Tuesday, July 3, 2018

தலையங்கம்

‘ஜி.எஸ்.டி’யால் பலனா?, பாதிப்பா?




கடந்த ஆண்டு ஜூன் 30–ந்தேதி முடிந்து, ஜூலை 1–ந்தேதி பிறக்கும் நள்ளிரவில் பாராளுமன்றத்தில் ‘ஜி.எஸ்.டி’ என்று கூறப்படும் சரக்குசேவைவரி நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 03 2018, 03:30

நமது வரிவிதிப்பு முறைகளில் நேரடி வரி, மறைமுக வரி என்று இரண்டு வகையான வரிகள் உண்டு. நேரடியாக மக்கள்மீது விதிக்கப்படும் வருமானவரி, சொத்துவரி போன்ற வரிகள் நேரடி வரியாகவும், மத்திய கலால்வரி, கூடுதல் கலால்வரி, சுங்கவரி, சேவைவரி, விற்பனைவரி, கேளிக்கைவரி, நுழைவுவரி, விளம்பரவரி போன்ற பொருட்கள், சேவைகள் மீது விதிக்கப்படும் வரிகள் மறைமுக வரிகளாகவும் கருதப்பட்டன. 17 மறைமுக வரிகளையும், 23 மேல்வரிகளையும் ஒன்றாக்கி ஒரேவரியாக ‘ஜி.எஸ்.டி.’ அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஜி.எஸ்.டி’ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, இது வரி மட்டுமல்ல, பொருளாதார சீர்திருத்தம் மட்டுமல்ல, மக்களை நேர்மையாக வரிகட்டச்செய்யும் சமூகசீர்திருத்தம். ஏழைகளுக்கு பலன்தரும் திட்டம் என்று பெருமைப்படக்கூறினார்.

6 விதமான வரிவிதிப்பில் ‘ஜி.எஸ்.டி’ வகைப்படுத்தப்பட்டது. முழுமையான வரிவிலக்கு பெற்றுள்ள பொருட்கள் 0 சதவீதம் என்றும், தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் 3 சதவீத வரிவிதிப்பிலும், மற்றபொருட்கள் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற வரிவிகிதத்தின் கீழும் வரி வசூலிக்கப்படுகிறது. இதில் பல பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எடுத்துக்காட்டாக, இந்த வரிவிதிப்பிற்கு முன்பு சேவைவரி 15 சதவீதமாக இருந்தது. வரிவிதிப்பிற்கு பின் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவைவரியை 15 சதவீதமாக குறைக்க ‘ஜி.எஸ்.டி’ கவுன்சில் பரிசீலிக்கவேண்டும். இதுபோல, பெட்ரோல்–டீசல், புகையிலை, மதுபானம் போன்றவை ‘ஜி.எஸ்.டி’ வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. புகையிலைக்கும், மதுபானத்துக்கும் எவ்வளவு வரிவேண்டுமானாலும் விதிக்கலாம். ஆனால், பெட்ரோல்–டீசலை ‘ஜி.எஸ்.டி’க்குள் கொண்டுவந்து அதிகபட்ச 28 சதவீதவரியை விதிக்கலாம். ஆனால், அதற்குமேல் மதிப்புகூட்டுவரி, மேல்வரி, ஆயத்தீர்வை வசூலிக்கக்கூடாது. இந்த வருவாய் தியாகத்தை மத்திய–மாநில அரசுகள் செய்யவேண்டும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், மார்ச்வரை 9 மாதகாலத்தில், ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதை ஓராண்டுக்கு கணக்கிட்டால் ரூ.11 லட்சம் கோடி வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. ‘ஜி.எஸ்.டி’ அறிமுகப்படுத்தப்படும் முன்பு நடந்த மறைமுக வரிவசூலில் 11.9 சதவீதம் இது அதிகமாகும். இந்த ஆண்டு வசூல்தொகையை ரூ.13 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பலபொருட்களுக்கு வரியை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பொதுமக்களிடம் இருந்துவரும் நேரத்தில், ரூ.13 லட்சம் கோடியாக இலக்கை உயர்த்தியிருப்பதும், மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி என்று குறியீடு வைத்திருப்பதும் நிச்சயமாக பொதுமக்களுக்கு பலன்தருமா? என்று இப்போது சொல்லமுடியாது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.23 ஆயிரத்து 325 கோடியே 5 லட்சம் ‘ஜி.எஸ்.டி’ வசூலிக்கப்பட்டு முதல் 5 மாநில பட்டியலில் இருக்கிறது. ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு பலன்கிடைத்துள்ளதா?, பாதிப்பா? என்பது மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் செலவு குறைகிறதா?, கூடுகிறதா?, விலைவாசி உயர்கிறதா?, குறைந்துள்ளதா? என்பதையெல்லாம் பொருத்துத்தான் தெரியும்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...