பேரறிவாளனை விடுவிக்க முடியாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்
சென்னை
Published : 15 Jun 2018 17:41
பேரறிவாளனை விடுவிக்கமுடியாவிட்டால் அவரை நீங்களே கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 1991-ம் ஆண்டு முதல் 27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனில்லாமல் போனது.
உச்ச நீதிமன்றம், தமிழக அரசு, மத்திய அரசு இறுதியில் குடியரசுத் தலைவர் என கோரிக்கைகள் பல இடங்களில் வைக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. தற்போது நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுவிக்குமாறு தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நேற்று நிராகரித்துள்ளார்.
இது குறித்து ராம்நாத் கோவிந்த், "ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு உடன்படவில்லை. குடியரசுத் தலைவர் என்ற முறையில் இதுபோன்ற விஷயங்களில் நான் எனது அமைச்சர்களின் ஆலோசனைப்படிதான் நடக்க இயலும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனம் உடைந்தார். பேரறிவாளன் விடுதலையை என் வாழ்நாளில் பார்ப்பேனா? என்று சமீபத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் பேரறிவாளன் விடுதலை குறித்து உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார்.
இந்நிலையில் அற்புதம்மாள் வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தினம் தினம் துடிப்பதை விட மத்திய அரசே அவரைக் கருணைக் கொலை செய்யலாம். மத்திய அரசின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம்” என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
மேலும், குடியரசுத் தலைவர் இந்த வழக்கில் இப்போது வருவது ஏன்? என கேள்வி எழுப்பிய அற்புதம்மாள், குடும்பத்துடன் கருணைக் கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் மனு அளிக்க முடிவெடுத்துள்ளார்.
No comments:
Post a Comment