Friday, June 15, 2018


‘3013-ம்ஆண்டுக்கு’ இப்போதே டிக்கெட் வழங்கிய ரயில்வே; பயணியை அவமானப்படுத்தியதால் அபராதம்

Published : 14 Jun 2018 18:25 IST

சஹாரான்பூர்



உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் பயணி ஒருவருக்கு வழங்கிய டிக்கெட்டில் 3013-ம் ஆண்டு என்று தவறாக அச்சடித்துக் கொடுத்து, அவருக்கு அபராதம் விதித்து, நடுவழியில் இறக்கிவிட்டதால், ரயில்வேக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் சஹாரான்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்னு காந்த் சுக்லா(வயது73) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சஹரான்பூரில் இருந்து ஜான்பூருக்கு ஹிம்கிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட்டுடன் பயணித்தார்.
 
அப்போது டிக்கெட் பரிசோதகர் சோதனையிட்ட போது, விஷ்னு காந்த் சுக்லா வைத்திருந்த ரயில் டிக்கெட்டை காண்பித்தார். அப்போது, அதில் 2013-ம் ஆண்டு என அச்சிடுவதற்குப் பதிலாக 3013-ம் ஆண்டு என்று தவறுதலாக அச்சிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் போலியான டிக்கெட்டில் பயணித்துள்ளீர்கள் என சுக்லாவிடம் கூறியுள்ளார். ஆனால், ரயில்வே அச்சடித்த டிக்கெட்டில் ஆண்டு தவறாக உள்ளது, அதற்கு நான் பொறுப்பா எனக்கேட்டு வாதிட்டுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர், சுக்லாவிடம் ரூ.800 அபராதமும் பெற்றுக் கொண்டு நடுவழியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.



3013-ம் ஆண்டு என்று அச்சடித்து கொடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்

ஆண்டை தவறாக அச்சிட்ட ரயில்வேயால் தான் தண்டனை அனுபவித்ததை எண்ணி சுக்லா வேதனை அடைந்தார். இது குறித்து சஹரான்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரயில்வே மீது வழக்குத் தொடர்ந்தார். ஏறக்குறைய 5 ஆண்டுகள் வழக்கு நடந்து வந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், டிக்கெட்டில் உள்ள ஆண்டை மாற்றி அச்சிட்டது ரயில்வேயின் தவறு என்பது தெளிவாகிறது. ஆனால், அதற்குப் பொறுப்பு ஏற்காமல், சுக்லாவை டிக்கெட் பரிசோதகர் அவமானப்படுத்தி இருக்கிறார். அதற்கு சுக்லா அபராதமும் செலுத்தி இருக்கிறார். ஆதலால் கடந்த 5 ஆண்டுகள் மனுதாரர் அனுபவித்த மனஉளைச்சளுக்கு ரயில்வே ரூ. 10 ஆயிரமும், அவருக்கு இழப்பீடாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இது குறித்து சுக்லா ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், நான் ஓய்வு பெற்ற இந்தி பேராசிரியர். சஹாரான்பூரில் உள்ள ஜே.வி.ஜெயின் கல்லூரில் பணியாற்றினேன். ஒரு கவுரமான பணியில் இருந்த நான் எப்படி போலியான டிக்கெட் தயாரித்து பயணிக்க முடியும். என்னை அனைவரின் முன் அப்போது டிக்கெட் பரிசோதகர் அவமானப்படுத்திவிட்டார்.

ரூ.800 அபராதமும் பெற்றுக்கொண்டார். என் நண்பருடைய மனைவி இறந்துவிட்டதால், அவரைக் காணச் சென்று கொண்டு இருந்தேன்.இந்த சம்பவத்தால், என்னால் உரிய நேரத்துக்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து மன உளைச்சல் அடைந்து, ரயில்வே மீது வழக்கு தொடர்ந்தேன். 5 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நீதி கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024