Thursday, December 28, 2017

தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்குவது மார்ச் மாதம் அமலுக்கு வரும்




ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி மார்ச் மாதம் அமலுக்கு வரும் என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 28, 2017, 04:00 AM

திருமலை,
திருமலையில் உள்ள அன்னமயபவனில் தேவஸ்தான மூத்த அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க, கடந்த 18–ந்தேதியில் இருந்து 23–ந்தேதி வரை திருமலையில் 14 இடங்களில் 117 கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையின் மூலமாக தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட் டோக்கன்) வழங்கப்பட்டது. முதல் ஐந்து நாட்கள் மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது. 23–ந்தேதி 18 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தைப் பற்றி ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் மூலமாக பக்தர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு பக்தர்கள், இந்தத் திட்டம் சிறப்பாக உள்ளது, அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என 90 சதவீதம் பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு கொடுத்து முடிந்ததும், அந்தத் தரிசன அனுமதி சீட்டு கிடைக்க பெறாத திவ்ய தரிசன பக்தர்கள் பலர் திருமலைக்கு வந்து தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டையை பெற்று விரைவில் சாமி தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையை எடுத்து வராத பக்தர்கள் பலர் வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் சென்று ஏழுமலையானை தரிசித்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க ஒரு பக்தருக்கு 33 வினாடிகள் ஆகிறது. 33 வினாடிகளை மேலும் குறைத்து இன்னும் குறைந்த நேரத்தில் தரிசன அனுமதி அட்டை வழங்க கம்ப்யூட்டர் மென்பொருள் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் நிரந்தரமாக அமலுக்கு வரும்.

திருமலையில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களைபோல், திருப்பதியிலும் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்படும். திருப்பதியில் எங்கெங்கு கவுண்ட்டர்களை அமைக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டு உள்ளோம். திருப்பதியில் தரிசன அனுமதி அட்டை வழங்க விரைவில் கவுண்ட்டர்கள் அமைக்கும் பணியை என்ஜினீயர்கள் தொடங்குவார்கள்.

இவ்வாறு அனில்குமார் சிங்கால் பேசினார்.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...