இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்...
By அருணன் கபிலன் | Published on : 29th December 2017 01:26 AM |
உலகில் எல்லா உயிரினங்களும் போராடியே வாழ்கின்றன. அவற்றின் போராட்டங்களில் முதன்மையானது உணவுக்காகத்தான். கானக வாழ்க்கையில் மற்ற உயிர்கள் தங்களுக்கான உணவை இயல்பாகவே பெற்றுவிடுகின்றன. ஆனால் மனிதர்களுடனான சமூக வாழ்வில் அவை உழைத்தோ, தேடியோதான் பெற முடிகிறது. மற்ற விலங்குகளுக்கு உணவு எளிதாகக் கிடைத்து விடுவதைப்போல மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒருநாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் மிகக்குறைவே.
நகர வாழ்வில் மனிதர்கள் படும்பாடு அதிகம். அதிலும் உணவுக்காக அவர்கள் கையேந்தி நிற்பது கொடுமையிலும் கொடுமை. பச்சிளம் குழந்தைகளைக் கையிலேந்தி நிற்கிற தாய்மார்களிலிருந்து தொடங்கி சிறுவர்கள், பெண் பிள்ளைகள், முதிய வயதுடைய ஆண்களும் பெண்களும் உணவுக்காக பிச்சைபெற நிற்கிறார்கள்.
இந்தியாவில் 6 இலட்சத்து 30 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும், தற்போது 3 இலட்சத்து 72 ஆயிரமாக அவர்கள் குறைந்திருக்கிறார்கள் என்றும், பிச்சை எடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள், வீடுகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்றும் ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது. இதில் 5,000 பேர் பட்டதாரிகள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
பிச்சையெடுப்பதை ஒரு குற்றமாகக் கருதித் தண்டனை வழங்கும் நடைமுறைகளும் இந்தியாவில் உண்டு. அண்மையில் ஹைதராபாத் நகரத்தில் பிச்சையெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் மட்டும் சுமார் 6,000 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இல்லாதவர்கள் கேட்கிற நிலைக்குப் பிச்சை என்று பெயர்; அது தர்மக் கணக்கில் சேரும். ஆனாலும் பிச்சையை இது ஆதரிப்பதாகக் கொள்ளுதல் கூடாது. ஈ என இரப்பது இழிவானதுதான் என்றாலும் ஈய மாட்டேன் என்று மறுப்பது அதனினும் இழிநிலைதானே என்று கேட்கிறது சங்கப்பாடல்.
பிச்சைக்கு முதற்காரணம் பசி என்றாலும் அதனுடைய மறுகாரணம் சோம்பல்தான். ''சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். ஆனால் பிச்சையென்று கேட்பவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை. வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை'' என்று பாரதியார் பிச்சையை எதிர்ப்பதைவிடவும், அதை ஒழிப்பதையே முன்மொழிகிறார்.
அவர் வேறு ஒரு பிச்சையைக் குறித்தும் பேசுகிறார். ''பிச்சைக்காரன் மட்டும்தானா சோம்பேறி? பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறையத் தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளைச் சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிற்றை நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியாதிருத்தலும், திருட்டும் கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வர் செய்யும் அநியாயம் அதிகம்'' என்று சினந்து சீறுகிறார் பாரதியார்.
அவர் உறுதியாகக் குறிப்பிடுவது, ''ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். ஏழைகளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கினவேயன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை'' என்று கவலை கொள்கிறார்.
பொருள் இருப்பவர்களைச் செல்வர்கள் என்றும் அது இல்லாதவரை ஏழைகள் என்றும் பிச்சைக்காரர்கள் என்றும் கருதும் இந்தச் சமூகத்தில் இல்லாதவர்கள் உருவாவதற்குக் காரணம் இருப்பவர்களே எனக் குறிப்பிடும் பாரதியார் அதற்குப் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் இருந்து ஒரு கதையையும் சான்றாகக் காட்டுகிறார்.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த மூத்த குமாரனாகிய காயீன், தனது தம்பியாகிய ஆபேலை விரோதத்தின் காரணமாகக் கொன்றுவிட்டான். அப்போது கடவுள் காயீனை நோக்கி, 'உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?' என்று கேட்டபோது காயீன் சொன்ன பதில் நம்மை இன்றைய சூழலில் நிறுத்திப் பார்க்கிறது. காயீன் கடவுளைப் பார்த்துத் திருப்பிக் கேட்டான்: 'அவனைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் என்ன அவனுக்குக் காவலாளியா?'
''உலகத்து செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கெடுத்துக் கொண்டு பெரும்பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா? என்று கேட்டால் அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? என்று கேட்கிறார்கள். நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா என்று கேட்கிறார்கள்'' என்று குறிப்பிடும் பாரதியார் மேற்சொன்ன காயீனின் பதிலோடு இதனை இணைத்துக் காட்டுகிறார்.
ஒரு மனிதனின் அதிக உடைமை மற்றொருவனிடமிருந்து திருடியது என்னும் பொருளில்தான் ப்ரூதோம் என்னும் பிரெஞ்சு ஞானி 'உடைமையாவது களவு' என்று குத்திக்காட்டுகிறார்.
தமிழ் இலக்கணம் பிறரிடம் ஒன்றைக் கேட்டுப் பெறுவதை ஈ, தா, கொடு என்னும் மூன்று சொற்களால் குறிப்பிடுகிறது. இந்த மூன்று சொற்களையும் நாம் பயன்படுத்துகிற நிலை வேறாக இருந்தாலும் அவை இன்றைய சமூகச் சூழலில் உள்ள நவீனப் பிச்சையைக் குறிப்பது வியப்பு.
ஈ என்று இரந்து கேட்டுப் பெறுவதும், தா என்று உரிமையோடு எடுத்துக் கொள்வதும், கொடு என்று அதிகாரத்தைக் காட்டிப் பறித்துக் கொள்வதும்- ஆகப் பிச்சையின் வேறு நிலைகள்தானே? ஊழலையும் இலஞ்சத்தையும்தான் அச்சொற்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றனவோ என்ற ஐயமும் தோன்றுகிறது. இந்தப் பிச்சை, தர்மம் என்பதற்கு எதிரான அதர்மமாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறது எனலாம்.
திருவள்ளுவர் கடவுளையே பழிக்கும் விதமாக 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்' என்று குறிப்பிடுவது எந்தப் பிச்சையை என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. பசிக்காக இரப்பவர்களைப் பார்த்து அவர் சினந்திருக்க மாட்டார். பொருள்வெறி கொண்டு கடமையைச் செய்வதற்காகக் கையூட்டை எதிர்பார்க்கும் கயமையைக் கண்டு பொங்கித்தான் 'இப்படி இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்' என்று குறிப்பிட்டு, படைத்தவனையே நொந்து, 'பரந்து கெடுக உலகியற்றியான்' என்று சபிக்கிறார் போலும். அந்தப் பிச்சை ஒழியுமா?
No comments:
Post a Comment