அருவருப்பல்ல, எதார்த்த உண்மை!
By இரா. செல்வம் |
Published on : 04th December 2017 02:10 AM
மாதவிடாய் என்பது பெண்களின் பாலின
முதிர்ச்சி தொடங்கும் போது / பருவ மாற்றத்திற்கேற்ப இயற்கையாக ஏற்படும்
ரத்தப் போக்காகும். 52% பெண்களுக்கு இது ஏற்படுகின்றது. பெண்கள் தங்கள்
வாழ்நாளில் 6 -7 ஆண்டுகளை மாதவிடாய் காலங்களில் கழிக்கிறார்கள்.
இருப்பினும் மாதவிடாய் காலங்களில் சுகாதார மேலாண்மையைப் பற்றிய ஒரு தெளிவான
சிந்தனை இல்லை. இந்தியாவில் 70% தாய்மார்கள் மாதவிடாயை ஓர்
அருவருக்கத்தக்க நிகழ்வாகப் பார்க்கின்றார்கள் என்று "வாட்டர்
எயிட்-இந்தியா' அமைப்பு கூறுகிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதும், சமையல்
அறைக்குள் நுழையக் கூடாது எனவும், ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது எனவும்,
அவர்களைத் தொடக்கூடாது, தீட்டு என்று ஒதுக்கி வைப்பதும் இன்றும்கூட சில
வீடுகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு மாதவிடாய் ஏற்படும்போது, பெண்களை
சமூகம் இழிவாகக் கருதுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இது ஒரு சமூகப்
பிரச்னை மட்டுமல்லாமல், மனித உரிமையைப் பாதிக்கும் செயலுமாகும்.
"மாதவிடாய் காலத்தில், சமூகத்தில் பெண்களை அருவருப்பாகப் பார்ப்பது, மனித
கண்ணியத்தையும், உரிமையையும் மீறும் செயல்' என 2014-ஆம் ஆண்டு ஐக்கிய
நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜோதி சங்ஹெர கூறியுள்ளார்.
இந்தியாவில் 35.5 கோடி பெண்களும், மாணவிகளும் மாதவிடாய் பருவத்தில்
உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் மாதவிடாய் பருவத்தில் கண்ணியத்துடன்
நடத்தப்படவில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இவர்களுக்கு மாதவிடாய்
காலம் சுமுகமாகவும் இல்லை.
பருவமெய்தியவுடன் 20% மாணவிகள் இந்தியாவில் பள்ளிப் படிப்பைக் கைவிடுவதாக
ஐக்கிய நாடுகளின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதனால், பெண்களின் கல்வியறிவு
பெரும் அளவில் பாதிப்படைகிறது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி ஆண்களின் கல்வியறிவு 82.1% மற்றும் பெண்களின் கல்வியறிவு
65.5%-ஆகவும் குறைந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.
எனவே, மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை சமூகத்திலும்
குறிப்பாக, மாணவியர் மத்தியிலும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
இதில் மாணவிகளும், பெண்களும் படும் அவலங்களை அமைதியாகப்
பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும்
இருப்பது சரியான சமூக வளர்ச்சியை ஏற்படுத்தாது.
இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது.
ஒன்று, மாதவிடாய் பற்றிய சரியான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துதல்.
இரண்டாவது, மாதவிடாய் சுகாதார மேலாண்மை. அதாவது மாதவிடாய் காலங்களில்
சானிடரி நாப்கின்களை அதிகம் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தையும், மேலும் அதனை
அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் பெண்களிடம் கொண்டு செல்லுதல்
.
