பேட் நியூஸ்".. பேப்பர் படித்தபடி பஸ் ஓட்டிய அரசு டிரைவர்.. பயணிகள் உயிருடன் விளையாடிய விபரீதம்!
Posted By: Hemavandhana
Updated: Mon, Jul 2, 2018, 10:19 [IST]
சென்னை: நின்று கொண்டே டிரைவர்கள் பஸ் ஓட்டி பார்த்திருக்கிறோம், செல்போன் பேசியபடியே பஸ் ஓட்டியும் பார்த்திருக்கிறோம். ஏன், ஒரு கையில் பஸ் ஓட்டிகூட பார்த்திருக்கிறோம். இப்படியெல்லாம் ஓட்டினாலும் டிரைவரின் கவனமும், கண்களும் சாலையை நோக்கித்தான் இருக்கும்.
ஆனால் பல பயணிகளை வைத்து கொண்டு, பேப்பர் படித்து கொண்டே பஸ் ஓட்டி இருக்கிறார் ஒரு டிரைவர். அதுவும் சென்னை மாநகரத்தில்.
47 D. இதுதான் அந்த பேருந்து எண். ஆவடியிலிருந்து திருவான்மியூர் செல்லும் மாநகர பேருந்து. பேருந்தில் ஏராளமான பயணிகள் அமர்ந்திருந்தனர். பேருந்தும் சென்று கொண்டுதான் இருந்தது.
திடீரென அந்த டிரைவர் பஸ்ஸை ஓட்டியபடியே ஒரு செய்தித்தாளை எடுத்து விரித்து படிக்க ஆரம்பித்துவிட்டார். செய்தித்தாளை ஸ்டியரிங் மீது பரப்பி வைத்து கொண்டு படிக்க தொடங்கியதும், பயணிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதிர்ச்சியடைந்த பயணிகள், ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
டிரைவரோ ஒரு செய்தி விடாமல் படித்து கொண்டிருந்தார். எப்போது படித்து முடிப்பார் என்றும் தெரியவில்லை. இதனால் பயணிகள் டிரைவரிடம் சென்று, செய்தித்தாளை வைத்துக் கொண்டு ஓட்டுவது குறித்து கேட்டனர். ஆனால் அதற்கு பதிலளிக்காத டிரைவரோ, செய்தித்தாளை புரட்டி புரட்டி பார்த்து கொண்டிருந்தார். பயணிகளோ, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்திலும் பரிதவிப்புடனுமே பயணம் செய்தனர். இதுகுறித்து அம்பத்தூர் பணிமனையில் கேட்டதற்கு, பேருந்தை இயக்கியது யார் என விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது துறை ரீதியான விசாரணை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுமாதிரியான குற்றங்களுக்கெல்லாம் வெறும் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் சரியாகிவிடுமா என தெரியவில்லை. மனித உயிரோடு விளையாடும் எந்த காரியத்தை யார் செய்தாலும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். இதுபோன்று அலட்சியமாகவும், பயணிகள் உயிரை துச்சமாகவும் மதிக்கும் ஓட்டுனரின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையும் இணைந்து நெடுஞ்சாலைகளில் தானியங்கி காமிராவை பொருத்தி, அதனை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், அரசு பேருந்தை "நடமாடும் எமன்"களாக பொதுமக்கள் பார்க்க துவங்கிவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும்.
No comments:
Post a Comment