04செப்
2017
00:40
எங்கும் பசுமையும், ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் பாரம்பரியம் மிக்க, முக்கிய பத்து நாள் பண்டிகை, ஓணம்.
மலைச்சரிவு(சேரளம்) மற்றும் சேர நாடு என்பதிலிருந்து தோன்றிய கேரளபுத்திரர் என்பதே சேரபுத்ரா என்றழைக்கப்பட்டு, தற்போது, கேரளா என்றழைக்கப்படுகிறதுமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழ்பவர்கள் என்பதால் மலையாளிகள் என, இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
திருமாலின் ஓர் அவதாரத்தை பண்டிகையாக கொண்டாடும் கேரள மக்கள், மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்த திருமாலை வணங்கியும், ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை காண வரவேண்டும் என, வரம் வாங்கிய மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றும், கேரளா மக்கள் கொண்டாடும் ஒரு திருவிழா இந்த ஓணம் பண்டிகை.
ஆண்டுதோறும் தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, துவங்க உள்ள, கொல்ல வர்ஷம் ஆண்டின், முதல் மாதமான, 'சிங்கம்' மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.தொன்மையான பண்டிகை ஓணம்
* கிட்டத்தட்ட, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, நம்மாழ்வரால் புகழ்ந்து பாடப் பெற்ற திருக்காட்கரா கோவிலில் தான், ஓணம் துவங்கியிருக்கிறது
* பத்துப்பாட்டு நுால்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில்
* நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடல்களில்
* தேவாரத்தில் சம்பந்தர் பாடியுள்ள பல பாடல்களில்
* கி.பி. 861 தேதியிட்ட, ஒரு தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு
* பாண்டியன் ஆட்சிக் காலத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு
என, மிகத் தொன்மையான பாரம்பரிய பண்டிகை ஓணம் என்பது உறுதி செய்யப்படுகிறது.
மகாபலியும், திருமாலும்அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனின் பேரன், மகாபலி.
தானம், தர்மம், அருள், கொடை என, மிகச் சிறப்பாக மக்களை ஆண்டு வந்த மகாபலி மன்னர், யாகம் செய்வதிலும் சிறப்பானவர். தானம், யாகம் செய்வதில் தனக்கு மிஞ்சியவர் இவ்வுலகில் இல்லை என்ற செருக்கு அடைந்தார்.
இவர் செருக்கை அடக்க, ஆவணி மாதம், சுக்ல பட்சம், துவாதசி திதியில் திருவோண நட்சத்திரத்தன்று, மகா விஷ்ணு, குள்ளமான வடிவத்தில் அவதாரம் எடுத்தார். குள்ளமாக இருந்ததால், வாமனன் என்ற பெயரில் அழைக்கப் பட்டார்.தேவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற, நர்மதையின் வடகரையில், 'ப்ருகு கச்சம்' என்ற இடத்தில், மகாபலி சக்ரவர்த்தி நடத்தி வந்த அஸ்வமேத யாகத்திற்குஎழுந்தருளினார் வாமனர்.
வாமனரின் வரவில் மகிழ்ந்த மகாபலி, அவரை வரவேற்று, 'தங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்.தன் காலில் அளந்து, மூன்றடி பூமி தானம் வேண்டும் என, கேட்டார் வாமனர். தரும சிந்தனையுள்ள மகாபலியோ, 'வாழ்விற்கு தேவையான பூமியை வேண்டிய மட்டும் பெற்றுக் கொள்ளலாம்...' என்று கூற... வாமனரோ, 'மூன்றடி நிலம் மட்டும் போதும்...' என்று சொல்கிறார்.
அப்போது, அங்கிருந்த அசுர குலகுரு சுக்ராச்சாரியார், 'சக்ரவர்த்தியே... இவர் சாட்சாத் ஸ்ரீ ஹரியே... கச்யபருக்கும், அதிதிக்கும் பிறந்து, தேவர்களின் பொருட்களை மீட்டுக் கொடுக்க வந்திருக்கிறார்; ஆதலால், நீ இவ்விதம் வாக்கு கொடுப்பது சரியல்ல...' என்று தடுத்தார் மகாபலி. 'எதுவாகிலும் நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்...' என்று கூறி, வாமனர் கேட்ட பூமியை தானம் செய்தார்.
