Saturday, May 27, 2017

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்



தமிழக சட்டசபையில், மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மே 27, 2017, 05:15 AM

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணமடைந்தார்.

அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி டெல்லிக்குச்சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார்.

பிரமாண்ட விழா

மேலும், இதற்காக தனி விழாவை தமிழக அரசு பிரமாண்டமான அளவில் நடத்த இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

இந்த விழா சட்டசபையில் நடைபெற உள்ளது. விழா நடக்கும் நாள் பற்றி தற்போது அரசு ஆலோசித்து வருகிறது. அதுபோல சட்டசபையில் எந்த இடத்தில் ஜெயலலிதாவின் படத்தை மாட்டுவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வரை படங்கள்

தமிழக சட்டசபையில் ஏற்கனவே மகாத்மா காந்தி உள்பட பல பிரமுகர்களின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வரைபடங்களாகும். அதுபோல ஜெயலலிதாவின் படமும் வரையப்படும் என்றும், கவின் கலைக் கல்லூரி மூலம் அவரது படத்தை வரைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

யார் படத்தை யார் திறந்தார்?

தமிழக சட்டசபையில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை 24.7.1948 அன்று கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரியார் திறந்துவைத்தார். சி.ராஜகோபாலாச்சாரியாரின் படத்தை 23.8.1948 அன்று பிரதமர் நேரு திறந்துவைத்தார்.

திருவள்ளுவரின் படத்தை துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் 22.3.1964 அன்று திறந்துவைத்தார். அண்ணாவின் படத்தை 10.2.1969 அன்று பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்தார். காமராஜரின் உருவப்படத்தை 18.8.1977 அன்று ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

எம்.ஜி.ஆர். படம்

தந்தை பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப் படங்களை 9.8.1980 அன்று கேரளா கவர்னர் ஜோதி வெங்கடாச்சலம் திறந்துவைத்தார். எம்.ஜி. ஆரின் படத்தை 31.1.1992 அன்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடி எம்.ஜி.ஆரின் படத்தை ஜெயலலிதா திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

அவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் படமும் தமிழக சட்டசபையில் ஜூன் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இவர்களில் அண்ணாவின் உருவப்படம் மட்டும் ராஜாஜி மண்டபத்தில் நடந்த விழாவில் திறந்து வைக்கப்பட்டது. மற்ற தலைவர்களின் படங்கள் அனைத்தும் சட்டசபையில் நடந்த விழாவில் திறந்து வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...