மாவட்ட செய்திகள்
சேலத்தில் 2-வது நாளாக கனமழை; 1,500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம் சேலத்தில் 2-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் 1,500 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜூலை 03, 2018, 06:45 AM
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்து வருகிறது. மாலையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 9.20 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழையின் போது பயங்கர காற்று வீசியதால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
பின்னர் விடிய, விடிய கனமழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து ஊர்ந்து கொண்டே சென்றன.
சேலம் களரம்பட்டி, பச்சப்பட்டி, நாராயண நகர், அஸ்தம்பட்டி, சங்கர் நகர், பெரமனூர், சன்னியாசி குண்டு, அண்ணா நகர், பொன்னம்மாபேட்டை புதுத்தெரு, சூரமங்கலம் சுப்பிரமணிய நகர், அம்மாபேட்டை என மாநகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவும், அது நிரம்பியதாலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகள் மற்றும் தெருக்களில் முட்டியளவை தாண்டியும் தண்ணீர் நின்றதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அவர்கள் பாத்திரங்களில் நிரப்பி வெளியே கொண்டு ஊற்றினர். இதனால் விடிய, விடிய தூங்காமல் பொதுமக்கள் தவித்தனர்.
சிலருடைய வீட்டில் மழைநீரில் மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் நனைந்தன. புத்தகங்கள் நனைந்ததாலும், வீடுகளில் மழைநீர் புகுந்ததாலும் ஏராளமான மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. வீட்டு முன்பும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கின.
சேலம் கிச்சிபாளையம் நாராயணன் நகர், பச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தெருக்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து ஆறாக ஓடியது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக வேலைக்கு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாகவே காட்சியளித்தன.
மேலும் கடைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. கடை ஊழியர்கள் காலையில் பணிக்கு வந்ததும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழைநீரில் கடையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்கள் நனைந்துவிட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் புகுந்ததால் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் வாகனத்தின் உரிமையாளர்கள் எது? தன்னுடைய வாகனம் என்று தெரியாமல் எடுக்க முடியாமல் திணறினர்.
சிவதாபுரம் ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் சிவதாபுரம், சித்தர்கோவில், இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கியதால் இந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத்(வயது 16). 10-ம் வகுப்பு படித்துவந்த அவன் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினான். வீடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஓடையில் மாணவன் தவறி விழுந்தான். அவனை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை. முகமது ஆஷாத் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அந்த ஓடை பகுதியில் தேடி பார்த்தனர். சம்பவ இடத்துக்கு கிச்சிபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே சென்று மாணவனை தேடினர். நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தீயணைப்பு வீரர்கள் சிலர் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு ஓடைக்குள் இறங்கி மாணவனை தேடி பார்த்தனர். ஆனால் தண்ணீர் அதிகமாக சென்றதால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பணியை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் வீடுகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஓடை, சாக்கடை கால்வாய்களில் தூர்வாரும் பணியும் நடந்தது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக கலெக்டர் ரோகிணி காரில் அங்கு வந்தார். பின்னர் அவர் மாணவன் தவறி விழுந்த ஓடையை பார்வையிட்டார்.
இதையடுத்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் வீட்டுக்கு கலெக்டர் ரோகிணி சென்றார். அங்கு அவர் முகமது ஆசாத்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவருடைய காரை சிலர் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘கடந்த முறை மழை பெய்து வெள்ளம் வீடுகளில் புகுந்த போது ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் தூர்வாரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் தான் தண்ணீர் வாய்க்காலில் இருந்து வெளியேறி வீடுகளுக்கும் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம்‘ என்றனர்.
மேலும் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், கரையின் ஒரு பகுதி உடைந்தது. கன மழையினால் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர்குளம் போல் தேங்கி நின்றது. அதிலும் சில சிறுவர்கள் விளையாடினர்.
சேலம் 47-வது வார்டு பெரியார் வளைவு அருகே உள்ள அம்பேத்கர் நகரில் கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழையின் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரின் வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
மேலும் சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி சேலத்தில் களரம்பட்டி, நாராயண நகர், பஞ்சதாங்கி ஏரி, அம்மாபேட்டை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பல்வேறு இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இதை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் திடீரென சேலத்தில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. 2-வது நாளாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்த மழையினால் மணக்காடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏற்கனவே தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில், மீண்டும் மழை தொடர்ந்து பெய்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் தவித்தனர்.