Friday, June 15, 2018

நள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்... வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர் 

எம்.குமரேசன்

கேரளாவைச் சேர்ந்த ஆதிரா என்ற இளம்பெண் இன்டிகோ விமான நிறுவனத்தில் கஸ்டமர் கேர் பிரிவில் பணி புரிகிறார். கொச்சியிலிருந்து ஜூன் 2-ம் தேதி இரவு 9.30 மணியளவில் திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் அவர் பயணித்தார். கொல்லம் மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலத்தில் ஆதிரா இறங்க வேண்டும். சங்கரமங்கலத்தைப் பேருந்து அடையும்போது, நள்ளிரவு 1.30 மணி. பிற பயணிகள் உறக்கத்தில் இருந்தனர். நள்ளிரவில் இளம்பெண் ஒருவரைத் தனியாக விட்டுச் செல்ல பேருந்தின் கண்டக்டர், டிரைவருக்கு மனம் வரவில்லை. `உங்களை அழைத்துச் செல்ல யாராவது வருகிறார்களா' என்று ஆதிராவிடம் கேட்டுள்ளனர்.



சகோதரர் வந்துகொண்டிருப்பதாக அவர்களிடத்தில் கூறிய ஆதிரா பேருந்தைவிட்டு இறங்கியிருக்கிறார். ஆதிரா இறங்கிய பின்னும் பேருந்து நகரவில்லை. அங்கேயே நின்றுகொண்டிருந்தது. ஆதிராவின் சகோதரர் 10 நிமிடம் கழித்து வந்தார். அதுவரை, அந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. சகோதரருடன் அவர் புறப்பட்ட பின்னரே, பேருந்து நகர்ந்தது. முகம் தெரியாத பயணிக்கு உதவிய மனதிருப்தியோடு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி மீண்டும் ஓடியது. சில நாள்களும் ஓடின.

திடீரென்று அந்தப் பேருந்து ஓட்டுநர், கண்டக்டர்ருக்கும் பல முனையில் இருந்தும் வாழ்த்து குவிந்தது. என்ன ஏதுவென்று தெரியாமலேயே பேருந்தை ஓட்டிய கோபக்குமாரும் ஷிஜூவும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். இருவருக்கும் வாழ்த்துக் குவிய காரணம்... ஆதிராவின் ஃபேஸ்புக் பதிவு. ''நள்ளிரவில் தன் பாதுகாப்புக்காகப் பேருந்து நின்றது குறித்து தன் பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார். `அந்தச் சமயத்தில் என்னால் அவர்கள் இருவருக்கும் நன்றி கூற முடியவில்லை. அதனால், ஃபேஸ்புக் வழியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார். ஆதிராவின் ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆக, கே.எஸ்.ஆர்.டி.சி தலைமை செயல் அதிகாரி டாமின் தக்கன்சேரியிலிருந்து சாதாரண மக்கள் வரை கோபக்குமாரும் ஷிஜூவும் பாப்புலர் ஆகிவிட்டனர்.

சிறு உதவி என்றாலும் தக்க சமயத்தில் செய்த உதவி அல்லவா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024