Saturday, May 27, 2017

மிரட்டிய போலீசை கண்டித்து முற்றுகை..."சாது மிரண்டால்!' மதுக்கடைக்கு எதிராக திரண்ட மக்கள்


பதிவு செய்த நாள்26மே2017 22:59




திருப்பூர் :திடீரென திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை, நள்ளிரவில் போலீசார் மிரட்டினர்; இதை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷனை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர், பி.என்.,ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப் அருகே இருந்த "டாஸ்மாக்' மதுக்கடை (எண் : 1091) மூடப்பட்டு, நேற்று முன்தினம் மதியம், காங்கயம் ரோடு, புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, அதிகாரிகளிடம் மனு அளிப்பது, போராட்டம் நடத்துவது குறித்து, இதில் விவாதிக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த திருப்பூர் ரூரல் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு, புதுப்பாளையத்துக்கு சென்று, "மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள்,' என்று எச்சரித்தனர். இது குறித்து, மொபைல் போனிலும், போலீசார் தாறுமாறாக பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்து, பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று காலை, ரூரல் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது:பள்ளி, கோவில், குடியிருப்பு நிறைந்த பகுதியில், திடீரென மதுக்கடை திறந்துள்ளனர். கிராமத்துக்கே சம்பந்தம் இல்லாத பலரும் இங்கு வர துவங்கியுள்ளனர். மதுக்கடைக்கு எதிராக மனு அளிக்க கூடாது; பேசக்கூடாது என, நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் மிரட்டுகின்றனர். என்ன ஆனாலும், மதுக்கடையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,'' என்று, ஆக்ரோஷமாக கூறினர்.

ரூரல் இன்ஸ்பெக்டர் தனசேகர், எஸ்.ஐ., விஜயமோகன், மணி ஆகியோர் பேச்சு நடத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு தெரிவித்தனர். போலீசாரிடமும், "டாஸ்மாக்' அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ள பொதுமக்கள், "மூன்று நாட்களில் கடை மூடப்படாவிட்டால், தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்று எச்சரித்தனர். அதன்பின், மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

"காடு கொள்ளாது'
திருப்பூர், போயம்பாளையம், நஞ்சப்பா நகரிலிருந்து கஞ்சம்பாளையம் செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் இரவு மதுக்கடை (எண்: 1964) திறக்கப்பட்டது. இதையறிந்த, அப்பகுதியினர், பெண்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டனர்.இதனால், கடை திறக்க வந்த "டாஸ்மாக்' ஊழியர்களை, மக்கள் திருப்பி அனுப்பினர். இதையறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு தாசில்தார் சுப்ரமணியம், ""கடையை திறக்ககூடாது என்றால், அரசுக்கு எப்படி வருமானம் வரும். இங்கு திறக்க வேண்டாம், என்றால் எங்கு திறக்கலாம்?'' என்றார்.

இந்த பதிலை கேட்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து, ""தாலுகா ஆபீஸ், ரேஷன் கடை, கூட்டுறவு சங்கங்களில், மதுக்கடை திறந்து நடத்துங்கள். பொதுமக்கள் வசிப்பிடங்களில், கடை திறந்தால், தினமும் எங்களுக்கு தலைவலிதான். "சாது மிரண்டால், காடு கொள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,'' என்று சத்தம் போட்டவாறு, தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், அதிர்ச்சியுற்ற தாசில்தார், ""இப்பகுதியில் மதுக்கடை திறக்கப்படாது,'' என்றார். அதன்பின், மதுக்கடையில் இருந்த சரக்கு அப்புறப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...