Thursday, December 28, 2017

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 4.5 லட்சம் இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்

By DIN  |   Published on : 28th December 2017 01:01 AM  | 

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, 4.5 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 'கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 117 நாடுகளில் 4,52,109 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்; அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 23,234 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல, வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் மீது நிகழாண்டில் 21 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
26,000 வழக்குகள் நிலுவை: மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி சுமார் 26 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) அரசுத் துறைகளிடம் மனு செய்யும் ஒருவர், உரிய தகவல்கள் கிடைக்கப் பெறாத பட்சத்தில், இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளிக்கவோ, மேல்முறையீடு செய்யவோ முடியும். இவ்வாறான 26,449 வழக்குகள் மத்திய தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 34,982-ஆக இருந்தது என்றும், 2015-16 காலகட்டத்தில் பல்வேறு மத்திய அரசுத் துறைகளுக்கு ரூ.10.52 லட்சம் வரை மத்திய தகவல் ஆணையம் அபராதம் விதித்தது என்றும் அவர் தெரிவித்தார்.


4,694 இணையதள முகவரிகளுக்கு தடை: குழந்தைகளைப் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தும் விடியோ, புகைப்படங்களைக் கொண்ட சுமார் 4,694 இணையதள முகவரிகளை (யுஆர்எல்) தடை செய்யும்படி, இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்களவையில் கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இதனை தெரிவித்தார். மேலும், உரிய தொழில்நுட்பங்களின் மூலம் அந்த இணையதள முகவரிகளை தடை செய்யும் பணியை இணையச் சேவை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


ஆராய்ச்சிப் படிப்பு திட்டத்தில்...: எம்.ஃபில், பிஎச்டி போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வதற்கு, இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் மாணவர்களுக்கு உதவுவதற்காக, மௌலானா ஆஸாத் தேசிய ஆராய்ச்சிப் படிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


இத்திட்டத்தின்கீழ் திருநங்கைகளும் பயன்பெற முடியும். எனினும் கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு திருநங்கை மட்டுமே இத்திட்டத்தில் பயனடைந்திருப்பதாக, மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024