Saturday, December 30, 2017

ராஜபாளையம் வணிகவரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : துப்புரவு ஊழியரிடம் ரூ. 25 ஆயிரம் பறிமுதல்

Added : டிச 30, 2017 05:26

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 


துப்புரவு ஊழியரிடமிருந்து ரூ. 25 ஆயிரம் பணமும், அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோட்டில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் முதல் 1 கோடி வரை வரவு செலவு செய்யும் சிறு, குறு நிறுவனங்களின் கணக்குகள் கீழ் தளத்தில் இயங்கும் அலுவலகத்திலும், ரூ. ஒரு கோடிக்கு மேல் வரவு செலவு செய்யும் பெரு நிறுவனங்களின் கணக்குகள் மாடியில் உள்ள அலுவலகத்திலும் தாக்கல் செய்யப் படுவது வழக்கம்.


வணிக நிறுவனங்கள், ஆண்டுக்கணக்கை டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை. செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தால், தாமத பதிவு என்ற பெயரில் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் நேற்று பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கணக்குகளை சமர்ப்பிக்க வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட வரித்துறை அலுவலர்கள், பதிவு செய்து கொடுக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.


துப்புரவு ஊழியரிடம் ரூ.25 ஆயிரம் பறிமுதல்


இது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி சீனிவாச பெருமாள் தலைமையில்அதிகாரிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட துணை ஆய்வு குழுவினர் வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் துப்புரவு பணியாளர் செந்தில்நாதன் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 25 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும், மேல் விசாரணை நடைபெறும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் சோதனையை அடுத்து கணக்குகள் பதிவு செய்யும் பணிகள் நிறுத்தப் பட்டன. கணக்குகளை தாக்கல் செய்ய வந்தவர்களிடம், செவ்வாய்க்கிழமையும் அபராதமின்றி தாக்கல் செய்யலாம் எனக்கூறி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...