Saturday, December 30, 2017

விடைபெறும் 2017: கவனம் ஈர்த்த நட்சத்திரங்கள்

Published : 29 Dec 2017 10:42 IST

க. நாகப்பன்




தமிழ் சினிமா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் திரையுலகுக்குப் புது நம்பிக்கையைக் கொண்டுவருகிறது; புது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. ஓராண்டில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 1,000-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்தாலும் அதில் மிகச் சிலரே தங்கள் நடிப்பின் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெறுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த திரை முகங்கள்.


விஜய் சேதுபதி


இந்த ஆண்டில் தெறிக்கவிட்ட மாஸ் நடிகர் விஜய் சேதுபதிதான். ‘விக்ரம் வேதா’ படத்தில் வடையைக் கையில் வைத்துக்கொண்டு கெத்தாகக் காவல் நிலையத்துக்குள் நுழையும் அந்த மாஸ் சீன் அவருக்கு மிகச் சரியாக எடுபட்டது. ரவுடிக்கான உடல் மொழியுடன் கம்பீரம் காட்டியது, உணர்வுபூர்வமான தருணங்களில் நெக்குருகியது, துரோகம் உணர்ந்து பழிதீர்த்தது என அழுத்தம் மிகுந்த கதாபாத்திர வார்ப்பில் விஜய் சேதுபதி மிளிர்ந்தார்.


கார்த்தி

வழக்கமான போலீஸ் ஹீரோவுக்கான அம்சங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையான போலீஸ் அதிகாரியின் இயல்பை, குணநலனைப் பிரதிபலித்திருந்த விதத்தில் கச்சித நடிப்பை வழங்கி நல்ல முன்மாதிரியாகத் திகழ்ந்தார் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் தீரன் திருமாறன் ஐ.பி.எஸ்ஸாக நம்பவைத்த கார்த்தி.


விஜய்

‘மெர்சல்’ படத்தில் மேஜிக் நிபுணர், மருத்துவர், கிராமத்து இளைஞர் என மூன்று கதாபாத்திரங்களுக்கும் தேவையான வித்தியாசங்களை விரும்பி ஏற்றிருந்தார் விஜய். தோற்றம், நடிப்பு, ஆக்ஷன், வசன உச்சரிப்பு என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களுக்குத் தேவையான நிறைவைக் கொடுத்தார்.


சத்யராஜ்

‘பாகுபலி 2’ -ல் கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் எல்லையற்ற பரிமாணங்களில் அசத்தினார். பிரபாஸுடன் கள்ளம் கபடமில்லாமல் பழகுவது, ராஜாமாதாவின் கட்டளைக்குப் பணிவது, ‘தவறு செய்துவிட்டாய் சிவகாமி’ எனச் சுட்டிக்காட்டுவது, பாகுபலியைக் கொன்ற பிறகும் அன்பைப் பொழிவது எனத் தனக்கான காட்சிகள் அத்தனையிலும் முத்திரை பதித்தார்.


ராஜ்கிரண்

ராஜ்கிரணைக் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களிலும் பார்த்தாகிவிட்டது. இன்னும் என்னிடம் வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கின்றன என்று ‘ப.பாண்டி’யில் ரசிக்கவைத்தார். முன்னாள் காதலியை நினைத்து உருகி, அவரைத் தேடிச் செல்லும் பயணத்தில் மாறா அன்பில் திளைக்கும் கதாபாத்திரமாகவே தெரிந்தார்.


நயன்தாரா

நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் சாகச அம்சம் அதிகமில்லாத ‘அறம்’ படத்தில் கதாபாத்திரத்துக்கான நடிப்பை மட்டும் தந்தார். சிறுமியை மீட்கப் போராடும்போது பெற்றோரின் உணர்வைத் தூண்டிவிடக் கூடாது என்பதற்காகத் தன் உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் நயன்தாரா சிறுமி மீட்கப்பட்ட பிறகு உடைந்து அழும் அந்த ஒற்றை அழுகையால் பார்வையாளர்களை உலுக்கினார் மக்களின் ஆட்சியர் மதிவதனியாக களத்தில் நின்ற நயன்தாரா.


