Wednesday, December 27, 2017

‘ரஜினி கடவுள் மாதிரி; அரசியலுக்கு வேண்டாம்’

Published : 27 Dec 2017 09:53 IST
சென்னை









சென்னையில் நேற்று ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், வரும் 31-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறினார். ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து, அவரது ரசிகர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

என்.ராமதாஸ் (சென்னை ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத் தலைவர்)

‘நான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன்’ என்று வரும் 31-ம் தேதி ரஜினிகாந்த் சொல்லும் வார்த்தைகள்தான் எங்களுக்கு புத்தாண்டு பரிசு. ‘ஒரு கிளாஸ் டீ, ஒரு கட்டு பீடி இருந்தால் போதும். திமுக தொண்டர்கள் நேரம் காலம் பார்க்காமல் கட்சிப் பணிகளை செய்வார்கள்’ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். அதுபோல்தான் ரஜினியின் தொண்டர்களும். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி தலைவருக்காக அரசியல் சார்ந்த வேலைகளைச் செய்ய காத்திருக்கிறோம்.

எம்.வீரமணிகண்டன் (திருநெல்வேலி தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்ற நிர்வாகி)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி. இதனால் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரும். அரசியலில் அவர் தனித்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் சூழ்நிலை கருதி கூட்டணி அமைத்தாலும் ரசிகர்கள் அதை ஏற்பார்கள். ஜெயலலிதாவுக்காகத்தான் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். அதுபோல் ரஜினிகாந்துக்காக, அவர் அடையாளம் காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்.

ஜே.பி.ரவி (ரஜினி ரசிகர் மன்ற சிவகங்கை மாவட்ட தலைவர்)

‘தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது. போர்க்களத்தில் சந்திப்போம்’ என கடந்த முறை அறிவித்தபோதே அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தற்போதைய சந்திப்பிலும் அதன் வெளிப்பாடு தெரிகிறது. வரும் 31-ம் தேதி அரசியல் நிலைப்பாட்டை அவர் உறுதியாக அறிவிப்பார். திமுகவை மக்கள் நம்பவில்லை. அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. மக்கள் ஒரு நல்ல தலைவரை எதிர்பார்க்கின்றனர். இந்த சாதகமான சூழ்நிலையை ரஜினி பயன்படுத்திக்கொள்வார்.


பி.அழகர் (மதுரை பெத்தானியாபுரம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எப்படி செயல்படுவது என்பது வரை ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் கற்றுக்கொண்டு வருகிறோம். வரும் 31-ம் தேதி அரசியலுக்கு வருவதைப் பற்றி தெளிவாக சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

ஏதோ ஒரு நெருக்கடியில் அவர் அவசர கதியில் அரசியல் கட்சியை அறிவித்து விடக்கூடாது. அரசியலுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திவிட்டு அதன்பிறகுதான் கொடியை, கட்சியை அறிவிக்க வேண்டும்.அப்போதுதான் வெற்றிபெற முடியும்.

கே.பாலசுப்பிரமணியம் (மாவட்ட அமைப்பாளர், கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம்)

தற்போதைய அரசியலில் ஒரு மாற்றம் தேவை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியலை சுத்தம் செய்ய ரஜினி முன்வர வேண்டும். தேசிய மனப்பான்மை கொண்ட அவர், யாரையும் குறை கூறாமல், நல்ல கொள்கைகளை முன்வைத்து, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார். எனினும், பல சிரமங்களையும் சந்திக்க நேரிடும். அவற்றை எதிர்கொண்டு, நல்லாட்சி கொடுப்பார் என நம்புகிறோம்.

என்.நவநீதன் (மதுரை மாவட்ட ரஜினி மன்ற முன்னாள் ஆலோசகர்)

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் நிச்சயம் அறிவிக்க மாட்டார். ரசிகர்களுடனான சந்திப்பை உற்சாகப்படுத்தவே இதுபோன்று அவர் பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலுக்கும், ரஜினியின் குணத்துக்கும் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது. அவரால் அரசியலில் வெற்றி பெறவும் முடியாது. 1996-ல் மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னரும் சில வாய்ப்புகள் தேடி வந்தன. இதையெல்லாம் பயன்படுத்த தவறிவிட்டார். தமிழருவி மணியனை அடிக்கடி சந்திப்பதாலும் அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதாலும் அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற மாயை மட்டுமே உருவாகியுள்ளது.

எம். குட்டிமணி (ரஜினி ரசிகர், திருச்சி)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டாரா என ஆண்டுக்கணக்கில் ஏங்கி காத்திருந்தோம். அந்த காலகட்டத்தில், அவர் அதற்கான எந்த முயற்சியுமே எடுக்கவில்லை. இப்போது அவர் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், இங்குள்ள அரசியல் சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை.

அவருக்கு எதிராக அரசியல் ரீதியான விமர்சனங்களை வைப்பதைவிட, தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு பெயர், புகழை கெடுப்பதற்காக இங்கு பெரும்கூட்டம் தயாராக உள்ளது. அவர்களுக்கு இரையாகிவிடக்கூடாது. அத்துடன் மாவட்டந்தோறும் ரசிகர் மன்றங்கள் 2, 3 பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. அனைவருக்குமே பதவி ஆசை உள்ளது.

எனவே, என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. மீறி வந்தால், கடந்த 40 ஆண்டு காலமாக திரையுலகில் சம்பாதித்து வைத்துள்ள நற்பெயரை, அரசியல் என்னும் சாக்கடை மூலம் கெடுத்துவிட நேரிடலாம். ரஜினியை நாங்கள் தலைவராக காட்டிலும், கடவுள் மாதிரியே பார்க்கிறோம். அவர் இப்படியே இருந்துவிட வேண்டும், அரசியலுக்கு வர வேண்டாம் என்பது என் விருப்பம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024