Tuesday, December 5, 2017

  இருக்கும் போது மரியாதை; இறந்த பின் இல்லையே : ஜெயலலிதா உருவச்சிலை கூவி கூவி விற்பனை
Added : டிச 04, 2017 |

இருக்கும் போது மரியாதை; இறந்த பின் இல்லையே : ஜெயலலிதா உருவச்சிலை கூவி கூவி விற்பனை

திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் உருவான, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை, திருவள்ளூர் நகரில், கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உயிருடன் இருந்த போது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் இரும்பு மனிஷியாக திகழ்ந்தார். அவரது கண் அசைவின்றி கட்சி நிர்வாகிகள் முதல், தொண்டர்கள் வரை, எதுவும் செய்து விட முடியாது. தமிழகத்தில், அ.தி.மு.க.,வினர் நடத்தும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், அவரது உருவப் படம் தான் பெரிய அளவில் இடம் பெறும். அந்தளவிற்கு கட்சியையும், நிர்வாகிகளையும் ஆளுமை செய்த அவரது உருவச் சிலை, அவரது மறைவிற்கு பின், யாரும் வாங்க ஆர்வம் காட்டாததால், சிலைகளை வடிவமைத்தவர்கள், இன்று ஊர், ஊராக சென்று, கூவி, கூவி விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லுார், காக்குடூர் கிராமத்தில், சிற்ப சிலை கூடம் உள்ளது. இவர்கள், அம்மாநிலத்தில், என்.டி.ஆர்., ராஜசேகரரெட்டி என, ஆந்திர மாநில பிரபல அரசியல்வாதிகளின் சிலையை வடிவமைத்து உள்ளனர். தமிழகத்தில் பிரபலமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வின் சிலையை வடிவமைத்தால், விற்பனையாகும் எனக் கருதியவர்கள், அவரது உருவச் சிலையை, மெழுகு, பைபர், போன்ற பல்வேறு கலவை பொருட்களால் வடிவமைத்தனர். ஆனால், ஒரு சிலை கூட விற்பனையாகவில்லை.


இதையடுத்து, சிலை வடிவமைப்பாளர்கள், ஜெயலலிதா சிலையை ஊர், ஊராக சென்று விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து சிலை வடிவமைப்பாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் மாபெரும் தலைவராக இருந்தவர் என்பதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்தோம். இது குறித்து, தமிழகத்தில் உள்ள, அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், யாரும் எங்களை நாடி சிலை வாங்க வரவில்லை. இதையடுத்து, அவரது சிலையை விற்பனை செய்ய, வாகனங்களில், 60 சிலைகளை கொண்டு வந்துள்ளோம். எங்களிடம், 45 ஆயிரம் இருந்து, 1.35 லட்சம் ரூபாய் வரையிலான சிலைகள் உள்ளன. வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் சிலையை வாங்கினார். அதன் பின், ஒரு சிலை கூட விற்பனையாகவில்லை. தொடர்ந்து, பிற மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளோம். உயிருடன் இருந்த போது, கடவுள் போல் கொண்டாடப்பட்டவர், இறந்த பின் சீண்டுவாரில்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024