்.
“இறைவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும், பிற இன்பங்களிலிருந்தும் தடுத்து வைத்திருந்தேன். அவனும் அவற்றையெல்லாம் தடுத்துக் கொண்டான். எனவே, என் இறைவனே..! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நோன்பு பரிந்துரைக்க திருக்குர்ஆன் கூறும்.“என் இறைவா! நான் இந்த மனிதனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன். இவனும் தனது இனிய உறக்கத்தைத் துறந்து திருக்குர்ஆனை ஓதிய வண்ணமிருந்தான். எனவே இவனுக்கான எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்” என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.
இறைவனின் மேன்மைகளை நினைவுகூர்ந்து சுய ஒழுக்கம் மற்றும் மனிதாபிமானத்தைப் பேணுவதை அன்றாடக் கடமையாக மாற்றும் மாதமாக ரமலான் மாதம் திகழட்டும்.
No comments:
Post a Comment