ஆன்ட்ரியா

தரமணி படம் முழுக்க ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பைக் கொடுத்தார் ஆன்ட்ரியா. தவறான கண்ணோட்டத்துடன் தன்னை அணுகும் மனிதர்களை அவர் எதிர்கொண்ட விதத்தில் பாராட்டை அள்ளினார். அம்மா, காதலி, ஐ.டி.யில் வேலை பார்க்கும் பெண் போன்ற எல்லாப் பரிமாணங்களிலும் சுயசார்போடும் சுயமரியாதையோடும் அதே நேரத்தில் கனிவோடும் உயர்ந்து நின்றார்.


அதிதி பாலன்

‘அருவி’ படத்தில் நம்ப முடியாத அளவுக்கு பிரமிக்க வைத்தார் அதிதி பாலன். குதூகலம், துயரம், ரவுத்திரம் என எதுவாக இருந்தாலும் தண்ணி பட்ட பாடு என்று எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டார். ஒரே பெண்ணைச் சுற்றி நடக்கும் கதையில் ஒட்டுமொத்த வலியையும் வலிமையையும் உணர்த்திய அதிதியின் நடிப்பில் இயல்பும் எளிமையும் இறுதிவரை இழையோடியது.


அனுஷ்கா

‘பாகுபலி 2’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரம் சரிவைச் சந்தித்தது என்றால் அனுஷ்கா கதாபாத்திரம் உயர்ந்து நின்றது. ‘கைதியாக வரமாட்டேன்’ என நாயகனிடம் சுயமரியாதையுடன் பேசுவது, ஒரு வரம் கேட்பது போல, பரிசு வேண்டும் எனக் கணவனை அரியாசனத்தில் அமரச் சொல்வது, கசப்பான அனுபவங்களையும் பக்குவமாக எதிர்கொள்வது, எல்லோரும் அஞ்சும் ரம்யாகிருஷ்ணனிடம் எதிர்த்து அறம் பேசுவது எனப் படம் முழுக்க ஜொலித்தார் அனுஷ்கா.


அருண் விஜய்

அருண் விஜய் சினிமாவுக்கு வந்து 22 வருடங்களைக் கடந்துவிட்டார். ‘குற்றம் 23’ அவர் நடித்த 20-வது படம். போலீஸ் அதிகாரிக்கான தோரணை, கம்பீரப் பார்வை, நிதானமான அணுகுமுறை எனத் தான் ஒரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பதை ‘குற்றம் 23’ படத்தில் வெளிப்படுத்திய நிதானமான நடிப்பின் மூலம் உரக்கச் சொன்னார்.


சந்தீப் கிஷன்

‘அக்கட தேச’த்தில் அறிமுகமாகி ‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இடம்பெயர்ந்தவர் சந்தீப் கிஷன். ‘மாநகரம்’ படத்தில் நகரத்து இளைஞனின் மனவோட்டத்தை அப்படியே பிரதிபலித்தார். இன்றைய தன்னம்பிக்கை இளைஞனுக்கான பக்கா ‘கேரக்டர் ஸ்கெட்ச்’. காதலி ரெஜினாவின் அலட்சியத்தைத் தாங்கும் பக்குவம், தவறைத் தட்டிக் கேட்கும்போது வெளிப்படும் கோப முகம் என அசல் நடிப்புக்கான களம் என்பதை உணர்ந்து ‘மாநகரம்’ படத்தில் சந்தீப் ஈர்த்தார்.


ராமதாஸ்

‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’ ஆகிய இரு படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார் ராமதாஸ். ‘மாநகரம்’ படத்தில் நானும் ரவுடிதான் என நிரூபிப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகள் சொதப்பலில் முடிந்தாலும் அவர் கொடுத்த பில்டப்புகள் வெடித்துச் சிரிக்க வைத்தன. ‘மரகத நாணயம்’ படத்தில் சிறு கடத்தல்காரனாகவும், இறந்த பிறகு ஆவி புகுந்த கூடாகவும் இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தினார்.


ராஜகுமாரன்

சாந்தமே நிரம்பிய ஒரு ஜோக்கர் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு ‘கடுகு’ படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தமுள்ள விடையைத் தந்தார் ராஜகுமாரன். வசனம் பேசுவதிலும் உச்சரிப்பிலும் கொஞ்சம் நிதானமும் தயக்கமும் இருந்ததே என்று யோசித்தால், அதுவே ராஜகுமாரனின் வெகுளித்தனமான கதாபாத்திரத்துக்கான இயல்பான மொழியாக உருப்பெற்று அவரது நடிப்பை ஈர்த்தது.