உடனே, வாமனர் தன் சிறிய உருவத்தை மிகவும் பெரிதாக்கி, பூமி முழுவதையும் ஓர் அடியாலும், சொர்க்க லோகத்தை இரண்டாவது அடியாலும் அளந்து, மூன்றாவது அடி எங்கே வைப்பது என யோசிக்க, 'என் தலையிலேயே அதை வைத்து விடும்...' என்கிறான் மகாபலி.
பகவான் மகாபலியின் தலையில், தன் பாதத்தை வைத்த உடனேயே, அவனுடைய ஆணவம், அகங்காரம் அனைத்தும் அவனை விட்டு பிரிந்தது. பகவானும் மகிழ்ந்து, இந்திர லோகத்திற்கு சமமான பாதாள லோகத்தை அளித்து, மோட்சத்தையும் தந்தார்.
இந்த வரலாற்றின் சான்றோடு தான் கேரளா மக்கள் ஆண்டுதோறும் திருவோண நட்சத்திர நாளில், மகாபலி மன்னர், தங்களை காண பாதாள உலகில் இருந்து பூமிக்கு வருவதாகவும், ஒவ்வொருவர் வீட்டுக்கும் அவர் அவதரிக்க வேண்டும் என்றும், அந்த நாளில் அவரை வரவேற்று, மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
வரவேற்பு
தங்கள் வீட்டுக்கு வரும் மகாபலி மன்னனை மகிழ்ச்சியோடு, கொண்டாட்டமாக வரவேற்க கேரள மக்கள் தயாராகின்றனர். வீட்டின் வாசலிலேயே, மன்னன் மயங்கி, மனம் மகிழ வேண்டும் என நினைக்கின்றனர். அதனாலேயே ஓணம் பண்டிகையின் சிறப்பாக அத்தப்பூ பூக்கோலம் சிறப்படைகிறது.
ஆவணி மாதம் பல வகையான பூக்கள் கேரளாவில் பூக்கும் கால கட்டம். அதனால் தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களின் முக்கியத்துவத்துடன் அனைத்து வகை பூக்களையும் கொண்டு வாசலில் மிக அழகான கோலமிடுவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பூக்கள் இடம்பெறும். முதல் நாள் ஆண்கள் பறித்து வரும், 'அத்தப்பூ' என்ற ஒரு வகை பூவோடு ஆரம்பிக்கும் இந்த கோலம், நாளுக்கு நாள் மெருகேறி பத்தாம் நாள், பத்து வகையான பூக்களைக் கொண்டு மிகப் பெரிய கோலமாக மலரும்.
பண்டிகை என்றாலே பலகாரங்களும், விருந்தும் தானே முதலிடம் பிடிக்கும். அதுவும் கேரளா என்றவுடன் நமக்கு புட்டு, கிழங்கு, பயறு என்று கற்பனை பறக்கும்.'கானம் விற்றாவது ஓணம் உண்' என்பது கேரளா பழமொழி. அதுக்கேற்ப, 64 வகையான உணவு, ஒன்பது வகையான சுவையுடன் தயாரித்து விருந்து படைப்பர். குறிப்பாக, கசப்பு சுவை உணவை தவிர்த்துவிடுவர். மொத்த உணவு படையலுக்கும், 'ஓண சத்யா' என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
ஒருநாள் உணவு வகைகளின் பட்டியலைக் கேட்டாலே, உடனே, அத்தனையையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற உணர்வு நமக்கு வந்துவிடும். புது அரிசி மாவில் செய்த அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப்புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம் காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என பட்டியல் நீளுகிறது. பெரும்பாலான உணவுகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும்பங்கு வகிக்கிறது.
