Sunday, December 31, 2017

பொங்கல் பரிசு தொகுப்பு 10 லட்சம் பேர் ஏமாற்றம்

Added : டிச 31, 2017 02:39





பொங்கல் பரிசு அறிவிப்பால், 10 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், தமிழக அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு ஆகிய பிரிவுகளில் இருந்த, ரேஷன் கார்டுகள், தற்போது, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என, பிரிக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும், மேற்கண்ட கார்டுகளுக்கு, வழக்கம் போல், அதே பிரிவில், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.பொங்கலை முன்னிட்டு, முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், காவலர் கார்டுகள் உட்பட, 1.84 கோடி அரிசி கார்டுகளுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு ஆகிய பரிசு தொகுப்பை, அரசு அறிவித்துள்ளது. இதனால், சர்க்கரை கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில், பாரபட்சமின்றி, அனைத்து கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள், நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சில ஆண்டுகளாக, 10 லட்சம் சர்க்கரை கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதில்லை. அந்த கார்டு வைத்திருப்பவர்களிலும், பலர் ஏழைகளாக உள்ளனர். எனவே, சர்க்கரை கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரேஷன் கடைகளில், முறைகேட்டை தடுக்க, தற்போது, ரேஷன் பொருட்கள் விற்பனை விபரம், எஸ்.எம்.எஸ்., செய்தி வாயிலாக, சம்பந்தப்பட்ட கார்டுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், பொங்கல் பரிசு வினியோக விபரமும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024