மாதவிடாய் பற்றி சமூகத்தில் ஒரு தெளிவான பார்வை இருந்தால் மட்டுமே பெண்கள்
பள்ளி, கல்லூரிப் படிப்பை சரியாகத் தொடரவும், அன்றாடம் வேலைக்குச்
செல்லவும், வீட்டு வேலைகளை கவனிக்கவும் முடியும். பள்ளி, கல்லூரிகளில்
சரியான சுகாதார வசதி இன்மையானது பெண்கள் படிப்பைத் தொடர்வதற்கு ஒரு
தடைக்கல்லாக உள்ளது. இதைப் பற்றி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில்
பெண்கள், மாணவ- மாணவிகளிடம் ஓர் ஆரோக்கியமான விவாதம் இல்லை.
மேலும், பெண்களுக்கு என்று அலுவலகங்களிலும், மாணவிகளுக்குப் பள்ளிகளிலும்
தனிக் கழிவறைகள் இல்லாதது, பிரச்னையை அதிகப்படுத்துகிறது. இது குறித்துப்
பேசுவதற்குப் பெண்களும், பெண் ஆசிரியர்களும் மாபெரும் தயக்கம் காட்டுவதாகத்
தெரிகிறது. மேலும், வீட்டில் பெற்றோரும் இதைப் பற்றிய விழிப்புணர்வை
மகள்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இன்று பாலியல் தொடர்பான விஷயங்களையும், மாதவிடாய் தொடர்பான விஷயங்களையும்
பற்றிப் பேசுவதற்கு ஒரு சமூகக் கட்டுப்பாடு உள்ளது. இதை வெளியில்
விவாதிப்பது தவறான ஒன்று என்கிற இறுகிய மனநிலை நிலவி வருகிறது. இதைப்
பற்றிய விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களிடையே ஆசிரியர்கள்
ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல் அலுவலகங்களிலும், கிராமப்புறங்களில் பருவமைடைந்த
மாணவிகளிடத்திலும், பெண்களிடத்திலும் ஒரு சரியான புரிதலை உருவாக்க
வேண்டும். மாதவிடாய் குறித்துப் பேசுவதை சமூகம் வெட்கக்கேடாக நினைக்கிறது.
இன்றும் மத, புராண கட்டுக் கதைகளின் அடிப்படையில் சமூகத்தில் ஒரு பாதி
அங்கத்தினர்களின் பிரச்னையை மறுபாதி அங்கத்தினர்கள் பேசாமலும்,
புரிந்துகொள்ளாமலும், மேலும் அதற்கான தீர்வைக் காணாமலும் இருப்பது, ஒரு
சமமான சமூக வளர்ச்சிக்கு இட்டு செல்லாது. ஆண்களின் பாலின முதிர்ச்சியை
இழிவாகக் கருதாத சமூகம், பெண்கள் பருவமடைந்து மாதவிடாய் ஏற்படுவதை மட்டும்
அருவருப்பாகப் பார்ப்பது ஒரு மனவளர்ச்சி குன்றிய சமூகத்தின்
பிரதிபலிப்பேயாகும்.
இந்தியாவில் இப்போது 12% மகளிர் மட்டுமே மாதவிடாய் காலங்களில்
நாப்கின்களைப் பயன்படுத்துவதாகவும், மீதம் 88% பெண்கள் துணிகளையும்,
கந்தலாடைகளையும், சாம்பலையும், செய்தித்தாள்களையும் பயன்படுத்துவதாகவும்
ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மட்டுமே
நாப்கின்களை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள
பெண்கள் நாப்கினிற்குப் பதிலாக மற்ற வழிமுறைகளையே அதிகம்
பயன்படுத்துகின்றார்கள்.
இதற்கான முக்கிய காரணங்கள் ஒன்று, கிராமப்புறங்களில் நாப்கின்கள் அதிகம்
கிடைப்பதில்லை என்பதும், அப்படியே கிடைத்தாலும் நாப்கின்களை வாங்கிப்
பயன்படுத்தும் அளவிற்கு வசதி இன்மை காணப்படுவதும்தான். பழைய துணிகளோ,
கந்தலாடைகளோ வீட்டிலே கிடைப்பதால் கடைக்குச் சென்று வாங்க முற்படுவதில்லை.