இத்தனை அயிட்டத்தையும் சாப்பிட்டால் வயிறு என்னாவது? அதனால் சாப்பிட்ட பின் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு, இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி என, தனியாகதயாரித்து தருவர்.
களி - நடனம் - கொண்டாட்டம்புலிக்களி அல்லது கடுவாக்களிசுமார் 200 ஆண்டுகளுக்கு முன், கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் துவக்கி வைக்கப்பட்ட களி இந்த புலிக்களி.சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் புலி வேடமிட்டு ஆண்கள் ஆனந்தமாய் இசை ஒலிக்கேற்ப ஒருவித தாளத்துடன் நடனம் ஆடி வருவர்.
திருவாதிரை
கசவு என அழைக்கப்படும் துாய வெண்ணிற ஆடையை அணிந்து, தங்கள் மனதிற்கு பிடித்த மகாபலி மன்னனை நினைத்தும், வரவேற்றும் மகிழ்ந்து பாடல்களைப்பாடியபடி கைகொட்டி பெண்கள் ஆடும் நடனம் இது.
யானைத்திருவிழா (10)
ஒன்பது நாட்கள் கொண்டாட்டமாய் போன பின், பத்தாம் நாள் சிறப்பானதாய் ஆவது இந்த யானைத் திருவிழாவால் தான். பண்டிகை என்றாலே பண்டங்களை ஈகை செய்வது தானே! கேரள மக்கள், தங்கள் சக மனிதர்கள் மட்டுமல்லாமல், சக உயிர்களுக்கும் ஈகை புரிந்து கொண்டாடும் திருவிழா இந்த ஓணம்.
அதன்படி, யானைகளுக்கு பொன் மற்றும் மணிகளால் தங்க கவசம் இட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். பார்க்கும் அனைவரும் பரவசமாய் கும்மாளமிட்டபடி தொடருவர். கோவில் முழுவதும் சுற்றிவரும் யானை, மகாபலி மண்டபத்தில் சிறிது நேரம் நிற்கும்.
ஸ்ரீவாமனமூர்த்தி, மகாபலியை பாதாள லோகத்துக்கு திரும்ப அனுப்புவதற்கான அவகாசமாய் அது எடுத்துக் கொள்ளப்படுகிறது. பத்து நாட்களின் விருந்து,கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம் என்று சொல்வதை, மக்கள் இன்றும் நினைத்து மகிழ்ந்து, அடுத்த ஓணம் பண்டிகைக்கு காத்திருக்கின்றனர்.
விளையாட்டு
சிறப்பான திருவிழா, பண்டிகை என்றாலே ஆட்டம், பாட்டம், உணவு கேளிக்கைகளோடு விளையாட்டும் இருந்தால் தானே சிறக்கும். அதனாலேயே ஓணம்பண்டிகையில் கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களரி,படகுப்போட்டிகள், பாரம்பரிய கதகளி நடனப் போட்டி என, பத்து நாட்களுமே களைக்கட்டும்திருவின் கால்பதிந்த கரை - திருக்காட்கரை
திருவோணம் பண்டிகை இந்த திருக்கோவிலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.
இதன் கருவறையில் ஸ்ரீவாமனமூர்த்தி மகாபலி மன்னனின் தலை மீது தன் பாதத்தை வைத்தபடி விஸ்வரூப தரிசனம் தருகிறார். இந்த இடத்தில் தான் திருமால் வாமன மூர்த்தியாக மகாபலி மன்னனின் தலைமீது கால் வைத்ததில், மகாபலி பாதாள லோகத்தில் மறைந்த இடம்.
ஸ்ரீ வாமன மூர்த்தியை தரிசிக்கும் பக்தர்கள், செய்யாத தவறுக்காக துாற்றப்பட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்ட துறவி பிரம்மராக்ஷசரை வணங்காமல் கோவிலில் இருந்து வெளியேறக்கூடாது என்கிற ஐதீகம் உண்டு.
அத்தப்பூ கோலம்!
