Saturday, December 30, 2017

எம்.ஜி.ஆர்., போல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்: ரஜினி

சென்னை: ''பணம், புகழ், பதவியை விட, எம்.ஜி.ஆரை போல் நல்ல குணத்தோடு வாழ்ந்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார்.



சென்னையில், தன் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, நேற்று நான்காவது நாளாக, கோவை, திருப்பூர், வேலுார் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது: இன்னும், இரண்டு நாளில் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என, ரசிகர்களாகிய உங்களுக்கு, நான் வாழ்த்து கூறுகிறேன். கோவை, எனக்கு மிகவும் முக்கியமான ஊர்.

என் குரு, சச்சிதானந்தர், மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.அவர் தான், எனக்கு மந்திர உபதேசம் செய்தார்.

அவர் சொல்லி தான், பாபா படம் எடுத்தேன். சச்சிதானந்தரின் குரு, அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, ஆன்மிகத்தை பரப்பு என்றார்.இன்று, பல நாடுகளில் சச்சிதானந்தரின் ஆசிரமங்கள், ஆன்மிகத்தையும், யோகாவையும் கற்றுத் தருகின்றன. சச்சிதானந்தர் இறக்கும் போது, நான் தான் கடைசியாக, அவரை பார்த்தேன். அந்த பாக்கியம், எனக்கு கிடைத்த பெருமை. அதேபோல், தயானந்த சரஸ்வதியும், எனக்கு ஒருகுரு.

கோவை விமான நிலையம் வரும்போது, ஒரு சம்பவம், அப்போது, அண்ணாமலை படம் வெளியான நேரம்; குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக, நான் விமானத்தில் கோவை சென்றிருந்தேன்.உடன் சிவாஜியும் இருந்தார். விமான நிலையம் சென்றதும், ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து, 'வாழ்க' கோஷமிட்டனர். சிவாஜி உடன் இருக்கும்போது, எனக்கு சங்கடமாக இருந்தது.

ஆனால், சிவாஜி, என்னை தட்டிக் கொடுத்து, 'எங்கடா நழுவுற... வா முன்னாடி வா...

இது, .உன் காலம்; நன்றாக உழை; நல்ல படங்களை கொடு... என் காலம் போய் விட்டது' என்றார்.என் காரை முதலில் வரவழைத்து, என்னை அனுப்பி வைத்தார். நடிப்பை தாண்டி, நல்ல குணங்களை கொண்டவர், சிவாஜி.பணம், புகழால் மதிப்பு தான் வரும்; மரியாதை வராது. நல்ல குணாதிசயங்களை கொண்டதால் தான், எம்ஜிஆர்., இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

நாம் அனைவரும், நல்ல குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கோவை விமானநிலையம் சென்றபோது, என்னை சிலர் தடுத்து, 'இப்போது வெளியே வர வேண்டாம்; ஒரு நடிகர் வந்திருக்கிறார்.'அவரை பார்க்க, ஆயிரக்கணக் கான ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர் போன பின், நீங்கள் வரலாம்' என்றனர்.

அப்போது தான் சிவாஜி கூறியது, ஞாபகம் வந்தது. அந்தந்த காலத்தில் அனைத்தும் மாறும். மாற்றம் வருவதை, யாராலும் தடுக்க முடியாது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரும். காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ரஜினியிடம், 'தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளை எதிர்த்து போட்டி இடுவீர்களா?' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் கூற, ரஜினி மறுத்து விட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024