இதனால் ஏற்படும் பெரும் சுகாதாரக் கேடுகள் குறித்த சரியான விழிப்புணர்வு
இல்லை. மேலும் மாதவிடாயை ஒரு வெட்கப்படக்கூடிய நிகழ்வாக சமூகம்
பார்ப்பதால், பெண்கள் நாப்கின்கள் வாங்குவதன் மூலம் அதனை மற்றவர்களுக்கு
வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதும் இல்லை.
இவை அனைத்திற்கும் மேலாக, பயன்படுத்திய சானிடரி நாப்கின்களை
அப்புறப்படுத்துவதும் மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. நகர்ப்புறங்களில்
பயன்படுத்திய நாப்கின்கள் கழிப்பிடங்களிலும், சாக்கடைகளிலும்,
தெருக்களிலும் வீசப்படுகின்றன.
இந்திய நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளும் விதிகளின்படி
பயன்படுத்திய நாப்கின்கள் எரிக்கப்பட வேண்டும். பயன்படுத்திய நாப்கின்கள்
800 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார
நிறுவனம் (ரஏஞ) கூறுகிறது. இந்த வெப்ப நிலைக்குக் குறைவாக
எரிக்கப்படும்போது, அதிலிருந்து உருவாகும் நச்சு புகையானது, காற்றை
மாசுபடுத்துவதுடன் அருகில் வசிப்பவர்களுக்கு சுகாதாரக் கேடுகளையும்
விளைவிக்கலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும், இத்தகைய திடக்கழிவுகளை சேகரிப்பவர்களுக்கும் பல்வேறு சுகாதாரக்
கேடுகளும், நோய்களும் வர வாய்ப்புள்ளது. எரிக்கப்படாமல் குப்பைத்
தொட்டிகளிலும், சாக்கடைகளிலும், தெருவோரங்களிலும் தூக்கி எறியப்படும்
நாப்கின்கள் மிகவும் மோசமான சுகாதாரக் கேடுகளுக்குக் காரணமாகின்றன. எனவே,
பயன்படுத்திய நாப்கின்களை சரியான முறையில் பிரித்து அப்புறப்படுத்துவதற்கு
வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். "கிளீன் இந்தியா' ஆய்விதழின்படி
(ஸ்ரீப்ங்ஹய் ஐய்க்ண்ஹ த்ர்ன்ழ்ய்ஹப்), இந்தியாவில் 9,000 டன்கள் சானிடரி
திடக்கழிவுகள் (432 மில்லியன் நாப்கின் அட்டைகள்) ஓர் ஆண்டிற்கு உற்பத்தி
செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மாநகரங்களில் இத்திடக் கழிவுகளை
அப்புறப்படுத்துவது மாபெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழல்
பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்து வருகிறது.
ஒரு சமூகத்தின் நிறைவான வளர்ச்சி என்பது, ஆண் - பெண் இருபாலரையும் சார்ந்தே
உள்ளது. இருபாலருக்கும் உள்ள பிரச்னைகளைச் சரியாகப் புரிந்துக்கொண்டு
தீர்வுகள் காண்பதன் மூலமே ஓர் ஊனமற்ற சமூகம் உருவாகும். இதற்குப் பல்வேறு
முயற்சிகள் தேவைப்படுகின்றன. இருப்பினும் அரசு இன்று வெற்றிகரமாக
செயல்படுத்திக்கொண்டு வரும் "தூய்மை இந்தியா' திட்டத்துடன், மாதவிடாய்
சுகாதார மேலாண்மையையும் இணைத்து செயல்படுத்தினால்தான் பொதுமக்களுக்கு ஒரு
மாபெரும் விழிப்புணர்வு ஏற்படும்.
கல்வி துறை, சுகாதார வளர்ச்சித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள்
வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும் சேர்ந்து
இதற்கான ஒரு விழிப்புணர்வை மாபெரும் அளவில் ஏற்படுத்த வேண்டும்.