Saturday, December 30, 2017

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற நாளில் இருந்து மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பின்பற்றத்தக்கவையாக இருக்கிறது. 
 
மிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற நாளில் இருந்து மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பின்பற்றத்தக்கவையாக இருக்கிறது. ‘தன்னை பார்க்கவரும் யாரும் மாலையோ, பொன்னாடையோ அணிவிக்கவேண்டாம்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டார். மிக எளிமையான பன்வாரிலால் புரோகித் விமான பயணம் மேற்கொள்ளும்போது, உயர்வகுப்பில் பயணம் செய்வதில்லை. ‘எகானமி’ வகுப்பில்தான் பயணம் செய்கிறார். தனி விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ அவர் பயணம் செய்வதில்லை. சமீபத்தில் அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காக சென்றபோது ரெயிலில்தான் பயணம் செய்தார். இதேபோல, சேலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் பயணம் செய்தார். அவரைப்போலவே இப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தான் பணியாற்றும் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிக்காக எந்த கிராமம் என்றாலும் சரி, எந்தஊர் என்றாலும் சரி, தன்னுடைய அரசு காரில் பயணம் செய்வதில்லை. அரசு பஸ்சில் சாதாரண பயணிகளோடு பயணம் செய்கிறார்.

மாவட்ட கலெக்டரே பஸ்சில் பயணம் செய்யும்போது, மற்ற அதிகாரிகளும் பஸ்சில்தான் பயணம் செய்யும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு பெட்ரோல் செலவு மிச்சம் என்று ஒருபக்கம் கூறினாலும், கலெக்டர், ‘‘மக்களோடு மக்களாக’’ அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது, உடன் பயணம்செய்யும் பயணிகள் அல்லது பஸ் நிலையத்தில் கலெக்டரை பார்க்கும் பொதுமக்கள் தங்கள் குறைகளையெல்லாம் அவரிடம் அங்கேயே சொல்லிவிடுகிறார்கள். கலெக்டரும், மக்களிடம் நேரடியாகப்பேசி, அவர்களுக்குள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்கிறார். கவர்னர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் இவ்வாறு பொது போக்குவரத்தை பயன்

படுத்தும்போது, நிச்சயமாக பொதுமக்களும் அவ்வாறு பயணம் மேற்கொள்வதை பெருமையாக கருதுவார்கள். ஏற்கனவே ரெயில்வேயில் உயர்அதிகாரிகள் மாதம் ஒருமுறை அலுவல் ரீதியாக ரெயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கவர்னர் வழிகாட்டினார். கடலூர் கலெக்டர் அவரைப்போல அரசு பஸ்சில் பயணம் செய்கிறார். கவர்னரும், மாவட்ட கலெக்டரும் நல்ல ஒரு முன்னுதாரணத்தை செய்துகாட்டுகிறார்கள். மக்களுக்காக பணியாற்றுபவர்கள் மக்களோடு பயணம் செய்யும்போது, அவர்கள் பிரச்சினைகளை அறிந்து நிறைவேற்றுவதற்கான முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை தினந்தோறும் பெருமளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் மாசு ஏற்படுகிறது. நம்நாட்டில் பெட்ரோல், டீசல் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. பொது போக்குவரத்தை எல்லோரும் பயன்படுத்தினால் இறக்குமதி செலவும் குறையும். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார். டெல்லியில் நடந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து விரிவாக்கத்தை தொடங்கிவைத்து அதில் பயணம் செய்யும்போது, பொதுமக்களும் தங்கள் சொந்த மோட்டார் வாகனங்களில் பயணம் செய்யாமல், பொது போக்குவரத்தில் பயணம் செய்தால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைப்பதாகவும் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024