Sunday, December 31, 2017

புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
 
மாமல்லபுரம் கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளித்தார். 
 
மாமல்லபுரம், 

மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தலைமையில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பிறகு புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு அன்று ஓட்டல் நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் விளக்கி கூறினார்.
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சாக்கில் சுற்றுலா வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் இரவு 12 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. குறிப்பாக கடற்கரை நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளவர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது. பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்கள் தரும் உணவு பண்டங்களை வாங்கக்கூடாது. மாமல்லபுரம் கடற்கரை சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாடத்தின்போது மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்
குற்ற செயல்களை கண்டுபிடிக்கும் வகையில் சாதாரண உடையிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் 10 தற்காலிக சோதனை சாவடிகள் மூலம் வாகன தணிக்கை செய்யப்படும்.

இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, மாமல்லபுரம் ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் சண்முகானந்தன், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024