தீர்ப்பு எப்போ வரும்; எப்படி வரும்? 'டென்ஷனில்' தவித்த வட்டாரங்கள் Added : ஜூன் 15, 2018 02:21
அப்பப்பா... எவ்ளோ டென்ஷன்; 18 பேர், தங்களுடைய சுயலாபத்திற்காக செய்த காரியத்தால், நேற்று மாநிலமே, பரபரப்பின் உச்சத்துக்கு சென்று, இயல்புக்கு திரும்பியது.
சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கிளம்பி, அவரை மாற்றக் கோரி, கவர்னரிடம் மனு அளித்தனர். அவர்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
எதிர்பார்ப்பு
வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று, தீர்ப்பு வெளியாக உள்ளது என, நேற்று முன்தினமே தகவல் தெரிந்ததால், மக்களிடம் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்படுத்தி விட்டன, 'டிவி' சேனல்கள்.'தீர்ப்பு, யாருக்கு சாதகமாக இருக்கும்; சபாநாயகர் முடிவு செல்லும் என அறிவித்தால், என்ன நடக்கும்; செல்லாது என அறிவித்தால், என்ன நடக்கும்' என, சமூக வலைதளங்களிலும் விவாதம் சூடு பிடித்தது.ரயில், பஸ், டீக்கடை, மார்க்கெட் என, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம், இதே விவாதம். தீர்ப்பு இப்படித் தான் இருக்கும் என, ஆளாளுக்கு ஆரூடம் கூற, அனைவரிடமும் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.
சபாநாயகர் தீர்ப்பு செல்லும் என அறிவித்தால், 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும் என்பதால், அப்பகுதி மக்கள், மற்றவர்களை விட, மிகுந்த ஆவலுடன், தீர்ப்பை எதிர்நோக்கினர்.'சபாநாயகர் தீர்ப்பு செல்லும்' என்கிற மாதிரி, தீர்ப்பு வர வேண்டும் என, கடவுள்களை வேண்டினர். அவர்கள் மனக்கண்ணில், ஆர்.கே.நகர் கவனிப்பு வந்து சென்று, துாக்கத்தை கெடுத்தது.
சபாநாயகர் தீர்ப்பு செல்லாது என்றால், ஆட்சி கவிழும் அபாயம். இதனால், தீர்ப்பு எப்படி வருமோ என, ஆளும் கட்சி, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதற்றம்.'காக்கா தவற விடும் வடையை, கவ்வ தயாராக இருக்கும் நரி' போல, எதிர்க்கட்சியினர், ஆட்சி கவிழ்ப்பை எதிர்பார்த்திருப்பதால், அவர்களுக்கும் டென்ஷன்.
ஆலோசனை
தீர்ப்பு எப்படி அமையும் என, 'டிவி'க்களில் நடந்த விவாதம், அரசியல்வாதிகளை மட்டுமின்றி, சாதாரண மக்களின், 'பிபி'யையும் எகிற வைத்தது.காலை, 11:00 மணிக்கு தீர்ப்பு, என்றனர்; பின், மதியம், 1:00 மணிக்கு தீர்ப்பு, என்றனர். தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, தினகரன், தன் வீட்டில், நேற்று காலை, கூட்டத்தை கூட்டினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களில் பலர் வரவில்லை. உடனே, 'ஆளும் கட்சிக்கு சாதகமாக, தீர்ப்பு வர உள்ளதால் தான், அவர்கள் வரவில்லை' என, அவரிடம் சிலர் சொல்ல, தினகரனுக்கும், பி.பி., எகிறியது.சட்டசபைக்கு வந்திருந்த முதல்வர், அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள், தீர்ப்பை அறிந்து கொள்ள, ஆர்வமுடன் இருந்தனர்.
இருக்கையில் இருப்பு கொள்ளாமல் தவித்தனர். எதிர்க்கட்சியினர், தீர்ப்பு அரசுக்கு எதிராக அமையும் எனக் கருதி, உற்சாக மூடில் இருந்தனர்.சட்டசபையில் இருந்து, திடீரென முதல்வர் வெளியேறினார். அதைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் மூத்த அமைச்சர்கள் வெளியேற, சட்டசபையில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பார்வையாளர்களிடம், பரபரப்பு அதிகரித்தது.
முதல்வர், தன் அறைக்கு சென்று, தலைமைச் செயலர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன், ஆலோசனை நடத்தினார்.ஒவ்வொருவரும் தீர்ப்பை எதிர்நோக்கினர். தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும், தங்கள் வேலையை மறந்து, தீர்ப்பை அறிய, 'டிவி' முன், தவம் கிடந்தனர்.
ஏமாற்றம்
உயர் நீதிமன்ற வளாகத்திலும் அதே பரபரப்பு; வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வந்தவர்கள், பத்திரிகையாளர்கள் என, அனைவரும் தீர்ப்பை அறிய ஆவலோடு காத்திருந்தனர்.மதியம், 1:00 மணிக்கு தீர்ப்பு என்ற நிலையில், 'ஏழாவதாகத் தான் இந்த வழக்கு வருகிறது' என்ற தகவல், சிலருக்கு கசப்பை தந்தது.பதவி இழந்த, எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு யுகம் போல் இருந்தது. பெரும்பாலானோர் உணவை மறந்து, விசாரித்தபடி இருந்தனர். மதியம், 1:35 மணிக்கு, தீர்ப்பு வெளியானது.
இரண்டு நீதிபதிகளும், வெவ்வேறு முடிவுகளை அறிவிக்க, தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், காற்று போன பலுான் போல், ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், டென்ஷன் குறைந்து, சகஜ நிலைக்கு திரும்பினர். தீர்ப்பை பொறுத்து, 'ஆளும் கட்சிக்கு போகலாமா; தினகரனுடன் இருக்கலாமா' என்பதை, முடிவு செய்ய காத்திருந்த, பதவி இழந்த எம்.எல்.ஏ.,க்கள், பாவம் நொந்து போயினர்.
இனி வழக்கு, மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு செல்லும்; அதில், எப்போது தீர்ப்பு வரும்; அதுவரை, ஆளும் கட்சியினர் மகிழ்ச்சியாக இருக்கலாம். தமிழக மக்கள், அடுத்த டென்ஷனுக்கு, இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
- நமது நிருபர் -