கேரளாவில் அனைத்து வீடுகளிலும், பத்து நாட்களும் பூக்களை கொண்டு தினம் விதவிதமான கோலம் போடுவர். பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், பண்டிகை துவங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே, தரையை சாணத்தால் மெழுகி, பின் கோலம் போடும் போது, மீண்டும் சாணத்தை தெளித்து, வண்ணப்பொடிகளை பயன்படுத்தி ஒரங்களை வரைவர்; அதற்குள், வண்ண வண்ண பூக்களை வைத்து அலங்கரிப்பர். சாணத்தின் ஈரத்தால் பூக்கள் பறக்காமல் இருக்கும்.
தற்போது, டைல்ஸ் மற்றும் மொசைக் தரைகளில் சாக்பீஸ் அல்லது க்ரேயான்ஸ் உபயோகித்து, ஒரங்களை வரைகின்றனர். தும்பா, கொங்கினி, செம்பருத்தி, வாடாமல்லி மற்றும் செவ்வந்தி போன்ற வெவ்வேறு பூக்களையும், இலைகளையும் பயன்படுத்துகின்றனர். இதனால், கோலம் வண்ண மயமாக காட்சியளிக்கும். வண்ணப் பொடிகளையோ, காய்ந்த அல்லது செயற்கை பூக்களையோ பயன்படுத்தக்கூடாது.
பூக்கோலத்திற்கு நடுவில் குத்து விளக்கு அல்லது தென்னம்பூக்களை வைத்து வழிபடுவர். கோலம் போடும் போது பெண்கள் பாடல்களை பாடியும், கோலத்தை சுற்றி ஆடியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
இன்று கேரளாவில், மக்கள் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி கொண்டிருக்கின்றனர். திருவோணம் அன்று விரதம் இருப்பதால், எண்ணிலடங்கா பலன்கள் கிடைக்கும்
கேரள மாநிலத்தில், இன்று மக்கள் தங்கள் வீட்டில், மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். மேலும், இன்று விஷ்ணு கடவுளை வணங்கி, அவரது துதிப்பாடல்கள் மற்றும் புராணங்களை படிப்பர். பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
இதோடு, சுவாமிக்கு படைக்கும் உணவு பண்டங்களை ஒரு நேரம் சாப்பிட்டு, விரதம் இருக்கலாம். மேலும், வீட்டில் நெய் தீபம் ஏற்றி, விஷ்ணுவை வழிபடுவது மிகவும் நல்லது.
திருவோணம் அன்று விரதம் இருந்தால், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். திருமணம் ஆகாத பெண்களுக்கு, விரைவில் திருமணம் கைகூடும்.
நான்கு நாட்கள் ஓண விருந்து!
ஓணம் பூஜைகளுக்காக சபரிமலை நடை: செப்., 2-ம் தேதி திறந்தது.
சபரிமலை: ஓணம் பூஜைகளுக்காக சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன், நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். நேற்று முதல் வழக்கமான நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நான்கு நாட்கள் ஓண விருந்து நடக்கிறது.
களபாபிஷேகம் மற்றும் சகஸ்ரகலச பூஜை ஓண கால பூஜையின் முக்கிய அம்சமாகும்.3ம் தேதி முதல் 6ம் தேதி வரை மதியம் களப பூஜை நடைபெறும். 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும். 6ம் தேதி வரை தினமும் இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். ஓணத்துக்கு சபரிமலையில் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும்.
நேற்று உத்திராடம் விருந்து மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி சார்பில் நடைபெற்றது. 19 வகை கூட்டு, பாயசத்துடன், 2,500 பேருக்கு வழங்கப்படும். திருவோண விருந்து டாக்டர் மணிகண்டதாஸ் என்ற பக்தர் சார்பில், 28 வகை கூட்டு, பாயசத்துடன் 7,000 பேருக்கு வழங்கப்படும். இவர், 67 ஆண்டுகளாக இதை நடத்தி வருகிறார். 5 மற்றும் 6ம் தேதிகளில் தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பில் ஓண விருந்து நடைபெறும். 6ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.