Friday, May 26, 2017

நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!” - பகுதி 1

- ரவிபிரகாஷ்

தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்; ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா…

91 வயதில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை- பில்ராத் மருத்துவமனையிலும் பின்பு இசபெல்லா மருத்துவமனையிலும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்து, சற்றே குணமாகி, சென்னை- ஹேமமாலினி திருமண மண்டபத்தில் 22.5.2013 அன்று நடந்த அவரது பேரன் செந்தூரனின் திருமண நிகழ்விலும் கலந்துகொண்டுவிட்டு, , மந்தைவெளியில் உள்ள தனது இல்லத்தில் முருகனடி சேர்ந்தார். அவரது நினைவைப் போற்றும்விதமாக டி.எம்.எஸ். பற்றிய நினைவலைகளை 100 தகவல்களாக இங்கே தொகுத்துள்ளேன்.

1. டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' சௌந்தரராஜனையும், 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்காரையும் குறிக்கும். 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகுளுவா' என்பதைக் குறிக்கும். கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு உடம்பில் பலம் உண்டாக்கக்கூடிய சத்து மாவு தயாரித்துத் தருவதில் அந்தக் குடும்பம் பேர் பெற்றது.

2. பிறந்தது மதுரையில். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு. டி.எம்.எஸ். மூன்றாவது குழந்தை. இவருக்கு அடுத்துப் பிறந்த ஒரு தம்பி கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் மட்டும் இப்போது மதுரை, ஆனைமலையில் மிருதங்க வித்வானாக இருக்கிறார்.

3. எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். ஆறாம் வகுப்பு வரை மதுரை செயின்ட் மேரிஸ் ஸ்கூலிலும், மேல்நிலைப் படிப்பை சௌராஷ்டிரா பள்ளியிலும் முடித்தார்.

4. டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார் டி.எம்.எஸ்.

5. 1946-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல்.

6. டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று!

7. டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.

8. மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது.

9. டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

10. இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.

11. டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.

12. டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

13. தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)

14. டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!

15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.

16. சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...'

17. 'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'.

18. மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார்.


##~~##
19. 'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும் 500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

20. 'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ்.

21. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும்.

22. 'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.

23. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. சிவாஜிகணேசனுக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், ‘ஏறாத மலைதனிலே…’ படம்: தூக்குத்தூக்கி

24. அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை.

25. இலங்கைக்கும் டி.எம்.எஸ்ஸுக்கும் அப்படி ஒரு பொருத்தம் உண்டு. வானொலி உலகில் முதன்முதலில் டி.எம்.எஸ்ஸின் இசைத்தட்டை ஒலிக்கவிட்ட பெருமை இலங்கை வானொலியையே சேரும். ஆம். டி.எம்.எஸ். பாடிய 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பி, காற்றலைகளில் அவரது காந்தர்வக் குரலைப் பரப்பியது இலங்கை வானொலிதான்! டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து! டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...