Sunday, December 31, 2017

அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்: அழிவின் பிடியில் சர்க்கஸ் தொழில்

சேலம்: ''கரணம் தப்பினால் மரணம்'' என்ற சொல்லுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர்கள் சர்க்கஸ் கலைஞர்கள். உடலை வில்லாக வளைத்து, அந்தரத்தில் தொங்கி, அதிரடியாக விழுந்து, மிருகங்களோடு மல்லுக்கட்டி மனங்களை மகிழ்ச்சி அலைகளில் மிதக்க விடுபவர்கள் இவர்கள். இப்படி லட்சக்கணக்கான இதயங்களை தன்வசம் ஈர்த்த சர்க்கஸ் கலை, காலத்தின் சுழற்சியால் ெமல்ல மெல்ல அழிவின் கரம் பற்ற ஆரம்பித்துள்ளது. அதை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான கலைஞர்கள் எதிர்காலம் குறித்த கவலைகளுடன் கலங்கி நிற்கின்றனர். இந்தியாவில் 1950ம் ஆண்டு தான், சர்க்கஸ் சாகசங்களின் தொடக்க காலம். அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்கு அடுத்த ெபரும் பொழுதுபோக்கு அம்சமாக சர்க்கஸ் விளங்கியது. யானைகள் கால்பந்து விளையாடுவதும், சிங்கங்கள் சாதுவாக சொன்னதை கேட்பதும், குரங்குகள் சைக்கிள் ஓட்டுவதும் வியப்பின் உச்சம் தொட்டது. கைதேர்ந்த கலைஞர்கள் இதனை செய்து காட்டி, அரங்கம் அதிரும் கைதட்டல்களை ெபற்றனர்.

இதேபோல் உயரம் குறைந்த மாற்றுத்திறன் மனிதர்கள், இந்த சர்க்கஸ் அரங்குகளில் பபூன்கள் என்ற பெயரில் வலம் வந்து, விலா நோக சிரிக்க வைத்து மனிதர்களின் மனஅழுத்தத்திற்கு மருந்து போட்டனர். இப்படி சுடர்விட்டு ஜொலித்த சர்க்கஸ் கலை, கடந்த சில வருடங்களாக தேய்பிறையாய் மாறி வருகிறது. வீட்டு வரவேற்பறையில் டிவி, உலகத்தை கைக்குள் அடக்கும் செல்போன், மிருகங்களை வைத்து வித்தை காட்ட விதிக்கப்பட்ட தடை என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் சர்க்கஸ் கம்பெனிகளின் உரிமையாளர்கள். இது குறித்து ஜம்போ சர்க்கஸ் கம்பெனி மேனேஜர் டைட்டஸ் வர்கீஸ், ஒருங்கிணைப்பாளர் அபுதாகீர் ஆகியோர் கூறியதாவது: சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் உடலை வருத்தி, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர். ஆனால், சமீபகாலமாக இந்த கலையின் மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆயிரம் பேர் பார்க்க வேண்டிய அரங்கில், அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே இருக்கிறார்கள். காட்டு மிருகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பின்னர், சர்க்கஸ் கம்பெனி நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பொழுதுபோக்கு அம்சத்தில் சிங்கம், புலி, கரடி உள்ளிட்டவைகளை காண சிறுவர்கள் அதிகளவில் வருவார்கள்.

தற்போது குதிரை, ஒட்டகம் மட்டுமே உள்ளது. மற்ற மிருகங்கள் இல்லாததால், குழந்தைகள் மற்றும் பார்வையாளர்களின் வருகை வெகுவாக சரிந்து விட்டது. ஒரு சர்க்கஸ் குழுவில் குறைந்தபட்சம் 150 கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு ேதவையான மூன்று வேளை உணவு, மருத்துவ செலவு, இருப்பிடம், போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கிடும் போது குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு 1லட்சம் வருமானம் வேண்டும். ஆனால், தற்போது இதில் பாதி தொகை கூட வசூல் ஆவதில்லை. இதனால் சர்க்கஸ் கம்பெனி உரிமையாளர்களும், அதை நம்பியுள்ள கலைஞர்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். உயிரை பணயம் வைத்து நடத்தும் இந்த கலை, அழிவின் பிடியில் செல்வது வேதனைக்குரியது. அற்புத சாகசங்களுக்கும், அரிய கலைக்கும் மக்கள் கரம் கொடுத்து தூக்கி விட்டால் மட்டுமே, காலம் கடந்து சர்க்கஸ் கூடாரங்கள் நிலைத்து நிற்கும். இவ்வாறு உரிமையாளர்கள் கூறினர்.

90 சதவீத கம்பெனிகள் மூடல்
இந்தியாவில் பரசுராம், பாம்பே, இந்தியன், கமலா, ஜெமினி, ஜம்போ, ஜமுனா என 200க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்ெபனிகள் இருந்தன. தற்போது 22 சர்க்கஸ் கம்பெனிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. 90 சதவீதம் கம்பெனிகள் மூடப்பட்டு விட்டன. அவற்றில் பணிபுரிந்த சர்க்கஸ் கலைஞர்கள் பலர், வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் சர்க்கஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக சரியும். அப்போது மீதமுள்ள கம்பெனிகளும் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். இத்தொழிலை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மிகவும் பாதிக்கும். எனவே, சர்க்கஸ் கலையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். சர்க்கஸ் கலைஞர்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும்
இந்த கலைஞர்களின் கோரிக்கை.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024