Saturday, December 30, 2017

மருத்துவ கல்வியை முடித்த பட்டதாரிகள், டாக்டராக தொழில் புரிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

டிசம்பர் 30, 2017, 05:30 AM

புதுடெல்லி, 

தற்போது, மருத்துவ கல்வியை நிர்வகிப்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளது. அதற்கு பதிலாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முழுமையான ஆய்வுக்காக மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் வற்புறுத்தினர். ஆனால், அவர்களின் ஆட்சேபனையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். ‘மசோதா தாக்கல் செய்யப்படுவதை எதிர்க்க, முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.

அப்போது, ஜே.பி. நட்டா, ஒரு பாராளுமன்ற குழுவின் சிபாரிசுகள், இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ தொழில் குறித்து புகார்கள் எழுந்து வருவதால், மருத்துவ கல்வி துறையில் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்தில், இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. மருத்துவ கல்வியை முடித்தவர்கள், டாக்டராக தொழில் புரிவதற்கான உரிமம் பெற புதிய தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால்தான், இந்த உரிமம் வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவ கல்வி நிறுவனங்கள், புதிய சீட்களை சேர்த்துக் கொள்வதற்கோ, முதுகலை மருத்துவ படிப்புகளை தொடங்குவதற்கோ அனுமதி பெறத்தேவை இல்லை என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மசோதாவின்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற 4 அமைப்புகள் அமைக்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளை நடத்துதல், மருத்துவ கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து, அங்கீகாரம் அளித்தல், டாக்டராக பணிபுரிய பதிவு செய்தல் ஆகிய பணிகளை இந்த 4 அமைப்புகளும் செய்யும்.

தேசிய மருத்துவ ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கும். 4 தன்னாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களை மந்திரிசபை செயலாளர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும். தேர்வுக்குழுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 5 உறுப்பினர்களும், அலுவல்நிலை உறுப்பினர்கள் 12 பேரும் இடம்பெறுவார்கள் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024