சாதி பெயரில் ஓட்டல் நடத்துவதில் தவறில்லை; அரசியலமைப்பு சட்டத்தில் இடமுண்டு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை
Published : 14 Jun 2018 07:59 IST
சாதி பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை. கடைகளுக்கு விரும்பிய பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் ஓட்டல் செயல்படுகிறது. இந்த கடையின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் 2012-ல் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக 112 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 112 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
கடைகளுக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் 19(1) (ஏ) மற்றும் 19 (1) (ஜி) பிரிவு உரிமை வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலையிட முடியாது.
இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால். இந்த ஓட்டலில் அவ்வாறு இல்லை.
மதுரையில் கோனார் மெஸ், முதலியார் இட்லி கடை என குறிப்பிட்ட சமூகங்கள், சாதிகளை குறிப்பிடும் வகையில் பல ஓட்டல்கள் உள்ளன. சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் பேக்கரி, காபி கடைகள் இருக்கின்றன. புதுச்சேரியில் ரெட்டியார் மெஸ் உள்ளது. இந்த மெஸ்சில் கல்லூரியில் பயிலும் காலங்களில் சாப்பிட்டுள்ளேன். இதனால் சாதி பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை.
மனுதாரர்கள் பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை. இதனால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டியதில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment