Tuesday, July 3, 2018

மருத்துவ கல்வி பொது கலந்தாய்வு: முதல் 10 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்
மருத்துவ கல்வி பொது கலந்தாய்வு:
முதல் 10 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்
  மருத்துவ கல்வி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்து முதலிடம் பெற்ற 10 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு கடிதத்தை வழங்கினார்.

ஜூலை 03, 2018, 05:15 AM

சென்னை,

2018-19ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு(எம்.பி.பி. எஸ்.) மற்றும் பல் மருத்துவ படிப்பு(பி.டி.எஸ்.) ஆகியவற்றுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 40 மாணவ-மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்களை பெற்றனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கிவைத்து, முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீடு கடிதத்தை வழங்கினார். அவர்கள் அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்திருந்தனர்.

தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி அகில இந்திய இடஒதுக்கீட்டில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை தேர்வு செய்துவிட்டதால், நேற்றைய கலந்தாய்வில் அவர் பங்கேற்கவில்லை. இதேபோன்று அகில இந்திய இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்த மேலும் சிலரும் வரவில்லை.

மற்ற மாணவர்களில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகள் நேற்றைய கலந்தாய்வில் கலந்து கொண்டு அமைச்சரிடம் ஒதுக்கீட்டு கடிதத்தை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் விவரம் வருமாறு:- ஆர்.ராஜ்செந்தூர் அபிஷேக்(நீட் மதிப்பெண் 656), முகமது சுஐப்ஹசன்(644), ஆர்.எஸ்.சுப்ரஜா(613), எஸ்.சபரீஷ்(610), அனஹ நிடுகலா ஷியாம்குமா(610), ஷிரிஷ் செந்தில்குமார்(607), எம்.தினகர்(606), ஆல்பிரட் விவியன் ஆல்வின்(604), எச்.சதீஷ்(604), ஜெ.ஜோஸ்வா அஜய்(602). இதில் ஆர்.எஸ்.சுப்ரஜா, எஸ்.சபரீஷ், எம்.தினகர் ஆகியோர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது மருத்துவ கலந்தாய்வுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவின்கீழ் 40 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 7-ந் தேதி வரை பொது பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்று(நேற்று) 609 பேர் அழைக்கப்பட்டனர். நாளை(இன்று) 850 பேரும், நாளை மறுநாள்(நாளை) ஆயிரம் பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,501 மருத்துவ இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 இடங்கள் உள்ளன. மாநில பாடத்திட்டத்தில் படித்த 70 சதவீதம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மாணவர்களுக்கு 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு முடிவை அரசு ஏற்கும். இது தவிர தனலட்சுமி, ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 90 பேர் தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 29 பேருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான இருப்பிட சான்று உள்ளிட்ட 14 விதிமுறைகள் விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரித்து உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கியதன் மூலமாகவும், ஏற்கனவே உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கியதன் மூலமாகவும் இந்த இடங்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக்கு 609 பேர் அழைக்கப்பட்டிருந்ததில் 29 பேரை தவிர்த்து 580 பேர் கலந்து கொண்டனர். இதில் 572 பேர் அரசு மருத்துவ கல்லூரி இடங் களுக்கான ஒதுக்கீட்டையும், ஒருவர் சுயநிதி மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளனர். மேலும் தகுதியுடைய 7 பேர் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்று(செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...