கருணை மனு தள்ளுபடியை எதிர்த்த வழக்கு... நிராகரிப்பு கொலையாளிகள் இழுத்தடிப்பு தொடர்கிறது
Updated : ஜன 30, 2020 00:23 | Added : ஜன 29, 2020 22:15
புதுடில்லி : கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து, மருத்துவ மாணவி, 'நிர்பயா' கொலை வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, துாக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மற்றொரு குற்றவாளி, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதனால், திட்டமிட்டபடி, பிப்., 1ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.டில்லியில் ஓடும் பஸ்ஸில், மருத்துவ மாணவி, 'நிர்பயா', ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.
பின்னர் பஸ்ஸில் இருந்து துாக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தார். இந்த வழக்கில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஒருவன் சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தனியாக நடந்தது. அவன் மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான்.
ஒத்திகை
மற்ற ஐந்து பேர் மீதான வழக்கு தனியாக நடந்தது. அதில், ராம் சிங், திகார் சிறையில் தற்கொலை செய்தார். மற்ற குற்றவாளிகளான, முகேஷ் குமார், வினய் சர்மா, அக் ஷய் குமார், பவன் குப்தா ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம் விதித்த இந்த தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன.இவர்களுக்கான தண்டனையை, இம்மாதம், 22ம் தேதி நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரும், மாறி மாறி, புது புது வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். அதையடுத்து, பிப்., 1ம் தேதி காலை, 6:00 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற புதிதாக, வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது.இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜன., 17ல் நிராகரித்தார். இதை எதிர்த்து, முகேஷ் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுவை, நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபன்னா அமர்வு விசாரித்தது. முகேஷ் குமாரின் மனுவை தள்ளுபடி செய்து, அமர்வு நேற்று கூறியதாவது:வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.
விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், குற்றவாளியின் குடும்பம் தொடர்பான தகவல்கள் என, அனைத்து தகவல்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டு உள்ளன.ஜனாதிபதி, மிக விரைவாக தன் முடிவை எடுத்துள்ளதால், அவசரப்பட்டுள்ளார் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. ஆவணங்களின் அடிப்படையில் சரியாக ஆலோசித்தே, ஜனாதிபதி முடிவு எடுத்திருப்பார்.
மேலும், சிறையில் துன்புறுத்தப்படுவதாக குற்றவாளி கூறி வருகிறார். கருணை மனு தள்ளுபடிக்கு எதிராக வழக்கு தொடர, அதை ஒரு காரணமாக கூற முடியாது. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய மனு
இதற்கிடையே, துாக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மற்றொரு குற்றவாளியான அக் ஷய், மறுசீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கில் முகேஷ் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனு மற்றும் மறுசீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்தே, அவர் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பினார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு குற்றவாளியான வினய் குமாரின் சீராய்வு மற்றும் மறுசீராய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பவன் குமார் இதுவரை, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை.
துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதை இழுத்தடிப்பு செய்யும் நோக்கத்தில், நான்கு பேரும், ஒவ்வொருவரும் தனித் தனியாக, மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர். அதனால், திட்டமிட்டபடி, வரும், 1ம் தேதி இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
' நிர்பயா ' வழக்கில் இதுவரை நடந்தது
டிச., 16, 2012 - டில்லியில் ஓடும் பஸ்ஸில், மருத்துவ மாணவி, நிர்பயா, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்ரவதை செய்யப்பட்ட அவர் தூக்கி எறியப்பட்டார்.
டிச., 17, 2012 - நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்
டிச., 18, 2012 - ராம் சிங், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் குமார் கைது செய்யப்பட்டனர்டிச., 20, 2012 - நிர்பயாவின் நண்பர் வாக்குமூலம் அளித்தார்
டிச., 21, 2012 - வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான, சிறுவன், கைது செய்யப்பட்டார். குற்றவாளிகளில் ஒருவரான முகேஷை, நிர்பயாவின் நண்பர் அடையாளம் காட்டினார்
டிச., 22, 2012 - மற்றொரு குற்றவாளியான அக் ஷய் தாக்குர் கைது செய்யப்பட்டார். நிர்பயாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது
டிச., 25, 2012 - நிர்பயாவின் உடல்நிலை அபாயகட்டத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது
டிச., 26, 2012 - மாரடைப்பு ஏற்பட்டதால், சிங்கப்பூர் மருத்துவமனைக்கு நிர்பயா மாற்றப்பட்டார்
டிச., 29, 2012 - மருத்துவ மாணவி நிர்பயா உயிரிழந்தார். வழக்கை, கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர்
ஜன., 2, 2013 - பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, விரைவு நீதிமன்றத்தை, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் துவக்கி வைத்தார்
ஜன., 3, 2013 - குற்றம்சாட்டப்பட்ட சிறுவனைத் தவிர மற்ற ஐந்து பேர் மீது, கொலை, கூட்டு பலாத்தாரம், கொலை முயற்சி, கடத்தல், இயற்கைக்கு மாறான தாக்குதல், கொள்ளை ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
ஜன., 17, 2013 - இந்த ஐந்து பேர் மீதான வழக்கில், விரைவு நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது
ஜன., 28, 2013 - மற்றொரு குற்றவாளி சிறுவன் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சிறார் நீதி வாரியம் அறிவித்தது
