Saturday, December 30, 2017

பொங்கல் சிறப்பு பஸ்கள் அடுத்த வாரம் அறிவிப்பு

Added : டிச 30, 2017 04:46

சென்னை: 'பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு பஸ், ரயில்களில் முன்பதிவு செய்ய, பயணியர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து இயக்கப்படும், சிறப்பு பஸ்களுக்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது:


பொங்கல் பண்டிகை, ஜன., 14ல் கொண்டாடப்படுகிறது.இதற்காக, வரும், 11 முதல், 14ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களில் இருந்து வெளியூர் செல்லவும், 16 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும், 2,275 பஸ்களுடன், மூன்று நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக, 5,000 பஸ்கள் இயக்கப்படும்.


ஜன., 8 முதல், சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். சென்னையில், பண்டிகை கால போக்குவரத்து நெரிசலை குறைக்க, அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, தாம்பரம் சானடோரியம் ஆகிய இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, ஜன., 4 அல்லது 5ல், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


'லீவு'க்கு தடை


பண்டிகை நாட்களில், பஸ் சேவை பாதிக்காமல் இருக்க, ஓட்டுனர், நடத்துனர்கள், ஜன., 10 முதல், 17 வரை, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024