Saturday, December 30, 2017

சர்க்கரையில்லா ஐஸ்கிரீம் அறிமுகம்! : ஆவின் நிறுவனத்தின் புத்தாண்டு 'ஸ்பெஷல்'

Added : டிச 30, 2017 04:46

ஆவின் நிறுவனம், புத்தாண்டை முன்னிட்டு, முட்டையில்லா கேக் விற்பனை, சர்க்கரை சேர்க்காத ஐஸ்கிரீம் போன்ற, புதிய பொருள்கள் விற்பனையில் இறங்கியுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான, ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை, விற்பனை செய்து வருகிறது.

ஆவினின் வருவாயை பெருக்கும் விதமாக, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, புத்தாண்டை முன்னிட்டு, குறைவான விலையில், முட்டையில்லா கேக் விற்பனையை, ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, ஆவின் மேலாண்மை இயக்குனர் காமராஜ் கூறியதாவது: ஆவினின் வருவாயை பெருக்குவதற்காக, சிங்கப்பூருக்கு, இதுவரை, மூன்று கண்டெய்னர்களில், பால் ஏற்றுமதி செய்துள்ளோம். தற்போது, புத்தாண்டை முன்னிட்டு, முட்டை சேர்க்காத கேக், அறிமுகப்படுத்தி உள்ளோம். அந்த கேக் வகைகள், ஆவின் பாலகங்களில், 250 கிராம், 200 ரூபாய்; 500 கிராம், 350 ரூபாய்; 1 கிலோ, 700 ரூபாய் என, விற்பனை செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை சேர்க்காத, ஐஸ் கிரீம், உணவக விற்பனைக்காக, 500 கிராம் பன்னீர், 400 கிராம் தயிர், ஆகியவையும் அறிமுகம் செய்ய உள்ளோம்.மேலும், சிங்கப்பூரில், ஆவின் நெய், பட்டர், தயிர், பால்கோவா போன்ற பொருட்களை, விற்பனை செய்வதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. ஆவின் பொருள்களை, சிங்கப்பூரில் விளம்பரப்படுத்த, தமிழ் வானொலியான, 'ரேடியோ ஜிங்கிள்' என்ற, வானொலியில் விளம்பரம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.

-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024