Sunday, December 31, 2017

எனக்கு ஏற்பட்ட அவமானங்களும் வேதனைகளும் சொல்லில் அடங்காதவை: தங்கர் பச்சான் வருத்தம்!

By DIN | Published on : 30th December 2017 01:05 PM

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய படம் - களவாடிய பொழுதுகள். பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பரத்வாஜ். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

வெளியீட்டுச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த படம் நேற்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

இன்று எனக்கு விடுதலை! என்னால் இதை நம்ப முடியவில்லை!! விடுதலை இதோ கிடைத்துவிடும், இதோ கிடைத்துவிடும் என பலமுறை எதிர்பார்த்து ஏமார்ந்து போனதால் இந்த உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது.

என்ன குற்றம் செய்தேன்? எதற்காக சிறை படுத்தப்பட்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை! எப்படியாவது சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறி விடலாம் என எல்லா திசைகளிலும் முட்டி மோதிப் பார்த்ததால் முழு உடலும் கண்ணிப்போயிருக்கிறது. இரத்தக்கட்டுகளால் உறைந்து கிடக்கிறது.

இதுவரை நான் பணியாற்றிய எல்லாப் படங்களிலும் உழைத்த உழைப்பை எல்லாம் சேர்த்து இந்த ஒரு படத்தில் மட்டும் செலுத்தியிருக்கிறேன். அதற்காக இன்று வரை எனக்கு ஏற்பட்ட அவமானங்களும், சோதனைகளும், வேதனைகளும் சொல்லில் அடங்காதவை.

கருவை உருவாக்கி அதைக் கதையாக்கி பின் அதற்கு திரைக்கதை அமைத்து ஒவ்வொரு தயரிப்பாளராகத் தேடித் பிடித்து, ஒவ்வொரு நடிகரையும் சந்திக்க அலைந்து ஒரு வழியாக அவர்களைப் பிடித்து படப்பிடிப்பு தொடங்குவதே, மக்களின் வாழ்விலிருந்தே படைப்புக்களை உருவாக்கும் என் போன்றவர்களுக்கு பெரும் போராட்டம் தான்.

“களவாடிய பொழுதுகள்” திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிகளும், சந்தித்த சம்பவங்களும், மீண்டும் நினைக்க விரும்பாத மனிதர்களும், வெளியில் காண்பித்துக்கொள்ளாத அவமானங்களும் பட்டியலிட முடியாதவைகள்.

திரைப்படக்கலையின் மூலம் எதையாவது இந்த மக்களுக்கு சொல்லலாம் என நினைத்துத்தான் இந்தத் துறைக்கு வந்தேன். பணம் மட்டுமே போதும் என நினைத்திருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டுக்கு இரண்டு படங்களை எடுத்து பெரும் பணக்காரனாக மாறியிருப்பேன்! எப்படியாவது வாழ்ந்தால் போதும் என நினைக்காமல் இப்படித்தான் வாழ வேண்டும் என நினைப்பதால்தான் ஒவ்வொரு படைப்புக்காகவும் தொடர்ந்து முதல் படம் போலவே உழைத்து போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு மனதோடும் சென்று அவர்களோடு உரையாட வேண்டிய இப்படத்தின் கதைப் பாத்திரங்கள் உயிரற்றவர்களாக கிடந்தார்கள்! இனி உங்கள் மனதோடு அவர்கள் பேசுவார்கள். அவர்களின் நினைவுகள் சில நாட்களுக்கு உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்! படம் பார்த்த பின் எத்தனைப்பேர் ஒருவருக்கும் தெரியாமல் யார் யாரைத்தேடி அலைவார்கள், சந்திக்க முயல்வார்கள், கைப்பேசியில் பேச முயல்வார்கள், தனிமையில் அழுவார்கள் என்பதெல்லாம் நடக்கத்தான் போகிறது.



நான் சிறைப்படுத்தப்பட்ட இத்தனைக் காலங்கள் எல்லாவற்றையும் எனக்குள்ளேயே புதைத்து அழித்துக்கொள்ள முயல்கிறேன்! அதற்காக முயன்று கொண்டிருக்கிறேன்!

எது எப்படியோ எனக்கு விடுதலை கிடைத்து விட்டது. நான் கூறியபடி என் பொற்செழியனும், ஜெயந்தியும் உங்கள் மனதோடு இனி பேசுவார்கள்; தொந்தரவு செய்வார்கள்! அப்போது என்னைத்திட்டுங்கள். அதுதான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்றதற்காக எனக்கு நீங்களெல்லாம் அளிக்கும் ஆறுதல் என்று எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024