சென்னையை உலுக்கிய 'சென்னை சில்க்ஸ் தீ விபத்து': விதிமுறை மீறலே காரணம் என குற்றச்சாட்டு!
சென்னை தி நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து, கட்டிடத்தின் ஏழு மாடிகளுக்கும் பரவியதால், தீயை அணைக்க 12 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
திநகர் உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான குமரன் தங்க மாளிகை ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மொத்தம் ஏழு மாடிகள் கொண்ட கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏற்பட்ட தீ, அனைத்து மாடிகளுக்கும் அடுத்தடுத்து பரவியது. இதனால், சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகளுடன், துணிமணிகள் தீயில் கருகி சாம்பலாயின.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மேல் மாடி கேன்டீனில் இருந்த 15 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.
எனினும் பக்கவாட்டில் சரியான வசதிகள் இல்லாத காரணத்தால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்களுடன், காவல் துறையினரும், பொது மக்களும், கடை ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதுவரை தீயை அணைக்க முடியவில்லை.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து, தீ விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கட்டிட விதி முறைகள் சரியாக பின்பற்றப்படாததும், தீ தடுப்பு கருவிகள் சரியாக பொருத்தப்படாததுமே தீ விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி இல்லை. சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 மாடிகள் கட்டப்பட்டன.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான் விபத்துக்கள் ஏற்பட்டு, சேதங்கள் தடுக்க முடியாமல் போய்விட்டன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
1975 ம் ஆண்டு சென்னையின் அடையாளமாக கருதப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தே மிகப்பெரிய தீ விபத்தாக கருதப்பட்டது.
அந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கடகடவென 14 மாடிகளுக்கும் பரவியதால், 22 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
அதை தொடர்ந்து, இன்று சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தே, சென்னை மாநகரை உலுக்கி உள்ளது. எனினும் இன்னும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலில் மக்கள் வெந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னை சில்க்சில் ஏற்பட்ட தீ விபத்தால், தி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்தும் மின்சார சப்ளையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை கவனத்தில் கொண்டாவது இனி கட்டிட விதி முறை மீறலை தடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Dailyhunt
No comments:
Post a Comment