Sunday, December 31, 2017

சென்னையில் வசிக்கும் முதியோருக்கே இலவசப் பேருந்து பயணச்சீட்டு

By  சென்னை,  |   Published on : 31st December 2017 02:14 AM 
Buspass
சென்னையில் வசிக்கும் முதியோருக்கு மட்டுமே இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.
 சென்னை மாநகர போக்குவரத்துக் கழக குளிர் சாதன வசதிகள் இல்லாத அனைத்து பேருந்துகளிலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதில், மாதந்தோறும் ஒருவருக்கு 10 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மாநகரப் பேருந்து நடத்துநரிடம், இந்த டோக்கன்களை கொடுத்து, கட்டணம் இல்லாமல் தாங்கள் விரும்பும் இடத்துக்கு முதியோர் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தால் சென்னையில் 1.93 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதியோருக்கு பயணச்சீட்டு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்து முதியோர்கள் அவதியடைந்து வருகின்றனர்.


 அதேபோல அடையாறு, பெசன்ட்நகர், கிண்டி போன்ற பகுதிகளில் உள்ள மாதாந்திர பயணச்சீட்டு வழங்கும் கவுன்ட்டர்களில் இலவச பேருந்துப் பயணச்சீட்டை வாங்குவதற்காக முதியோர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருப்பதால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.


 மாதத்தின் கடைசி 10 நாட்களில் மட்டும் தான் முதியோருக்கான இலவசப் பேருந்து பயணச்சீட்டுகள் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த குறிப்பிட்ட நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காக மாதம் முழுவதும் இத்தகைய பேருந்துப் பயணச்சீட்டுக்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.


 இது குறித்து விளக்கமளித்து மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது:
 சென்னை மாநகராட்சி மற்றும் அதன் எல்லைப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கு மட்டுமே இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படும். இத்திட்டத்தில் முதியவர் ஒருவருக்கு 3 மாதத்துக்கான 30 டோக்கன்கள் வழங்கப்படும். அந்தப் பயணச்சீட்டை குறிப்பிட்ட மாதத்துக்கு அந்தப் பயனாளி பயன்படுத்திக்கொள்ளலாம். பயணச்சீட்டுகள் காலாவதியாகும் ஒரு வாரத்துக்குள் அடுத்த காலாண்டுக்கான பயணச்சீட்டு டோக்கன்களை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் எந்தவித காலக்கெடுவும் வைக்காமல் மாதத்தில் அனைத்து வேலை நாட்களிலும் இந்தப் பயணச்சீட்டு வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான பயண அட்டை, வேலைக்குச் செல்வோருக்கான மாதாந்திர பயண அட்டை என பல்வேறு பயண அட்டைகளை வழங்கி வருகிறோம். ஆனால் இலவசப் பயணச்சீட்டைப் பயன்படுத்தும் முதியோர்கள், அதை பெறுவதற்கு கடைசி மூன்று நாட்களில் அதிகமாக வருகின்றனர். அதேவேளையில் இந்த நாள்களில் ஒரு நாளைக்கு குறைந்தது மாதாந்திர மற்றும் இலவச பயணச்சீட்டு பெறுவதற்கு பயணச்சீட்டு கவுன்ட்டர்களுக்கு 900 பேர் வருகின்றனர். இதனால் நீண்ட வரிசையில் முதியோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு முதியோர்கள், ஒவ்வொரு காலாண்டின் கடைசி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து அடுத்த காலாண்டுக்குரிய 30 டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024