எம்.எஸ்.பாஸ்கர்

ஒரு கலைஞனுக்கான மிகப் பெரிய சவால், தனக்கான இலக்கை அடையும்வரை காத்திருப்பதே. அந்தக் காத்திருப்பு கைவரப்பெற்றதால் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் மைல் கல்லைத் தொட்டிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். சமூகத்தால், குடும்பத்தால் ஒதுக்கப்படும் ஒரு முதிய ஆணின் வலியை, சோதனையை, வேதனையை, ஆவேசத்துடன் அபாரமாக வெளிப்படுத்தினார்.

பிரசன்னா

கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் பிரசன்னா இந்த ஆண்டு பிரகாசித்திருக்கிறார். ‘ப.பாண்டி’யில் அப்பாவின் வம்புகளால் தர்மசங்கடப்பட்ட பிரசன்னா, ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும் கொஞ்சம் சிரிங்க பாஸ் என்று சிம்ஹாவைக் கடுப்பேற்றுவது, அடி வாங்கிக்கொண்டிருந்தபோதும் புன்னகையுடன் மிரட்டுவது என பலே நடிப்பை வழங்கினார்.


அமலாபால்

குறும்புப் பெண், அன்பான மனைவி, கூடா நட்பில் சிக்கித் தவிக்கும் அபலைப் பெண், சொல்ல முடியாமல் மருகி நிற்கும் கையறு நிலை, சந்தர்ப்பத்தைச் சமாளிக்கும் திறன் என ‘மைனா’வுக்குப் பிறகு ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் தனக்குக் கிடைத்திருக்கும் வலுவான கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்த அமலாபால், பார்வையாளர்களை அட போட வைத்தார்.


விதார்த்

கதாபாத்திரத்தின் இயல்பான வாழ்க்கை முறைக்கும் கதைக்களத்துக்கும் முக்கியத்துவம் தரும் நம்பிக்கைக்குரிய விதத்தில் தடம் பதித்தார் விதார்த். ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ படங்கள் அதற்கு சாட்சிகள். வணிக சினிமாவின் கட்டுப்பாடுகள் குறித்து கவலைப்படாமல் மக்களில் ஒருவராகத் தனித்து நின்று, இயல்பு மீறா நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.


எஸ்.ஜே.சூர்யா

‘ஸ்பைடர்’ படத்தில் பார்த்ததும் பயப்படுகிற மாதிரியான மிரட்டலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதும், பிணத்தின் அருகில் நின்று அழும் நபர்களைப் பார்த்துச் சிரிக்கும் குரூரமான பாத்திரத்தில் குறை வைக்காமல் நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் பாத்திரப் படைப்பு விமர்சனத்துக்குட்பட்டதாக இருந்தாலும் நாயகன் மகேஷ்பாபுவைத் தாண்டியும் இவரது நடிப்பு பேசப்பட்டது.


பகத் ஃபாசில்

சினிமாவில் நடிகர்கள் சிலர் பக்கம் பக்கமாக வசனம் பேசி, தொண்டை வறள கருத்துச் சொல்லி ஸ்கோர் செய்வார்கள். ஆனால், அதெல்லாம் தேவையே இல்லை. எல்லாவற்றையும் அப்படியே தூக்கிச் சாப்பிடுவேன். நான் நடிகன்டா என்று விழிமொழியில் வியப்பை ஏற்படுத்தினார் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்த பகத் ஃபாசில். ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் தந்திர நடிப்புக்கு பகத் பளிச் உதாரணம்.


கவனம் பெறத் தவறியவர்கள்

போதிய களமும் கதாபாத்திரமும் அமைந்தும் கவனம் பெறத் தவறியவர்களின் பட்டியலில், விஜய் ஆண்டனி – ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ஜீவா – ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, விக்ரம் பிரபு – ‘சத்ரியன்’, ‘நெருப்புடா’, சிம்பு – ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, அதர்வா - ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’, ஜி.வி.பிரகாஷ் - ‘புரூஸ்லி’.


அசத்திய மேலும் சிலர்!

> நகைச்சுவை, காதல், குறும்புதான் தன் பலம் என நினைத்த சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ மூலம் தன் பாதையை தீர்மானித்திருக்கிறார். நீளமான வசனங்களை அசாதாரணமான திருத்தத்துடன் உச்சரித்து, பொறுப்புள்ள இளைஞனை கண்முன் நிறுத்தினார்.

> ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோ வைபவைவிட நடிப்பில் கவனம் ஈர்த்தார் விவேக் பிரசன்னா. அண்ணனின் நண்பனைக் காதலிக்கத் தொடங்கி, அந்த அவஸ்தையை அழகாகக் கடத்தி பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் பாஸ்மார்க் வாங்கினார் இந்துஜா.

> இறந்துபோன பிறகு ரவுடியின் ஆவி உடலுக்குள் புகுந்துகொள்வதால் அதற்கேற்ப உடல்மொழியை மாற்றி சிறப்பாக நடித்தார் ‘மரகத நாணயம்’ நிக்கி கல்ராணி.

> அறிமுகப் படத்தில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைத் தந்து, தோற்றாலும் ஜெயித்தாலும் ‘மீசைய முறுக்கு’ எனச் சொல்லி இளைஞர்களைச் சுண்டி இழுத்தார் ‘ஹிப் ஹாப்’ ஆதி.

> வாய் நிறையச் சிரித்தே கொடூரக் கொலை புரிந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் ‘குரங்கு பொம்மை’ இளங்கோ குமரவேல்.

> ‘நீ என்னை கொல்லப் போறதானே’ என்று வெகுளியும் வேதனையும் நிரம்ப உருக்கமான ஒரு கதையைச் சொல்லி உயிர் பலிக்கு சம்மதித்த ‘குரங்கு பொம்மை’ பாரதிராஜாவின் நடிப்பில் அப்படியொரு நம்பகம்.

> ‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் கண்டு பதைபதைக்கும் பெற்றோர் கதாபாத்திரத்தில் ராமச்சந்திரன் துரைராஜும் சுனுலட்சுமியும் மனதைக் கரைத்தனர்.

> இமிடேட் செய்வது, நகைச்சுவை என்ற பெயரில் அதீத உணர்வுகளை வெளிப்படுத்துவது என எந்த ரிப்பீட்டும் இல்லாமல் ‘பண்டிகை’ படத்தில் உயிரைப் பணயம் வைத்துச் சண்டையிடும் குத்துச்சண்டை வீரராக கிருஷ்ணா பொருத்தமாக நடித்தார்.

‘நெடுஞ்சாலை’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்த ஷிவதா ‘அதே கண்கள்' படத்தில் இரு விதமான பரிமாணங்களில் அதகளம் செய்தார்.

> ‘கருப்பன்’ படத்தில் அன்பின் அடர்த்தியிலும் கணவருடனான அந்நியோன்யத்திலும் ரசிக்கவைத்தார் தான்யா ரவிச்சந்திரன்.

> ‘நானும் மதுரைக்காரன்தான்டா’ என்று சத்தம் போடுவது, பஸ் ஏறி அடுத்த ஊருக்குச் சென்று வில்லன்களைப் புரட்டி எடுப்பது என்று வழக்கமான பாணியில் இருந்து விலகி, பாத்திரம் உணர்ந்து நடித்த ‘துப்பறிவாளன்’ விஷால் திரும்பியும் விரும்பியும் பார்க்கவைத்தார்.

> ‘வேலைக்காரன்’ படத்தில் மகனின் கனவு நனவாக உறுதுணை புரியும் அப்பாவாக, ‘பாம்பு சட்டை’ படத்தில் சாக்கடை அள்ளும் தொழிலாளியாக, ‘மாநகரம்’ படத்தில் திசை தெரியாமல் திணறும் ஆட்டோ ஓட்டுநராக என யதார்த்த நடிப்பில் முத்திரை பதித்தார் சார்லி.

> ‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு அசால்ட் நடிப்புக்குப் பெயர் போனவராகத் திகழும் மாதவன் ‘விக்ரம் வேதா’வில் நேர்த்தியான நடிப்பால் ஈர்த்தார்.

> தமிழ் சினிமாவின் சித்தரிப்பில் பாலியல் தொழிலாளி எப்படி இருப்பார் என்று இதுவரை ஆகிவந்திருக்கும் கட்டமைப்பைத் தனது நடிப்பின் மூலம் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தில் உடைத்தெறிந்தார் சாண்ட்ரா எமி.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024