அன்றாடம் 3 வேளை உணவுக்கு பலர் திண்டாடும் நிலையில், 10 ரூபாய்க்கு 2 வேளை உணவும், தங்குமிடமும் ஹைதராபாத்தில் அளிக்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள சேவா பாரதி என்ற அமைப்பு, நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், குடும்பத்தாருக்கு 10 ரூபாய்க்கு உணவும், தங்குமிடத்தையும் மக்களுக்கு அளித்து வருகிறது.
இது குறித்து சேவா பாரதி அமைப்பின் செயலாளர் நரசிம்ம மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
நாங்கள் இந்தச் சேவை அமைப்பைத் தொடங்கி இருக்கும் நோக்கமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், அவரின் குடும்ப உறவினர்களுக்காகத்தான். இதே வர்த்தக நோக்கில் தொடங்காமல் சேவை நோக்கில் தொடங்கி கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறோம்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எங்களிடம் வந்து, நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக ஒரு சிறிய ஓய்விடம் அமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாங்கள் சிறிய அளவிலான தங்குமிடத்தை அடுத்த 3 மாதங்களில் அமைத்துக் கொடுத்தோம். அப்போது 10 பேர் மட்டுமே வந்து தங்கினார்கள்.
ஆனால், இப்போது நாள் ஒன்றுக்கு 250பேர் வரை தங்குகிறார்கள். வாரத்துக்கு 7 ஆயிரம் பேர்வரை வருகிறார்கள். இன்று முதல் நாங்கள் 10 ரூபாயில் மதிய உணவும், காலை உணவும் வழங்குகிறோம். வெகுதொலைவில் இருந்து வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் இங்குத் தங்கி, 10 ரூபாயில் இரு வேளை உணவு சாப்பிடலாம் எனத் தெரிவித்தார்.
இங்குத் தங்கி இருக்கும் விஜய லட்சுமி என்ற பெண் கூறுகையில், நான் ராமோஜி திரைப்பட நகரில் இருந்து வருகிறேன். இது ஹைதராபாத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. எனக்கு முதுகு தண்டுவடத்தில் வலி இருப்பதால், தொடர்ந்து மருத்துசிகிச்சை எடுக்க வேண்டியது இருக்கிறது. என்னால் ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்க வசதியும் இல்லை. ஆனால், இங்கு இலவசமாகத் தங்குமிடமும், 10 ரூபாய்க்கு இரு வேளை உணவும் கிடைக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது. 2 நாட்களாகத் தங்கி இருக்கிறேன் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.
இங்குத் தங்கிக்கொள்கிறேன், குளிப்பது, சாப்பிடுவதும் சுத்தமாக இருக்கிறது, பாதுகாப்பாகவும் இருக்கிறது. நாட்டில் நீண்ட தொலைவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு வரும் மக்கள் இங்கு வந்து தங்குகிறார்கள். 10ரூபாய்க்கு சாப்பாடும், தங்குமிடமும் கிடைப்பதால், வேறு எதைப்பற்றியும் யோசிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்தார்
No comments:
Post a Comment