பிப்., 2, 2013 - ஐந்து பேர் மீது விரைவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு
பிப்., 28, 2013 - சிறுவன் மீது, சிறார் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு
மார்ச், 11, 2013 - திஹார் சிறையில் ராம் சிங் தற்கொலை
ஜூலை, 5, 2013 - சீறார் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு, ஜூலை, 11க்கு ஒத்தி வைப்பு
ஜூலை 8, 2013 - விரைவு நீதிமன்றத்தில், அரசு தரப்பு சாட்சிகள் தரப்பு வாதங்கள் பதிவு நிறைவு
ஜூலை, 11, 2013 - இந்த வழக்கைத் தவிர மற்றொரு திருட்டு வழக்கிலும், சிறுவன் குற்றவாளி என, சிறார் நீதிமன்றம் அறிவிப்பு. வழக்கின் விசாரணை தொடர்பாக செய்தி சேகரிக்க, மூன்று வெளிநாட்டு செய்தி
நிறுவனங்களுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி
ஆக., 22, 2013 - விரைவு நீதிமன்றத்தில், நான்கு பேர் மீதான வழக்கில் இறுதி கட்ட வாதங்கள் துவங்கின
ஆக., 31, 2013 - சிறுவனை, மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க, சிறார் நீதிமன்றம் உத்தரவு
செப்., 3, 2013 - விரைவு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்தி வைப்பு
செப்., 30, 2013 - நான்கு பேரும் குற்றவாளிகள் என, விரைவு நீதிமன்றம் அறிவிப்பு
அக்., 13, 2013 - நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
அக்., 24, 2013 - விரைவு நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வழக்கின் விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தில் துவங்கியது
ஜன., 3, 2014 - மேல்முறையீட்டு வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது
மார்ச், 13, 2014 - நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது
மார்ச், 15, 2014 - முகேஷ் மற்றும் பவன் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை செயல்படுத்த தடை விதித்தது. பின்னர், மற்ற இரண்டு பேருக்கான தண்டனையை நிறைவேற்றவும் தடை விதித்தது
ஏப்., 15, 2014 - மாணவி நிர்பயாவின் மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்யும்படி, டில்லி போலீசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
பிப்., 3, 2017 - நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக முதலில் இருந்து விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் கூறியது
மார்ச், 27, 2017 - மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது
மே, 5, 2017 - நான்கு பேருக்கான தூக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது
நவ., 8, 2017 - இந்த தீர்ப்பை எதிர்த்து, முகேஷ் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்
டிச., 12, 2017 - இதற்கு, டில்லி போலீஸ் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தது
டிச., 15, 2017 - தீர்ப்பை எதிர்த்து, வினய் சர்மா, பவன் குமார் குப்தா, சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர்
மே, 4, 2018 - வினய் சர்மா, பவன் குப்தா சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது
ஜூலை, 9, 2018 - மூன்று பேரின் சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பிப்., 2019 - நான்கு குற்றவாளிகளுக்கும் தண்டனை நிறைவேற்றும், 'வாரன்ட்' பிறப்பிக்கக் கோரி, நிர்பயாவின் பெற்றோர் டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
டிச., 10, 2019 - தூக்கு தண்டனையை எதிர்த்து, அக் ஷய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
டிச., 13, 2019 - சீராய்வு மனுவை எதிர்த்து, நிர்பயாவின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டிச., 18, 2019 - அக் ஷய் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான்கு பேருக்கும் தண்டனையை நிறைவேற்றும் வாரன்ட் பிறப்பிக்கக் கோரி, டில்லி அரசு மனு தாக்கல். தங்களுக்குள்ள கடைசி சட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள குற்றவாளிகளுக்கு தெரிவிக்கும்படி, திஹார் சிறை நிர்வாகத்துக்கு, டில்லி நீதிமன்றம் உத்தரவு
டிச., 19, 2019 - குற்றம் நடந்தபோது, தான், 'மைனர்' என, பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஜன., 6, 2020 - இந்த வழக்கின் ஒரே நேரடி சாட்சி மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யக் கோரும், பவன் குமார் குப்தாவின் தந்தை தாக்க்ல் செய்த வழக்கை, டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஜன., 7 - நான்கு பேருக்கும், ஜன., 22, காலை, 7:00 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது
ஜன., 14 - வினய் சர்மா, முகேஷ் குமார் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பினார் முகேஷ் குமார்
ஜன., 17 - முகேஷ் குமாரின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார்
ஜன., 25 - கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து, முகேஷ் குமார், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஜன., 28 - வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது
ஜன., 29 - முகேஷ் குமார் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மற்றொரு குற்றவாளியான அக் ஷய் குமார், மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வினய் குமார் சர்மா கருணை மனு
கருணை மனு தாக்கல்தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் குமார் சர்மா, ஜனாதிபதிக்கு கருணை மனுவை நேற்று அனுப்பியுள்ளார்.தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில், முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஏற்கனவே நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், தூக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, வினய் குமார் சர்மா தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு மற்றும் மறுசீராய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது கடைசி வாய்ப்பாக, ஜனாதிபதிக்கு அவருடைய சார்பில், கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது.