Saturday, December 30, 2017

‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம் பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி முழக்கம் பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
 
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்ற பக்தி கோ‌ஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். 
 
சென்னை, 

மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியும், சிவாலயங்களில் திருவாதிரையும் குறிப்பிடத்தக்க விழாக்களாக அமைந்துள்ளன. 108 திவ்யதேசங்களில், ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் மிக சிறப்புக்குரியதாக அமைந்துள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில்களில் உள்ள பெருமாளை வழிபட்டு உள்ளனர். இந்த கோவிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.

இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19–ந் தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனமும், விஸ்வரூப தரிசனமும், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஏகாதசிக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியது. சொர்க்கவாசல் வழியே பெருமாளை தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு 12 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய காத்து நின்றனர். அதிகாலை 2.20 மணிக்கு ரூ.300 டிக்கெட் வைத்திருப்பவர்களும் கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் பார்த்தசாரதி பெருமாள் தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்தங்கி ரத்தின அங்கி அலங்காரத்துடன் மகா மண்டபத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளினார்.

அதிகாலை 4 மணிக்கு மேளதாளம் முழுங்க, வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை உச்சரிக்க, நம்மாழ்வாரின் செந்தமிழ் வேதம் எனப்படும் திருவாய்மொழி பாசுரம் பாடப்பட்டன. இந்த பாசுரத்திற்கு இடையே உற்சவர் மகாமண்டபத்தில் இருந்து உள்பிரகாரத்தில் வலம் வந்தார். அதன்பின், தங்கவர்ணம் பூசப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சொர்க்கவாசல் கதவுகளுக்கு அருகே பெருமாள் வந்தார்.
சரியாக காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சி தந்தார். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பார்த்தசாரதி பெருமாள், திருவாய்மொழி மண்டபத்திலுள்ள மண்டபத்தில் புண்ணிய கோடி விமானத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி கோ‌ஷம் எழுப்பினர். நேற்று நள்ளிரவு 11.30 மணி வரை மூலவர் தரிசனம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
இன்று (சனிக்கிழமை) முதல் ஜனவரி 6–ந் தேதி வரை மாலை 6 மணிக்கும், 7–ந் தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. கோவிலுக்கு வெளியே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

பக்தர்கள் பாதுகாப்புக்காக 4 மாட வீதிகளிலும் உயர் கோபுரங்கள், அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதுடன், கோவில் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு கீதை சுலோகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஷ்ப அங்கி சேவையில் பக்தர்களுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியே சென்றனர். இதையொட்டி பூமார் குழுவினரின் இன்னிசை, பஜனை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்தது. நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்திருந்தார்.
இதேபோல், தியாகராயநகரில் உள்ள திருமலை–திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். லட்டு, குங்குமம், கற்கண்டு மற்றும் ஆன்மிக புத்தகம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் கேசவபெருமாள் கோவில், கொடுங்கையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட சென்னையில் உள்ள பல பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்களுக்கு ரூ.300 கட்டண தரிசனம் மற்றும் அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்பட்டு இருந்தது. அனுமதி அட்டையில் வரவேண்டிய நேரம், எந்த வழியாக வரவேண்டும் போன்ற எந்த தகவலும் இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் பக்தர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நள்ளிரவு 2.30 மணிக்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் வயதான பெண் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிகாலையில் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

அதில் ஒரு சிலர் நரசிம்மர் சன்னதி கொடிமரம் அருகில் உள்ள வாசல் வழியாக வந்த அனுமதி அட்டை வைத்திருந்தவர்களிடம் அனுமதி அட்டையை வாங்கி கொண்டு உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற பக்தர்களிடம் அனுமதி அட்டை இல்லாததால் பலர் வெளியேற்றப்பட்டனர்.

வயதான பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய ஒவ்வொரு வாசலாக அலைக்கழிக்கப்பட்டனர். பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகாரத்தில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கி வயதான பல பெண் பக்தர்கள் பலர் தவறி கீழே விழுந்தனர். வரும்காலங்களிலாவது வயதான மற்றும் பெண் பக்தர்களுக்கு முறையான வசதியை அறநிலையத்துறை செய்துதர வேண்டும் என்று பெண் பக்தர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024